இலங்கையின் வரலாற்றுக்கு முற்பட்டகால ஓவியங்கள் (Pre-Historic Art)

 

Sri Lankan Pre-Historic Art

மனிதன் முதன் முதலில் தனது தகவல்களைப் பேணிக்கொள்வதற்கு பயன்படுத்திய ஊடகமாக இச்சித்திரங்கள் உள்ளன. ஆதிமனிதன் வேட்டையாடுதலைப் பிரதான தொழிலாகக் கொண்டதால் வேட்டையாடுதல் பற்றிய தகவல்கள், மிருகங்கள் பற்றிய தகவல்களைச் சித்திரங்கள் மூலம் பரிமாறிக் கொண்டனர். குறியீட்டுத் தன்மை கொண்ட இச் சித்திரங்கள் மூலம் அக் கால மக்களின் அறிவு வளர்ச்சியை காணக்கூடியதாகவுள்ளது. 120 நாடுகளில் புராதன சித்திரங்களும் அது தொடர்பான எச்சங்களும் கிடைத்துள்ளன.

இலங்கையின் பல்வேறு பகுதகளிலும் அமைந்திருக்கும் இயற்கையான கற்குகைகளின் சுவர்களிலும் கூரையமைப்புகளிலும் கிறுக்கிவிடப்பட்ட உருவங்களை அல்லது ஓவியங்களை மலைக் குகை ஓவியங்கள் என்பர். இவை வரலாற்றுக்கு முற்பட்டகால பழங்குடியினரால் வரையப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.  

இலங்கையின் வரலாற்றுக்கு முற்பட்ட கால குகை ஓவியங்கள் எனப்படுவது பௌத்த சமயம் இலங்கைக்குக் கொண்டு வரப்படுவதற்கு முன்னர் கற்குகைகளில் வாழ்ந்த மக்களால் அக் கற்குகைகளின் சுவர்களில் வரையப்பட்ட சித்திரங்கள் ஆகும். இச் சித்திரங்கள் கூடுதலாக அக்கால மக்களின் வாழ்க்கை முறையோடு தொடர்புபட்ட வேட்டையாடுதல், மிருகங்கள் பற்றிய தகவல்கள், ஓய்வு நேரவிளையாட்டு, வழிபாடு போன்றன பற்றியதாகவே காணப்படுகின்றது. 

                ஆராட்சிகளின்படி இலங்கையில் பல மாகாணங்களில் குகை ஓவியங்கள் உள்ள 54 இடங்கள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவற்றுள் அதிகமான இடங்கள் அம்பாறை மொனராகலை மாவட்டத்தில் உள்ளது. அநுராதபுரம், கேகாலை, பொலனறுவை, அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலும் இவ்வகைக்குரிய ஓவியங்கள் பரவலாக உள்ளன. தந்திரிமலை, பில்லாவ, ஆண்டியாகல, திம்புலாகல, கதுறு பொக்குண, அரண்கொட கல்கே, ராஜகல்கந்த, கொனாகொல்ல, தொரவக்க, பிஹில்லேகொட, அலுகல்லே, புதுகல்கே, குடும்பிகல, விகினியாகல, மங்குல் மகா விகாரைய, ஹக்பெலிகந்த, வெட்டம்புகல, பியன்கல எனும் இடங்களும் இவற்றுள் சிலவாகும். 

                இலங்கையின் புராதன தொல்பொருட்கள் பற்றி ஆய்வுகளை மேற்கொண்ட தொல்பொருள் ஆய்வாளர் H.C.P பெல் என்பவர் ஆவார். அவர் 1897இல் ஆய்வில் ஈடுபட்டு பல்வேறு குகைச் சித்திரங்களையும் தொல்பொருட்களையும் கண்டுபிடித்தார்.

 

சித்திரக் கட்டமைப்பு:

ஓப்பமாக்கப்படாத இயற்கைக் கற்சுவர்களின் மேற்பரப்பில் சித்திரங்களை வரைந்துள்ளனர். இச் சித்திரங்களை வரைவதற்கு அந்தங்கள் நசிக்கப்பட்ட தடிகள், கூரிய கல், எலும்பு, மரப்பட்டைகள், விரல்கள் என்பன மூலம் அமர்த்தியும் தீட்டியும் வரைந்துள்ளனர். வர்ணம் தீட்டுவதற்காக கரித்துண்டு, வெண்களி, பிராணிகளின் இரத்தம், வர்ணக்கல் போன்றன உபயோகிக்கப்பட்டுள்ளன. வர்ணம் நீருடன் அல்லது பிசினுடன் கலந்து உபயோகிக்கப்பட்டுள்ளது. வெள்ளை, சாம்பல், சிவப்பு, மஞ்சள் வர்ணங்களே அதிகம் பாவிக்கப்பட்டுள்ளது. அதிலும், வெள்ளை, சாம்பல் ஆகிய வர்ணங்களே அதிகம் காணப்படுகின்றன. இரேகைகளை மையமாகக் கொண்டு ஓவியம் வரைந்தமை விசேட அம்சமாகும்.

குகைச்சித்திரங்களை இரண்டாக வகைப்படுத்தலாம். முதலாவது இயற்கை உருவங்கள், அதாவது, யானை, பறவைகள், முதலை உருவங்கள் மற்றும் மனித உருவங்கள என்பன அடங்கும். அடுத்து, இரண்டாவது வகைக்குள் அருவ வடிவங்களை குறிப்பிடலாம், சூரியன், சந்திரன், அம்பு, வில்லு போன்றவற்றைக் கூறலாம்.

இலங்கைக் குகைச் சித்திரங்களில் அதிகளவாகக் காணப்படுவது மனிதர், பிராணிகளின் சித்திரங்கள் ஆகும். யானை, புலி, சிங்கம், முதலை, மான், குரங்கு, உடும்பு, மயில் போன்ற விலங்குகளும் வில்லு அம்பு போன்ற ஆயுதங்களும் அதனுடன் மனிதர்களும் சூரியன், சந்திரன் போன்ற வடிவங்களும் உள்ளன. இவையனைத்தும் குறியீட்டு வடிவில் கோடுகளாகவும் சில வர்ணம் தீட்டியும் காணப்படுகின்றன.

ஓவியங்கள் வரையப் பயன்படுத்திய நுட்ப முறைகள்.

இரேகை வரைதல்

இரேகை முறையில் ஓவியங்களை வரைவதற்கு கறுப்பு, வெள்ளை மற்றும் கபில நிறங்கள் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆண்டியாகல, பியன்கல, ரஜகல, அலுகல்லே எனும் குகைகளில் இவ்வாறான ஓவியங்கள் உள்ளன. இரேகையால் வரையப்பட்ட ஓவியங்களுக்கு சாயம் பூசப்பட்டுள்ளது. தந்திரிமலை, பில்லாவ, அலுகல்கே எனும் குகைகளில் உள்ளன.

கற்சுவரைக் கீறி நிர்மாணிக்கும் உருவங்கள் (Engraving)

வரலாற்றுக்கு முற்பட்ட காலப்பகுதியில் ஓவியங்கள் நிர்மாணிக்கப்பட்ட பிரபல்யமான முறையாகும். விலங்குகளின் கொம்புகள், எலும்புகள் இறுக்கமான கற்றுண்டுகள் இவ்வாறான செயற்பாட்டுக்கு உபயோகிக்கப்பட்டுள்ளன. தொரவக்க, ஊராகந்த ஆகிய இடங்களில் இவ்வாறான ஓவியங்களைக் காணலாம்.

கைளால் அச்சுப்பதித்தல் (Hand Printing)

அம்பாந்தோட்டை மாவட்டத்திற்குரிய யால, மகுல்மாகா விகாரை வளாகத்தில் உள்ள கற்குகைகளின் உட்சுவரில் மஞ்சள், சிவப்பு, வர்ணங்களால் உள்ளங்கை அடையாளங்கள் சில இருக்கின்றன.

 

தந்திரிமலைக் குகைச் சித்திரங்கள்

                அநுராதபுர மாவட்டத்தில் உள்ள மகாவிலாச்சிய பகுதியில் தந்திரிமலைக் கிராமக் குகையில் காணப்படுகிறது. விலங்குகளும் மனித உருவங்களும் கோடுகள் மூலமும் வர்ணங்கள் மூலமும் வரையப்பட்டுள்ளது. இவை ஆதி மனிதனின் வேட்டை சம்பந்தமான விடயங்களைக் குறிக்கும் குறியீட்டுத் தன்மை கொண்ட சித்திரங்கள் ஆகும். இங்கு இரண்டு குகைகள் காணப்படுகின்றது.

முதலாவது குகை

உட்சுவரில் விலங்குகள், 7 மனித உருவங்கள், பல கேத்திர கணித வடிவங்கள் என்பவற்றைக் காணலாம். இதில் விலங்குகளுக்குப் பின்னால் நிற்கும் மனித உருவம் அதிக கவனத்தை ஈர்க்கின்றது. கைகளை இரு பக்கமாக வைத்திருக்கும் இந்த உருவத்தின் முகம் இடது புறமாகத் திரும்பியுள்ளது.

மான் என கருதப்படும் விலங்குடன் இருக்கும் இன்னொரு மனித உருவம் ஒன்றும் இந்தக் குகையில் உள்ளது. விலங்குகளின் உருவம் சாம்பல் நிற வெளிப்புறக் கோடுகளால் வரையப்பட்டு உட்புறம் செந்நிற புள்ளிகளைக் கொண்டது.

வெள்ளை நிறத்தினால் வரையப்பட்ட ஓடும் நிலையில் உள்ள மனித உருவம் ஒன்றும் முதலாம் குகையில் உள்ளது. அத்தோடு கையில் வில்லுடன் இடப்பக்கமாக திரும்பியுள்ள வெள்ளை நிறத்தில் வரையப்பட்ட மனித உருவம் ஒன்றும் உள்ளது. சாம்பல் நிறத்தினால் வரையப்பட்ட இரு விலங்குகளுக்குப் பின்னால் உள்ள இரு மனித உருவங்களும் உள்ளன.

இரண்டாம் குகை:

இரண்டாம் குகையின் சுவர் முழுவதும் பல குறியீடுகள் வரையப்பட்டுள்ளன. ஒன்றுக்குப் பின் ஒன்று இருக்கும் விதத்தில் வரையப்பட்ட விலங்குகள் வேறுவேறாக வரையப்பட்டுள்ளது.

கறுப்பு, சிவப்புப் புள்ளிக் கோடுகளுடன் புலி, மான் சித்திரங்களும் பசு, மயில், உடும்பு, சிங்கம், குரங்கு, முதலை, யானை போன்ற விலங்குகளும் அம்பு வில்லுடனான வேட்டைக்காரன் உருவங்களும் வரையப்பட்டுள்ளன. பிராணிகளின் உருவங்களிடையே உடும்பு எனப்படும் சித்திரம் விசேட இடத்தைப் பெறுகின்றது. மனித உருவங்களில் குழு ஒருங்கிணைப்பு எனப்படும் வீட்டின் உள்ளே இருக்கும் இரு மனிதர்களின் சித்திரங்கள் விசேடமானவை.

                இச்சித்திரங்களை வரைவதற்கு சூழலில் இருந்து பெற்றுக் கொண்ட வர்ணங்கள் உபயோகிக்கப்பட்டுள்ளது. இரேகைகளுக்கு முதலிடம் கொடுத்து சுதந்திரமாகவும் குறியீட்டுத் தன்மை கொண்டவையாகவும் வரையப்பட்டுள்ளது.

 




தொறவக்கக் (தொரவக) குகைச் சித்திரங்கள்

                இக் குகையானது கேகாலை மாவட்டத்தில் உள்ள பெலிகல் கோரளையின் தொரவக என்னும் கிராமத்தில் இக்குகை உள்ளது. 150அடி உயரத்தில் உள்ள குன்றின் மீது ஒரு பெரிய பாறை மற்றொரு பாறையுடன் சாய்ந்து தாங்கியவாறு அமைந்த இயற்கையான இக்குகையாக அமைந்துள்ளது. 65அடி நீளமுடைய இக் குகையைக் கிராமத்து வாசிகள் 'யானை கட்டப்பட்ட குகை' எனத் தெரிவிக்கின்றனர். வலகம்பா மன்னன் தனது யானையை இந்த இடத்தில் கட்டி வைத்ததாக கிராமவாசிகள் நம்புவதால் இப்பெயர் கூறப்படுகின்றது.

                1919இல் பிரௌனிங்யினால் முதன் முதலில் கண்டு பிடிக்கப்பட்டது. தொல்பொருள் ஆணையாளர் W.M விஐபால அவர்கள் முதலில் இவ்விடத்தை ஆய்வு செய்து வரலாற்றுக்கு முற்பட்ட மனிதர் வாழ்ந்ததிற்குரிய சான்றுகள் காணப்படுவதாகவும் கூறுகின்றார். இக் குகைக்குப் பக்கத்தில் கல் ஓவியங்கள் தொல்பொருட்;கள் என்பனவும் கண்டுபிடிக்கப்பட்டன. தொறவக்கக் குகையினை இலங்கைக் குகைச்சித்திர வரலாற்றில் பல சிறப்பான தனித்துவங்கள் கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது. கி.மு800–1000 வரையான காலப்பகுதிக்குரியதாக இக் குகை கணிக்கப்படுகின்றது.

                55 அடி உயரமான இக்குகையில்அடி உயரத்தில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. கடினமான கற்சுவரில் கற்களால் தோண்டி வரையப்பட்டுள்ளது. இச்சித்திரங்கள் கேத்திர கணித வடிவமைப்பைக் கொண்டு குறியீட்டு வடிவங்களாக உள்ளன. இங்கு 57 கேத்திரகணித குறியீட்டு வடிவங்கள் காணப்படுகின்றது. P.யு.சு பிரௌனிங அவர்கள் இக் குகையில் யானையும் குட்டியும் என்ற சித்திரத்தினை இனங்கண்டு கொண்டார். கற்குகையின் உட்சுவரின் இச் சித்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இங்கு உடும்பு எனப்படும் சித்திரமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர சூரியன், சந்திரன், வில்லு அம்பு, மீன் போன்ற சித்திரமும் காணப்படுகின்றது.

                சித்திரங்களுக்கு வர்ணங்கள் பயன்படுத்தப்படவில்லை. வெளிப்புறம் கோடுகளை (இரேகை) மாத்திரம் வரைந்துள்ளனர். இதனை கூரான கற்கள் மூலம் அடையாளமாக கீறியே வரைந்துள்ளனர்.

பில்லாவ குகைச் சித்திரம்

இக்குகையானது அநுராதபுர மாவட்டத்தில் வட மத்திய பிரதேசத்தில் அமைந்துள்ள மகாவிலச்சிய என்னும் பகுதியில் பில்லாவக் கிராமம் அமைந்துள்ளது. ஜோன் ஸ்டில் என்பவரினால் 1910இல் இவ் ஓவியங்கள் வகைப்படுத்தப்பட்டன. அதற்கேற்ப இக்குகையில், வீட்டுக்குள் இருக்கும் இரு மனிதர்கள், தனித்திருக்கும் இரு மனித உருவங்கள் மரையொன்றின் உருவம், மயில் எனக் கருதக்கூடிய ஓர் உருவம் என்பனவும் அடையாளம் காணப்படாத குறியீடுகளும் உள்ளன. இவ்வுருவங்களில் சில வர்ணம் தீட்டப்பட்டுள்ளது. உதாரணமாக மரையின் உருவம் வெள்ளை நிறத்தினால் தீட்டப்பட்டு;ள்ளது. இவற்றில் பல சிதைவடைந்த நிலையிலும் உள்ளன. ஜோன்ஸ்டில் என்பவரின் கருத்துப்படி இங்கு காணப்படும் முக்கியமான படைப்பு கட்டமொன்றினுள் (வீடொன்றினுள்) உள்ள இரண்டு மனித உருவங்களைக் கொண்ட சித்திரமாகும். 

மரப்பட்டை, கற்கள் கொண்டு வரையப்பட்டதாகக் கூறப்படும் இவ் ஓவியங்களில் அநேகமானவை சிதைவடைந்துள்ளன. சித்திரங்களின் கோடுகள் மெல்லியதாக ரையப்பட்டுள்ளன. இவை குழந்தைகளின் ஓவியங்களை ஒத்ததாகவே காணப்படுகின்றது என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.



பட்டதொம்ப குகைச் சித்திரம்

பௌத்த சமயத்தினர் இக்குகையை தெய்வக்குகை என்றும் அழைப்பர். ஏனெனில் புத்தர் ஆதாம் மலையில் தனது காலடியைப் பதித்த பின் இக்குகையிலேயே இளைப்பாறிச் சென்றார் என நம்பப்படுகின்றது.

                சப்பிரகமுவா மாகாணத்தில் குறுவிட்ட என்ற நகரிலிருந்து 5 KM தொலைவிலுள்ள சுதகல என்னும் இடத்தில் உள்ளது. கி.மு 8000 ஆண்டுக்கு முற்பட்ட காலத்து வாழடவியற் சான்றுகளைக் கொண்ட இக்குகையின் உயரம் 15 மீற்றரும் அகலம் 18 மீற்றரும் நீளம் 25 மீற்றரும் ஆகும். இங்கு வரலாற்றுக்கு முற்பட்ட கால மனிதர்கள் உபயோகித்த பொருட்கள் ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இங்கு ஓவியங்கள் காலத்தால் அழிவடைந்து தெளிவற்ற நிலையில் உள்ளது. இங்கும் விலங்குருவங்கள் குறியீட்டு வடிவில் வரைந்துள்ளமைக்கான அடையாளங்கள் உள்ளன. ஆனாலும் இதைப் பற்றிய கூடுதலான தகவல்களைப் பெறக்கூடியதாக இருக்கவில்லை.

வெட்டம்புகல குகைச் சித்திரம்

அம்பாறை மாவட்டத்தின் சியம்பலாண்டுவ பிரதேசத்தில் கிவுலேயாய எனும் கிராமத்தில் இக்குகை அமைந்துள்ளது. இது 40 மீற்றர் நீளமுடையது. இதன் உட்சுவர் முழுவதும் பல வடிவங்களிலான மனித உருவங்கள், விலங்குருவங்கள், கேத்திர கணித வடிவங்கள் காணப்படுகின்றன. ஏராளமான உருவங்கள் இங்கு வரையப்பட்டுள்ளன. இவற்றுள் யானைகளின் உருவங்கள் அதிகம் உள்ளன.

யானைகளின் எல்லா உருவங்களும் வெள்ளை சாம்பல் மஞ்சள் சிவப்பு சார்ந்த வர்ணங்களைக் கொண்டுள்ளன. இவை தடிப்பாகப் பூசப்பட்டுள்ளது. சில வர்ணங்கள் வேறொரு வர்ணத்துடன் கலந்து காணப்படுவது சிறப்பாகும். இவ்வாறு வர்ணம் தீட்டப்பட்ட ஓவியங்களுக்கு வெளிப்புறக் கோடுகள் வரையப்படவில்லை. இரு தந்தங்கள் கொண்ட யானை உருவம் சிறப்பானது இவ்வுருவத்திற்கு சிவப்பு சார்ந்த மஞ்சள் வர்ணம் தீட்டப்பட்டுள்ளது. ஒரு யானையின் காலின் பாதம் தெளிவாக வட்டமாக வரையப்பட்டுள்ளது. இது வெண்மை நிறத்தைக் கொண்டது.

கேத்திரகணித வடிவங்களுள் இயற்கையாக நீர் நிரம்பிய இடங்களை வரைந்துள்ள விதம் தெளிவாக உள்ளது. சாம்பல் நிறப் புள்ளிகள் மூலம் நீர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இது காட்டில் இயற்கையாக நீர் நிரம்பிய இடங்களை காட்டில் வாழும் குழுக்களுக்கு தெரியப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு வரையப்பட்டதாக இருக்கலாம். இரேகைகளால் வரையப்பட்ட இவ்வுருவங்கள் வெள்ளை, சாம்பல் எனும் வர்ணங்களைக் கொண்டுள்ளன. விரல்களால் அல்லது தடித்த கம்புகளால் வரையப்hட்டுள்ளது. வெள்ளை நிறத்தினால் வரையப்பட்ட அம்பு, வில் என்ற உருவமும் காணப்படுகின்றது. மானெனக் கருதப்படும் உருவமொன்று உள்ளது. அதன் கொம்புகள் தெளிவாக வரையப்பட்டு;ள்ளது. அது சிவப்பு சார்ந்த மஞ்சள் நிறத்தில் உள்ளது.




வீடியோ விளக்கம்: 

உசாத்துணைகள்
நவரத்தினம்.க, இலங்கையின் கலை வளர்ச்சி, 1954, ஈழகேசரி பொன்னையா நினைவு வெளியீடு, பக் 50-53.
ஆசிரியர் வழிகாட்டி தரம் 12

சுற்குணராஜா.ஏ, இலங்கைக் கலை, 2013, எஸ் பதிப்பகம், பக் 161-165.







கருத்துகள்