வர்ணங்கள் (நிறங்கள்) பற்றி அறிவோம்

ஒரு சித்திரம் முழுமை பெற வேண்டுமென்றால் வர்ணங்கள் மிக முக்கியமானவை. வர்ணங்கள் தீட்டுவதனால் சித்திரமானது கவர்ச்சிமிக்கதாக அமைகிறது, அத்துடன் வரையப்பட்ட கருப்பொருளினை திறம்பட வெளிப்படுத்திக் காட்டுவதற்கும் வர்ணம்; முக்கியமானது. வர்ணம் ஒரு மொழி அதன் மூலம் எண்ணங்களையும், உணர்வுகளையும் வெளிப்படுத்திக் காட்ட முடியும். எனவே ஒரு சித்திரத்திற்கு வரணம் தீட்டுதல் மிக முக்கியமான செயற்பாடாகும். 

வர்ணங்களை இரண்டாக வகைப்படுத்தலாம். 

1.         அடிப்படை வர்ணங்கள் அல்லது மூலவர்ணங்கள்

2. துணைவர்ணங்கள் அல்லது கலப்பு வர்ணங்கள் என வகைப்படுத்தலாம். 

அடிப்படை வர்ணம் அல்லது மூலவர்ணங்களாக இந்த மூன்று வர்ணங்களான சிவப்பு மஞ்சள் நீலம் ஆகியன காணப்படுகின்றன. இம்மூன்று வர்ணங்களும் பல சிறப்புப் பொருந்தியதால் இவற்றை பல பெயர்களில் அழைப்பர். இந்த மூலவர்ணங்களில் இருந்து தான் ஏனைய வர்ணங்கள் தோன்றுவதனால் இதனை முதன்மை வர்ணம் எனவும் ஆரம்ப வர்ணம் எனவும் அடிப்படை வர்ணம் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த 3 வர்ணங்களையும் பெறுவதற்கு எந்த வர்ணத்துடன் கலந்தும் நீங்கள் பெறமுடியாது. இதனால் இவை கலப்பற்ற தூய்மையாக இருப்பதால் தூய வர்ணங்கள் என அழைக்கப்படுகிறது. 


வர்ணச்சக்கரம்


மேலே உள்ளதை வர்ணச்சக்கரம் என அழைப்பார்கள். இந்த சக்கரத்தில் உள்ள முக்கோணத்தில் மூலவர்ணங்களான சிவப்பு மஞ்சள் நீலம் ஆகியன உள்ளன. இந்த மூன்று வர்ணங்களையும் ஒன்றுடன் ஒன்று கலந்து மேலும் மூன்று வர்ணங்களைப் பெறப்பட்டுள்ளது. இதிலே சிவப்பையும் மஞ்சளையும் கலந்தால் செம்மஞ்சள் நிறத்தினைப் பெற்றுக்கொள்ளலாம். மஞ்சள் வர்ணத்தையும் நீல வர்ணத்தையும் கலந்து பச்சை வர்ணம் கிடைக்கும். நீல வர்ணத்தையும் சிவப்பு வர்ணத்தையும் கலப்பதால் ஊதா நிறத்தைப் பெற்றுக் கொள்ளலாம். 

இவ்வாறு கலந்து பெற்றுக் கொண்ட வர்ணங்களைத்தான் கலப்பு வர்ணங்கள் எனவும் துணைவர்ணங்கள் எனவும் அழைப்படுகிறது. 

மூலவர்ணங்களை முதன்நிலை வர்ணங்கள் எனவும் அதிலிருந்து உருவாகிய கலப்பு வர்ணங்கள் அல்லது துணை வர்ணங்களை இரண்டாம் நிலை வர்ணங்கள் எனவும் அழைக்கப்படுகிறது. 

பொது வர்ணங்கள்

இவற்றில் பொது வர்ணங்கள் என அழைக்கப்படும் இரண்டு வர்ணங்கள் கறுப்பு மற்றும் வெள்ளை ஆகியன வாகும். கறுப்பு வர்ணம் ஒரு வர்ணத்தை கடும் நிறமாக்குவதற்கும் வெள்ளை வர்ணம் ஒரு வர்ணத்தின் மென்மை நிறத்தைப் பெறுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
உதாரணமாக சிவப்பு வர்ணத்துடன் கறுப்பினை சேர்க்கும் போது கடும்சிவப்பும் வெள்ளை சேர்க்கும் போது மென்மையான இளஞ்சிவப்பு(ரோஸ்) நிறமும் உருவாகுவதினை அவதானிக்கலாம். இதனை வர்ணப்பலம் என அழைக்கப்படும். 
இவ்வாறு பெறப்படும் வர்ணங்கள் மூலம் ஒரு பொருளுக்கான ஒளிநிழலையும் முப்பரிமாணத்தையும் காட்ட முடிகிறது. ஆகவே இந்த கறுப்பும் வெள்ளையும் எல்லா வர்ணத்திற்கும் பொதுவாக தேவைப்படுவதால் பொதுவர்ணங்கள் என்று அழைக்கப்படுகிறது. 

கபிலவர்ணம்.
இந்த கபில வர்ணத்தினைப் பெறுவதற்கு இரண்டு முறைகள் உள்ளன. முதலாவது கபில வர்ணத்தைப் பெறுவதற்கு மூல வர்ணங்கள் மூன்றையும் கலந்தால் தான் பெற்றுக் கொள்ள முடியும். இரண்டாவது முறை பச்சை வர்ணத்துடன் சிவப்பைக் கலந்தும் கபில வர்ணத்தைப் பெறமுடியும். ஏனென்றால் பச்சை வர்ணம் நீலம் மஞ்சள் ஆகிய இரண்டு மூலவர்ணங்களையும் கலந்து வருவதனால் மிகுதியாக இருக்கும் சிவப்பு வர்ணத்தைக் கலக்கும் போது கபில வர்ணத்தைப் பெற முடியும். 
கபிலவர்ணம். இந்த கபில வர்ணத்தினைப் பெறுவதற்கு இரண்டு முறைகள் உள்ளன. முதலாவது கபில வர்ணத்தைப் பெறுவதற்கு மூல வர்ணங்கள் மூன்றையும் கலந்தால் தான் பெற்றுக் கொள்ள முடியும். இரண்டாவது முறை பச்சை வர்ணத்துடன் சிவப்பைக் கலந்தும் கபில வர்ணத்தைப் பெறமுடியும். ஏனென்றால் பச்சை வர்ணம் நீலம் மஞ்சள் ஆகிய இரண்டு மூலவர்ணங்களையும் கலந்து வருவதனால் மிகுதியாக இருக்கும் சிவப்பு வர்ணத்தைக் கலக்கும் போது கபில வர்ணத்தைப் பெற முடியும்.
 
இந்த வர்ணங்கள் அனைத்தையும் இரு பண்புகள் அடிப்படையில் பிரிக்கலாம். 
1. வெப்ப வர்ணங்கள் 
2. குளிர் வர்ணங்கள். 

வெப்ப வர்ணங்கள் என்றால் முன்செல்லும் தன்மை கொண்டவை அதாவது எமது கண்ணுக்கு பிரகாசமாக தெரியக்கூடியவை. ஏனென்றால் இந்த வர்ணங்களில் ஒளிபடும் போது தெறிப்படைவது அதிகம். இவ்வாறான வர்ணங்களாக சிவப்பு, மஞ்சள், செம்மஞ்சள் மற்றும் வெள்ளை வர்ணத்தையும் குறிப்பிடலாம். 
இந்த வகையான வெப்ப வர்ணங்களின் பாவனையை நாம் எமது அன்றாட வாழ்வில் காண முடியும். உதாரணமாக வாகனங்களின் சிக்னல் லைட், பிறேக்லைட் போன்றவையும் அம்புலன்ஸ் , வைத்தியசாலை குறியீடு மற்றும் வீதி சமிக்கைகள், பாதசாரிகடவை போன்றவற்றில் தூர உள்ள வாகனங்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக வெப்ப வர்ணங்களான சிவப்பு,மஞ்சள், செம்மஞ்சள் ஆகிய வர்ணங்களை உபயோகிக்கின்றனர். 

குளிர் வர்ணங்கள் 
இத்தகைய வர்ணங்கள் பின்செல்லும் இயல்புகளைக் கொண்டவை. அதாவது பிரகாசமற்றவை ஒளியை உறிஞ்சிக்கொள்ளும். ஆனால் குளிர்மையானவை ஓவியங்களில் பின்ணணி வர்ணத்திற்கு உபயோகிக்கக்கூடிய வர்ணங்களாகக் இந்த குளிர்வர்ணங்கள் காணப்படுகிறது. இந்த வகை வர்ணங்களாக நீலம், பச்சை, ஊதா ஆகியன காணப்படுகின்றது. இதற்கு உதாரணமாக கடல் வானம், புல்வெளி, பச்சை மரங்கள் போன்றவற்றைக் குறிப்பிடலாம். 

வர்ணங்கள் பற்றிய இந்த அலகிற்கான வீடியோ பாட அலகினைப் பார்ப்பதற்கு கீழே கிளிக் செய்யுங்கள்

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Super best notes
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Very easy for study
Keep it up