இந்து நதிக்கரை நாகரிகம் (Hindu valley civilization)

 

இந்து நதிக்கரை நாகரீகத்தின் வரலாற்றுப் பின்னணி

    உலகில் நதிக்கரைகளை அண்டியே நாகரீகங்கள் தோற்றம் பெற்றன. இந்தவகையில், பண்டைய இந்தியாவில் வடக்கில் இருந்து தெற்காக ஓடி அரபிக் கடலில் கலக்கும் சிந்துநதியின் கரையினிலே தோற்றம் பெற்று சிறந்து விளங்கியது சிந்துநதிக்கரை நாகரீகம். இந்த நாகரீகமானது கி.மு 3250 – கி.மு 2750இற்கு இடைப்பட்ட காலத்தில் சிறந்து விளங்கியதாக இதனை ஆய்வு செய்த தொல்பொருள் ஆய்வாளர்களில் ஓருவரான சேர் ஜோன் மார்ஷல் கருதுகின்றார். எனினும், றேடியோ காபன் தினக்கால முறையைப் பயன்படுத்தி அண்மையில் நடாத்திய ஆய்வின்படி இந்நாகரீகம் கி.மு 2500 – கி.மு 1500 இற்கும் இடைப்பட்டது என இந்திய தொல்பொருள் ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். மனிதன் செப்பு,கல் இரண்டையும் பயன்படுத்திய காலமே செப்புக்கற்காலம் ஆகும். இச்செப்புக்கற்காலத்தில் இருந்த சிந்துவெளி நாகரீகமே இந்திய நாகரீகத்தின் பொற்காலமாகும்.

    இந்நாகரீகம் சிந்துநதிக்கரையில் இருந்து மிக நீண்ட தூரம் வரை பரவி இருந்துள்ளது எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மிகப் பிரமாண்டமான பதின்மூன்று லட்சம் சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டது. இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளிலும் தற்போது பரவிக்காணப்படுகின்றது. பாகிஸ்தானின் பஞ்சாப், சிந்து மாநிலங்களிலும், இந்தியாவின் குஐராத், ராஐஸ்தான், உத்தரப்பிரதேசம், காஷ்மீர் ஆகிய மாநிலங்கள் உட்படுத்தி ஆப்கானிஸ்தான் வரையும் முக்கோண வடிவில் சுமார் 12,99600 சதுர கிலோமீற்றர் வியாபித்துள்ளது. இங்கு சுமாராக இரண்டரை லட்சம் மக்கள் வாழ்ந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

    இவற்றினை ஆராய்ந்து பார்க்கும் போது இந்நாகரீகம் மொசப்பத்தேமியா, எகிப்த்து போன்ற புராதன வரலாற்றுக்குரிய உயர்தரமான நாகரீகங்களுக்குச் சமனாக தரத்தைக் கொண்டதென கூறலாம். சிந்துவெளிக்கு முற்பட்ட ஒரு நாகரீகம் இந்தியாவில் எங்கும் கண்டுபிடிக்கவில்லை. எத்தனையோ நாகரீகங்கள் காலவோட்டத்தில் எச்சங்கள் இன்றி அழிந்து போனாலும் சிந்துவெளி நாகரீகம் தற்போதும் அழிந்து விடாது கம்பீரமாக நிற்கிறது. 

         சிந்துவெளி நாகரீகத்தின் 1000இற்கும் மேலான இடங்கள் மிக விசாலமான நிலப்பரப்பில் பரந்து காணப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமான இரு பெரும் நகரங்களான மொகஞ்சதாரோவையும் ஹரப்பாவையும் கூறலாம். இவ்விரு நகரங்களையும் மையமாகக் கொண்டு 60 இற்கும் அதிகமான நகரங்கள் இருந்ததாக இனம்காணப்பட்டுள்ளது. மொகன்சதாரோ இந்துநதியின் களிமுகத்தில் இருந்து 250 மைல்கள் மேற்புறமாகவும், ஹரப்பா 400 மைல்கள் மேற்புறமாக இந்து நதியின் கிளையாறாகிய ரவீ நதிக்கு அருகில் அமைந்துள்ளன.    

         மொகஞ்சதாரோ என்றால் ஹிந்தி மொழியில் 'இறந்தவர் மேடு' என அர்த்தம். ஹரப்பா என்றால் 'புதையுண்ட நகர மேடு' எனவும் பொருள்படும். இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் தனி நாடாகப் பிரிந்து சென்ற போது இவ்விருநகரங்களும் பாகிஸ்தானின் நிலப்பரப்புக்குள் சென்றுவிட்டது. தற்போது மொகஞ்சதாரோ பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திலும் ஹரப்பா மேற்குப் பஞ்சாப்பிலும் காணப்படுகின்றது. இவ்விரு நகரங்களுக்கும் இடைப்பட்ட தூரம் 480 கிலோ மீற்றர் (300மைல்) ஆகும். 

    1920ஆம் ஆண்டு ஹரப்பா என்ற பழைய நகரம் மண்ணுக்கடியில் புதைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கல்லறை ஒன்றும், மட்பாண்டங்களும், விலங்குகளின் எலும்புகளும், சில முத்திரைகளும் இங்குக் கிடைத்தன. எம்.எஸ்.வாட் (M.S.Watt) என்னும் அறிஞர் ஹரப்பாவின் அகழ்வாய்வுகள்என்னும் நூலில் இந்த நகரத்தின் சுற்றளவு 4Km எனவும், இங்கு ஆறு பெரிய மண்மேடுகள் உள்ளன. இவற்றில் பெரியது 29,000 செ.மீ. நீளமும், 23,000 செ.மீ. அகலமும், 1,800 செ.மீ. உயரமும் உடையது. இந்த மண்மேடுகள் எட்டு அடுக்குகளைக் காட்டுவதாகவும் அதாவது இவை எட்டுமுறை புதுப்பித்து கட்டப்பட்ட நகரம் என்பதை இந்த அடுக்குகள் காட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். கி.மு.3,500 - கி.மு. 2,750க்கும் இடைப்பட்ட காலத்தின் நாகரிகம் என்று இதனைக் கருதுகிறார்.

சிந்து வெளியில் வாழ்ந்தோர் பெரும்பாலானவர் வணிகர்கள். மேற்காசிய நாடுகளோடும், காஷ்மீர், மைசூர், நீலகிரி, ராஜபுதனம் போன்ற உள்நாட்டுப் பகுதிகளோடும் அவர்களுக்கு வாணிகத் தொடர்பிருந்துள்ளது. தங்கம், செம்பு, தகரம், வெள்ளி, விலையுயர்ந்த கற்கள் ஆகியவற்றை அவர்கள் இறக்குமதி செய்தனர்.

இவ்வாறு இருந்த நாகரீகமானது கடைசியாக எவ்வாறு மறைந்து போனது என்பதற்கு அறிஞர்கள் பல்வேறு காரணங்களை ஊகிக்கின்றனர். 

கடுமையான நில நடுக்கம் சிந்து சமவெளிப் பகுதியையே அழித்திருக்கலாம்.

சிந்து நதியில் பெருவெள்ளம் வந்து நிலப் பிரதேசத்தை மூழ்கடித்திருக்கலாம்.

சிந்து, யமுனை, சட்லெஜ் ஆகிய நதிகளின் போக்குகள் மாறி> வறட்சி வந்திருக்கலாம்.

அருகில் இருக்கும் ராஜஸ்தான் போன்ற பகுதிகள் பாலைவனங்கள். இயற்கை மாற்றங்களால், சிந்து சமவெளிப் பகுதியும் பாலைவனமாகியிருக்கலாம்.

கைபர் கணவாய் வழி வந்த ஆரியர்கள் உள்ளூர் மக்களை ஈவு இரக்கமின்றி ஒழித்துக்கட்டியிருக்கலாம். அகழ்வாராய்ச்சிகளில் வாள், ஈட்டி, கத்தி போன்ற ஆயுதங்கள் ஒன்றுகூடக் கிடைக்கவில்லை. எனவே, நிராயுதபாணிகளான சிந்து சமவெளியினர் ஆரியர்களிடம் தோற்றதும், காணாமலே போனதும், ஆச்சரியமான விடயங்கள் அல்ல.

பெரும் தொற்று நோய்க்கு மக்கள் பலியாகியிருக்கலாம்.

எவ்வாறெனினும், எதற்கும் திட்டவட்டமான பதில்கள் கிடைக்கவில்லை.


சிந்துவெளி நாகரீக ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்ட விதம்

1856ம் ஆண்டு கராச்சிக்கும் லாகூருக்கும் இடையேயான புகையிரதத் தண்டவாளப் பாதையினை அமைக்கும் பொருட்டு கிழக்கிந்திய ரயில்வே கொம்பனி Nஐhன் மற்றும் வில்லியம் என்ற இரண்டு பொறியியலாளர்களை அப்பகுதிக்கு அனுப்பினார்கள். 

கட்டுமானத்திற்காக செங்கற்கள் தேவைப்பட்டன. இதற்காக பிரமணாபாத், ஹரப்பாலு என்ற ஊர்களில் இருந்து தரமான நீண்ட பழங்காலச் செங்கற்கள் தோண்டி எடுக்கப்பட்டு கொண்டு வரப்பட்டன. இவை மறைந்து போன சிந்துவெளி நாகரீகத்திற்குரியவை என்பது அவர்களுக்குத் தெரியாது. இவை ரயில் பாதை அமைக்கப் பயன்படுத்தப்பட்டன. 

இதே சமயம் 1921-1922ம் ஆண்டு சேர் ஜோன் மார்ஷல் என்னும் தொல்பொருள்துறைப் பணிப்பாளர் சிந்துவெளி நாகரீகம் பற்றிய ஆய்வைச் செய்துகொண்டிருந்தார். இதற்கு மேற்பார்வையாளராக இருந்தவர் ராக்கல்தாஸ் பனார்ஜி (R.D  பனார்ஜி) ஆவார். இவர்களிடம் இத்தகவல் தெரிவிக்கப்பட்ட போது ஹரப்பாவிலும் ஆராய்ச்சிகள் தொடங்கப்பட்டது. அகழ்வாராய்ச்சியைப் புதிய உத்வேகத்தோடு தொடர்ந்தார் பானர்ஜி.

தோண்டத் தோண்ட 60 அடி ஆழத்தின் கீழ் சரித்திரச் சுவடுகள் கிடப்பதனைக் கண்டுபிடித்தார். தன் மேலதிகாரி சேர் ஜோன் மார்ஷலிடம் பானர்ஜி விவரங்களைத் தெரிவித்தார். மொகஞ்சதாரோ, ஹரப்பா ஆகிய இரு இடங்களிலும்  கண்டுபிடிக்கப்பட்ட மண் சாமான்கள், கட்டடங்களின் சிதைவுகள் ஆகியவற்றில் ஒற்றுமை இருப்பதை சேர் ஜோன் மார்ஷல் உணர்ந்தார். மொஹஞ்சதாரோவுக்கும் ஹரப்பாவுக்கும் தொடர்பு இருக்கிறது என்பது அவர்களுக்குப் புரிந்தது. இதைப் போன்ற நகரங்களின் இடிபாடுகள் சான்குதாரோ, கலிபங்கன், லோத்தல் போன்ற வேறுபல இடங்களிலும் கண்டெடுக்கப்பட்டன. 

பானர்ஜிக்கும், மார்ஷலுக்கும் முன்னதாகவே, பல ஆராய்ச்சியாளர்கள் மொஹஞ்சதாரோ, ஹரப்பா  பகுதிகளில் ஆர்வம் காட்டியிருக்கிறார்கள். 1826 ல் சார்ல்ஸ் மேஸன்  என்னும் பிரிட்டீஷ் ராணுவ அதிகாரி, 'மொஹஞ்சதாரோ பகுதியில்> பூமிக்கடியில் செங்கற்களால் கட்டப்பட்ட கோட்டைகள் இருப்பதாகத் தெரிகிறது' என்று குறிப்பு எழுதினார். அவர் அகழ்வியல் ஆராய்ச்சியாளரல்ல. எனவே, அவர் கருத்து அதிகக் கவனத்தை ஈர்க்கவில்லை.

அதுவரை, கங்கை சமவெளியில்தான் நாகரிகம் உருவாகி வளர்ந்ததாக நம்பப்பட்டு வந்தது. பானர்ஜியின் அறிக்கைகளின் அடிப்படையில், இந்திய நாகரிகத் தொட்டில் சிந்து சமவெளிதான் என்று உணரப்பட்டது. உலகின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் இந்தியாவின் வடமேற்குப் பகுதிக்கு வந்து குவிந்தனர். தொடர்ந்து 1931, 1944, 1947 ஆகிய ஆண்டுகளில் பல தொல்பொருள் ஆய்வுக் குழுக்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டன. அவர்களது ஆராய்ச்சியில் இன்னும் பல ஊர்கள் தோண்டியெடுக்கப்பட்டன.  ஏறக்குறைய கி.மு 6000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி கி.மு. 2500 - 1700ல் செழிப்பின் உச்சத்தில் இருந்த சிந்து சமவெளி நாகரிகம் வெளிச்சத்துக்கு வந்தது.

இங்கு கண்டு பிடிக்கப்பட்ட பொருட்களையும், எழுத்துக்களையும் ஆராய்ந்தவர்கள் இங்கு வாழ்ந்த மக்கள் சிறந்த நாகரிகம் உள்ளவர் எனவும், இவர்களே இந்தியாவின் தொல்குடியினர் எனவும்> உலகில் உள்ள மற்ற இனத்தவர்களுடன் இவர்கள் தொடர்புகளுடன் வாழ்ந்தனர் எனவும் கூறியிருக்கின்றனர். இதைவிட இச்சான்றுகளில் இந்து மதச்செல்வாக்கு காணப்படுவதையும் அவதானித்தனர். உலகில் உள்ள நாகரிகங்களுட் சிந்துவெளி நாகரிகமே தலையானது என இவ் அகழ்வாரய்வின் பின் உலகம் உணரத் தொடங்கியது. 

இன்று வரை 1,052ற்கு மேற்ப்பட்ட நகரங்களும் குடியிருப்புக்களும் காணப்பட்டதாக அறியப்பட்டுள்ளது. இவைகள் ஹர்க்கா – கக்கார் ஆற்றிற்கு இடைப்பட்ட பகுதிகளிலும் ஹரப்பா – மொஹஞ்சதாரோ, லொதல், டொலவிரா, கங்வேரிவெல, கலிபங்கா மற்றும் றக்கிஹாரி ஆகிய பகுதிகளிலும் அமைந்திருந்துள்ளது.

மொஹஞ்சதாரோ, ஹரப்பா ஆகிய இடங்களில் கிடைத்த பல்வேறு அகழ்வாராய்ச்சி ஆதாரங்கள் அனைத்துக்கும் ஒரு பொதுத்தன்மை இருக்கிறது. இவை அத்தனையும் ஒரே நாகரிகத்தின் சின்னங்கள்தாம் என்பதை இந்தப் பொதுத்தன்மை நிரூபிக்கிறது.  களிமண் சாமான்களை உருவாக்குதல், செங்கல் தயாரித்துக் கட்டடங்கள் கட்டுதல், நகர நிர்வாகம், குடியிருப்பு அமைப்புகள் போன்ற துறைகளில் அன்றைய சிந்து சமவெளியினர் தேர்ச்சி பெற்றிருந்தார்கள் என்பதை இந்த ஆதாரங்கள் சந்தேகமே இல்லாமல் நிரூபிக்கின்றன. 

நகரத்திட்டமிடலும் குடியிருப்பும்

புராதன நாகரீகங்களின் பெருமையையும், சிறப்பையும் எடுத்துக் காட்டுவன கட்டிடங்களே ஆகும். இதனால், கட்டிடங்கள் நாகரிகத்தி;ன் கருப்பை என அறிஞர்கள் கூறுகின்றனர். சிந்துநதிக்கரை மக்களின் கட்டிடங்களில் இருந்து அவர்களின் நகரமைப்பானது மிகவும் சிறப்பாகத் திட்டமிட்டு பாதுகாப்பு மற்றும் சுகாதார சம்பந்தமான விடயங்களில் கவனம் செலுத்தப்பட்டு அமைக்கப்பட்டமையினைக் காணக்கூடியதாகவுள்ளது. 


வீடுகளும் வீட்டுத்தொகுதிகளும் கிணற்றிலிருந்து நீர் பெறும் முறையும், தனியாக குளிப்பதற்கான அறையும் அதிலிருந்து வெளியேறும் கழிவு நீரினை அகற்ற மூடப்பட்ட வடிகால்களும் வீதிக் கரையோரங்களில் காணப்பட்டன. வீடுகளின் வாசற் கதவுகள் சிறு வீதிகளின் முகப்பை நோக்கி அமைக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து இக்கட்டிட அமைப்புக்கள் சத்தங்கள்> துர்நாற்றம் உட்செல்ல முடியாமலும் கள்வர்களிடமிருந்து பாதுகாக்கும் நோக்கிலும் அமைக்கப்பட்டிருந்தமை அறியக்கூடியதாகவுள்ளது.  எனவே, நகரங்கள் ஓவ்வொன்றும் கட்டிடக்கலை வல்லுனர்களால் திட்டமிடப்பட்ட பின்னரே கட்டப்பட்டன என்பது புலனாகின்றது. இதனை ஒரு ஆராச்சியாளன் இன்றைய நியுயோர்க் நகர அமைப்புடன் ஒப்பிடுகின்றார்.

சிந்துவெளி நாகரிகத்தில் சிக்கல் தன்மை வாய்ந்த உயர்நிலை நகர்சார் பண்பாடு காணப்பட்டுள்ளது. இந்து நதிக்கரை நாகரிகத்தில் பல்வேறு விடயங்களுக்காக விசேட நகரங்கள் கட்டப்பட்டிருந்துள்ளது. இவற்றிற்கு நிர்வாக மத்திய நிலையமாகவும் குடியேற்றமாகவும் இருந்தது மொகஞ்சதாரோ, ஹரப்பா என்னும் இரு பெரும் நகரங்கள் ஆகும். இவற்றுடன் காலிபங்கன் கைத்தொழில் நகரமாகவும், லோத்தல் வணிகநகரமாகவும் இனங்காணப்பட்டுள்ளது. இவை நகர ஆட்சி முறையைக் கொண்டிருந்ததாக கருதப்படுகிறது. 

நகரங்கள் உள்நகரம் வெளிநகரம் என சுவர்கள் கட்டி பிரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புக்காக நகரம் இரண்டு பகுதிகளாக்கப்பட்டு இருந்துள்ளது. பொதுவாக நகரின் வடபகுதி குறுகலாகவும் உறுதியாகவும் இருந்தது. நகரின் கிழக்குப் பகுதி விரிந்தும் சற்றுத் தாழ்ந்தும் இருந்துள்ளது. ஒன்று தரைமட்டத்தில் உள்ளதும் மற்றையது செயற்கையாக உருவாக்கப்பட்ட மேடு போன்ற பகுதியும் ஆகும். உயரமான பகுதியை கோட்டை அல்லது அக்ரோபோலிஸ் என அழைப்பர். இவற்றிற்கு பிரதான நுழைவாயில் ஒன்றும் இருந்துள்ளது. 

உயரத்தில் அமைந்த உள்நகரத்தில் (கோட்டை) நிர்வாக ரீதியான பொதுக்கட்டிடங்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்று கூடும் இடம், வணக்கத்தலம், பொதுக் குளியல் தடாகம், களஞ்சியம், ஆளும் வர்க்கத்தினரின் வீடுகள் என்பன அமைந்திருந்தன. நிர்வாகக்கட்டிடங்கள் மதில்கள் பிரதானிகளின் மாடி வீடுகள் சுட்ட செங்கற்களினால் கட்டப்பட்டிருந்துள்ளது. 

தாழ்வாக அமைந்த வெளிப்புற நகரத்தில் பொதுமக்களின் வீடுகள் இருந்துள்ளது. எகிப்த்திய, மெசப்பத்தேமிய நாகரிகங்களில் அரசமாளிகைகளும் மிகப்பெரிய கட்டிட அமைப்புக்களாகக் கட்டப்பட்டிருப்பினும் பொது மக்கள் சிறிய குடிசைகளிலேயே வாழ்ந்தார்கள். ஆனால் சிந்துவெளியில் மக்கள் வசதியாகவும் மிகநேர்த்தியாக அமைக்கப்பட்ட குடியிருப்பிலும் வாழ்ந்துள்ளனர். 


வீதிகள்

வீதிகள் கிழக்கு மேற்காகவும், தெற்கு வடக்காகவும் அமைக்கப்பட்டிருக்கின்றன. தென்கிழக்குப் பருவக்காற்று வடகிழக்குப் பருவக்காற்று என்பவற்றைக் கவனித்தே நல்ல காற்றோட்டத்தை பெறுவதற்காக இவ்வாறு வீதிகள் அமைக்கப்பட்டுள்ளன. பெரு வீதிகளை சிறு வீதிகள் ஒரே நேராக செங்கோணத்தில் வெட்டிச் செல்கின்றன. பெரிய வீதிகளின் அகலம் ஏறக்குறைய 33 அடியாகும். மூன்று வண்டில்கள் அருகருகாகச் செல்லும் வசதியுடையது. சிறிய வீதிகள் 12 – 18 அடி வரை அகலமுள்ளதாகும். இதன் இரு புறங்களும் பாதசாரிகள் நடந்து செல்வதற்குரிய பாதைகள் உள்ளன. எல்லா வீதிகளுக்கும் இணைப்புக்கள் இருக்கின்றன. அனைத்து வீதிகளும் வளைவு நெளிவு இன்றி நேரானவையாக காணப்படுகின்றன. மேற்படி தெருக்களின் ஓரங்களில் வீடுகள், கடைகள், தொழிற்சாலைகள் என்பன இருந்திருக்கின்றன. சில வீதிகள் செங்கற்களைக் கொண்டும் உடைந்த மட்பாண்ட துண்டுகளைக் கொண்டும் கெட்டிப்படுத்தப்பட்டுள்ளது. 

கழிவுநீர் வடிகால் அமைப்பு

நீர் முகாமைத்துவம் வடிகாலமைப்பை சிந்துவெளி மக்கள் சுகாதார ஒழுங்கு முறைப்படி நகர அமைப்பில் பேணப்பட்டன. பண்டைக்காலச் சிந்து வெளியின் செல்வாக்குக்கு உட்பட்ட எல்லா நகரப் பகுதிகளிலும் காணப்பட்ட கழிவு நீரகற்றல் மற்றும் வடிகால் அமைப்பு முறைகள், சமகால மத்திய கிழக்கு நகரங்களில் காணப்பட்டவற்றிலும் திறன் மிக்கவையாக இருந்தது மட்டுமன்றித் தற்கால இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் உள்ள சில பகுதிகளில் காணப்படுபவற்றிலும் சிறந்தவையாகவும் காணப்பட்டன.

நீர் வடிந்தோடும் வடிகால்கள் செங்கல்லால் சாந்து பூசாமல் கட்டப்பட்டு உள்ளன. இவற்றினைக் கட்ட ஒரு பக்கம் வழுவழுப்பான செங்கல் பாவிக்கப்பட்டுள்ளது. வடிகால் செங்கல்லால் மூடப்பட்டு அதன் மேல் நடைபாதை போடப்பட்டுள்ளது. இவ்வடிகாலமைப்பு பிரதான வீதிகளில் ஆழமானதாகவும் குறுக்கு வீதிகளில் ஆழம் குறைவாகவும் காணப்படும். வடிகால்கள் 9-12 அங்குலம் ஆழமும் 9 அங்குலம் அகலமும் கொண்டவை ஆகும். வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மண்குழாய்களினூடாக குறுக்கு வீதிகளின் வடிகால்களுடனேயே தொடுக்கப்பட்டிருந்துள்ளது. குறுக்கு வீதி வடிகால்கள் பிரதான வீதி வடிகாலுடன் இணைக்கப்பட்டிருந்தன. 

வீட்டு கழிவுநீர் வடிகாலுடன் தொடுக்கும் இடத்திலும், குறுக்கு வீதி வடிகால் பிரதான வீதி வடிகாலுடன் இணையும் இடத்திலும் சதுரவடிவில் வடிகட்டல் தொட்டி ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இதனுள் ஓட்டை போடப்பட்ட மண்தாழி ஒன்று வைக்கப்படும். குப்பைகள் கூழங்கள் வடிக்கப்பட்டு நீர்மட்டும் கடலை சென்றடையும். இதனால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு நீர் தேங்காது. மூடப்பட்ட வடிகாலின் இடை இடையே திறந்து துப்பரவு செய்வதற்கு மரத்திலோ அல்லது கருங்கல்லினாலோ மூடிகள் இடப்பட்டுள்ளது. இவை வீதிகள் முடியும் இடத்திலும் வடிகால்கள் வளைந்து செல்லும் இடத்திலும் அமைக்கப்பட்டிருக்கும்.

வீதிகள் தண்ணீர் தெளிக்கப்பட்டு இறுக்கமாகப் பேணப்பட்டுள்ளது. வீதிகளில் மூன்று அல்லது நான்கு வீடுகள் தள்ளி குப்பைத் தொட்டிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதனால் சிந்துவெளி மக்கள் சுகாதாரத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தினை அறியமுடிகிறது. 

சிந்துவெளிக் கட்டிடக்கலை அம்சங்கள்

வீடமைப்பு

சிந்துவெளிக் கட்டிடங்கள் ஆடம்பரமோ, ஆலங்காரமோ அற்றவை. இவர்கள் கலை நுணுக்கங்களை விட பயன்பாட்டு நோக்கத்திற்கும் தேவையும் கருதியே கட்டிடங்களை அமைத்தனர். சிந்துவெளியில் கட்டப்பட்ட வீடுகள் பலவகையாகக் காணப்பட்டது. பொதுமக்கள் வீடுகள், பெரிய வீடுகள், மாடிகள் கொண்ட மாளிகைகள் போன்றனவாகும். இவை பருமனில் வேறுபட்டதாயினும் ஏறத்தாழ ஒரே மாதிரியான திட்டத்திலேயே அமைந்துள்ளது. 

பொதுமக்கள் வசிக்கும் வீடுகள் ஒரே அமைப்பைக் கொண்டன. இவை திட்டமிட்டு ஒழுங்கு நிரல்படி வரிசை வரிசையாக அமைக்கப்பட்டிருந்துள்ளது. ஒரு வீட்டுத் தொடரில் 10 முதல் 12 வீடுகள் அமைந்திருந்தன. ஒவ்வொரு வீட்டிலும் விறாந்தை, சமயலறை, அறை என்பன அமைந்திருந்தன. வீடுகளின் வாயில்கள் சிறிய வீதிகளிலும் வீட்டின் பின்னாலும் அமைக்கப்பட்டன.

 வீடுகள் தனியாகவோ அல்லது வேறு அயல் வீடுகளுடன் கூட்டாகவோ பொதுக் கிணறுகளில் இருந்து நீர் பெற்றனர். கழிவு நீர், வீடுகளில் இருந்து, தெருக்களில் அமைக்கப்பட்டிருந்த மூடிய கால்வாய்கள் மூலமாக வெளியேற்றப்பட்டது. இதே போல் பொது மலசலகூடமும் காணப்பட்டது.  

பெரிய வீடுகள் நாற்சார் அமைப்புடைய வீடுகளாகவே இவை காணப்படுகின்றன. இவை நடுவில் முற்றத்தைக் கொண்டது. முற்றத்தைச் சுற்றி அறைகள் அமைந்துள்ளன. யன்னல்கள் அனைத்தும் நடுவில் உள்ள நாற்சார் முற்றத்தை நோக்கியவாறே அமைக்கப்பட்டுள்ளது. வீதியை நோக்கியவாறு யன்னல்கள் அமைக்கப்படவில்லை. குளிப்பதற்குத் தனியான அறைகள் ஒதுக்கப்பட்டிருந்துள்ளது. காற்றோட்ட வசதிக்காக யன்னலும் வீட்டுக் கதவும் மிகஉயரமாக அமைக்கப்பட்டுள்ளது. வீட்டுக்கதவுகள் வீதியோரத்திலும் வீட்டின் பின்புறமாகவும் இரண்டு மட்டுமே உள்ளது. 

மாடி வீடுகள் இரண்டு அல்லது மூன்று அடுக்குகள் கொண்டவை. இவை பெரிய கூடங்கள், அகன்று நீண்ட தாழ்வாரங்கள், அகன்ற முற்றங்கள், பல விசாலமான அறைகள்> இணைந்த குளியல் அறைகள், பெரிய வாயில்கள் என்பனவற்றுடன் கூடியது. இவற்றின் மேல் மாடங்களில் படுக்கையறைகள் உள்ளன. மேல் மாடங்களின் தரைப்பகுதியினை அமைக்கும் போது மரத் தீராந்திகளை இட்டு அதன் மேல் நாணற் பாய்களைப் பரப்பி அப்பாய்களின் மீது களிமண் சாந்தைக் கனமாகப் பூசி அமைக்கப்பட்டுள்ளது. அடுக்கு மாடிக்கு செல்வதற்கு படிகள் கட்டப்பட்டுள்ளது. சில இடங்களில் மரத்தாலும் படிகள் செய்துள்ளனர். இவ்வீடுகளில் சமுதாயத்தின் மேல் மட்ட மக்கள் வாழ்ந்துள்ளனர்.    

இக்காலத்திற்குரிய கட்டிடங்கள் அனைத்தும் உலர்ந்த, சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டவையாக உள்ளது. இரு பெரும் நகரங்களில் ஒரிடத்திலேனும் கற்களால் கட்டப்பட்ட கட்டிடத்தைக் காண முடியவில்லை. குடியிருக்கும் வீடுகள்> பொதுக்கட்டிடங்கள், மாளிகைகள் யாவும் குறிப்பிட்ட நியம அளவுள்ள தரமான சுட்ட செங்கற்கள் பயன்படுத்தியுள்ளனர். சிந்துவெளி கட்டிடங்களின் உட்சுவர்கள் காயவைத்த உலர்செங்கற்களாலும் வெளிச்சுவர்கள் மழை> வெயிலால் பாதிக்கப்படுவதால் சுட்ட செங்கற்களாலும் கட்டப்பட்டுள்ளது. உட்சுவர்களுக்கும், தரைக்கும், கூரைக்கும் களிமண்ணுடன் சுண்ணாம்பு, மணல், ஜிப்சம் ஆகியன கலந்த சாந்தினால் மிகவும் அழகான முறையில் அழுத்தமாகப் பூசப்பட்டுள்ளது. 

அநேகமாக சுவர்கள் 3½ அடி முதல் 6 அடி வரை தடிப்பானவை. சுவரின் உயரமானது 18அடி முதல் 25அடி வரையில் வேறுபடுவதைக் காணமுடிகின்றது. இவ்வாறு உயரமான சுவர்கள் காணப்படுகின்றமையே இங்கு மாடி வீடுகள் இருந்திருக்கலாம் என்பதை உறுதிப்படுத்துகின்றது. வீட்டின் நிலத்திற்கு செங்கல் பதிக்கப்பட்டுள்ளது. 

பெரிய வீடுகளின் வாசலானது 3அடி அகலமும், 7அடி உயரமுமானது. சாதாரண வீடுகளின் வாசல்கள் 5 அடி உயரமானது. பெரிய வீடுகளில் தானியக்களஞ்சிய அறையும், வீட்டு வேலையாட்களுக்கான அறையும் இருந்துள்ளது. வீடுகளில் தனியான சமயலறையும் இச் சமயலறைகளில் மெசப்பத்தேமியாவை ஓத்த அடுப்புக்களும் உள்ளன. இவற்றுடன் சில வீடுகளில் கால்நடைகளைக் கட்டுவதற்கான தனியிடமும் உள்ளது.

சில வீடுகள் ஏனையவற்றிலும் பெரியவையாகக் காணப்பட்ட போதிலும், பொதுவாக இவற்றின் அமைப்பு, சிந்துவெளி நகரச் சமுதாயம் பெருமளவுக்கு ஒரு சமத்துவச் சமுதாய அமைப்பைக் கொண்டு விளங்கியமையையே காட்டுகிறது.

எகிப்திய கட்டிடங்களின் ஆடம்பரமோ, சுமேரிய கட்டிடங்களின் அலங்காரமோ சிந்துவெளிக் கட்டிடங்களில் காணப்படாவிடினும் இவை பயன்பாட்டு நோக்கத்திற்காகவும் தேவையும் கருதியே அமைக்கப்பட்டுள்ளமை அறியக்கூடியதாகவுள்ளது. 


நீர்த்தடாகம் 

சிந்துவெளி நாகரீக பொறியியலாளர்களின் நீர் முகாமைத்துவம் நவீன காலத்திற்கு ஏற்றால் போல் அமைந்துள்ளமையை இந்த நீர்த்தடாக நிர்மாணிப்பின் மூலம் அறிந்து கொள்ள முடியும். சிந்துவெளி மக்களிடையே மிகச் சிறந்த சுகாதார வசதிகள் காணப்பட்டமைக்கு ஆதாரமாக கழிவுநீர் வாய்க்காலை அடுத்து நீர்த்தடாகத்தினைக் கூறலாம். இந்த நீர்த்தடாகமானது உட்புற நகரத்தின் மத்தியில் அமைக்கப்பட்டுள்ளது. நீள்சதுரமாக அமைக்கப்பட்டுள்ள இத்தடாகத்தின் இரு பக்கமும் உள்ளே இறங்க படிகள் கட்டப்பட்டுள்ளது. இதன் நீளம் 39 அடியாகவும் அகலம் 32 அடியாகவும் ஆழம் 8 அடியாகவும் காணப்படுகிறது. குளத்தின் சுவர் 4 அடியாகும். உடை மாற்றுவதற்காக இதன் மூன்று பக்கமும் மொத்தமாக எட்டு அறைத் தொடர்கள் காணப்படுகிறன.  

தடாகத்தின் அடித்தளம் நீரைத்தேக்கி வைப்பதற்காக சுட்ட செங்கற்களும் வழுவழுப்பான ஒருவகை நிலக்கீலும் கொண்டு தளவரிசை இடப்பட்டுள்ளது. இந்த அடித்தளக் கற்கள் நெருக்கமாகப் பதிக்கப்பட்டுள்ளது. தடாகத்தின் நாற்புறமும் செங்கல்லால் சுவர்கட்டியுள்ளனர். இதன் அருகில் காணப்படும் மேட்டு நிலத்தில் உள்ள கிணறுகளில் இருந்து நீரை இறைத்து தடாகத்திற்கு விட்டுள்ளனர். கிணற்றிலிருந்து தடாகத்திற்கு 'அக்விடக்ட்' எனும் நீர்ப்பாசன முறை மூலம் நீர் பெறப்பட்டுள்ளது. தடாகத்தின் மூலையில் நீரை வெளியேற்ற வில்வடிவிலான குழாய் விடப்பட்டுள்ளது. அது வடிகாலுடன் இணைக்கப்பட்டுள்ளது.

சிந்துவெளியில் மொகஞ்சதாரோவில் காணப்படும் பெரும்குளியல் தடாகமே சிறப்பானது. இதனை கிரேட்பாத் என அழைப்பர். இதனை ஜோன் மார்ஷல் 1925 இல் கண்டுபிடித்தார். இவை சமய அனுஷ்டானங்களுக்கு மதகுருமாரால் பாவிக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. 

தானியக் களஞ்சிய அறை

தானியங்களைக் களஞ்சியப்படுத்திய பாரிய கட்டிடங்கள் இரு நகரங்களிலும் காணப்படுகிறது. இவை கோட்டைப் பகுதியில் நிலமட்டத்தில் இருந்து உயரமான மேடையின் மேல் அமைக்கப்பட்டுள்ளது. இவை ஓவ்வொன்றினதும் நீளம் 150அடியும் அகலம் 75 அடியும் ஆகும்;. சுவர்கள் 52அடி உயரம் 9 அடி அகலமும் உடையன. மொகஞ்சதாரோவில் உள்ள இந்த களஞ்சியமே மிகப் பெரிய கட்டிடமாகும். வெள்ளப்பாதிப்பு ஏற்படாதபடி செங்கல்லால் மேடை அமைக்கப்பட்டு அவற்றின் மீது களஞ்சிய மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு வரிசையிலும் ஆறு களஞ்சிய மண்டபங்கள் வீதம் இரு வரிசைகளாக 12 களஞ்சியங்கள் கட்டப்பட்டிருக்கின்றது. செங்கல்லால் கட்டப்பட்டுள்ள ஒவ்வொரு மண்டபத்தினுள்ளும் மூன்று நெடும் சுவர்கள் எழுப்பப்பட்டு நான்கு அறைகள் போலப் பிரிந்து உள்ளது. அடியில் பலகைகள் பரப்பப்பட்டு அதன் மீது தானியங்கள் குவிக்கப்பட்டன என்பர். 

சுட்ட செங்கற்களால் ஆன இவ் அறைகள் ஹரப்பாவிலும் கண்டுபிடிக்கப்பட்டது. இக் களஞ்சியக் கட்டிடங்கள் ஹரப்பாவில் 6 காணப்படுகிறது. ஹரப்பா களஞ்சியங்களின் தென்புறத்தே வட்ட வடிவான செங்கல் மேடைகளைக் கொண்ட பள்ளங்கள் உள்ளன. இவை தானியங்களைப் போரடிப்பதற்கு பயன்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. 

சிந்து வெளியில் காணப்பட்ட தானிய அறைகள் தானியங்கள் பழுதடைந்து போகாமல் அளவான வெப்பம் உள்ளவாறு அமைக்கபட்டிருந்தது. காற்றோட்டமும் வெளிச்சமும் கிடைக்கும் படியாக அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. இம்மண்டபங்கள் தானியங்களைக் கொட்டி வைக்க பயன்பட்ட களஞ்சியங்கள் என்பது ஆய்வாளர்களின் கருத்து. எனவே> அக்காலத்தில் பெரும் வணிகர்கள் வாழ்ந்துள்ளனர் என்பதும் இவர்கள் பிற நாடுகளுடன் கடல் வழி வியாபாரத்தில் ஈடுபட்டிருந்திருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.   

மயானங்கள்

பொதுக் கட்டிட அமைப்பில் மாயானங்களும் காணப்படுகிறது. 1946இல் சேர் மோட்டிமர் உவீலர் ஹரப்பாவில் தம் ஆராய்ச்சிகளைத் தொடங்கும் வரை, இம்மக்கள் இறந்தோர் உடலை எவ்வாறு அடக்கம் செய்தனர் என்பது பற்றி உறுதியாக அறியமுடியாதிருந்தது. ஆயினும், பின்னர் ஓர் இடுகாடு கண்டுபிடிக்கப்பட்டு சுமார் 57 பிணக்குழிகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் இறந்தோர் உடலைப் புதைப்பதே இவர்களது வழக்கம் என அறிய முடிந்தது. ஹரப்பா மக்கள் இறந்தவர் உடலத்துடன் அவர்களின் பாவனைப் உடைமைகள் அணிகலங்களையும் சேர்த்து புதைத்தமைக்கான அடயாளங்கள் உள்ளன. 

இந்து நதிக்கரை நாகரீகத்திற்கு உரித்தான கலை ஆக்கங்கள்

இந்துநதிக்கரை மக்களின் முத்திரைகள்

சிந்துவெளி நாகரீகத்தின் சிறப்பானதும் வித்தியாசமானதுமான கலைப்படைப்பாக காணப்படுபவை இந்த இலட்சினைகள் அல்லது முத்திரைகள் ஆகும். வணிகர்கள் இதனை வியாபாரத் தேவைக்காக பயன்படுத்தியிருக்கலாம் எனவும், சமய சார்பான விடயங்களுக்கு தாயத்தாக (நோய்களை குணப்படுத்த) உபயோகிக்கப்பட்டிருக்கலாம் எனவும், சொத்துரிமையைக் குறிப்பதாக அமைந்திருக்கலாம் எனவும் குடிமக்கள் தலைவர்கள், படைவீரர், பூசகர்கள் போன்றவர்களுக்கு அனுமதிப் பத்திரமாக(பாஸ்) பயன்பட்டிருக்கலாம் எனவும், ஆய்வாளர்கள் நம்புகின்றனர். இதுவரை இந்து சமவெளியில் 2000 இற்கும் மேற்பட்ட முத்திரைகள் கண்டெடுக்கப்பட்டிருப்பதனால் குடிமக்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு இலட்சினையை வைத்திருந்திருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது என இந்திய வரலாற்றுப் போதனாசிரியர் ஏ.எல்.பசாம் குறிப்பிடுகிறார். 

இம்முத்திரைகள் சதுரமாக, செவ்வகமாக, வட்ட வடிவமாக, நீள்வட்ட வடிவமாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.  இவற்றை ஸ்டிடைட் (தீற்றைற்று) எனப்படும் ஒரு வகைப் பட்டுக்கல் கொண்டு செய்யப்பட்டு நேர்த்தியான சித்திரம் பொறித்துள்ளனர். பின்னர் சூழையில் இட்டு வன்மையாக்கியுள்ளனர். சிலவற்றை களிமண்ணில் செய்து சூளையில் இட்டுள்ளனர். இதைவிட வெள்ளி, செம்பு>, யானைத்தந்தம் போன்றவற்றையும் இதற்கு ஊடகமாக உபயோகித்துள்ளனர்.  

முத்திரைகள் 500இற்கு மேற்பட்ட வகையில் காணப்படுகிறது. இவற்றில் பலவித எருதுகளைக் காண முடியும் திமிலுடன் கூடிய எருது, திமில்காளை, ஒற்றைக் கொம்பு எருது (யுனிகொன்) அவற்றுடன் யானை, புலி, காண்டா மிருகம், வெள்ளாடு, உடும்பு, யானை, முயல், மான், பாம்பு, புறா, மரம் மற்றும் மனித உருவங்களுடன் கற்பனை கலந்த உருவங்களும் இதில் காணப்படுகிறது. இவற்றிடையே நேர்த்தியாக அமைந்த எழுத்து வடிவங்களும் உள்ளன. இவை குவிவாக மற்றும் குழிவான விதத்திலும் செதுக்கப்பட்டுள்ளது. இவ் எழுத்து வடிவங்களின் பொருளினை இக்கால ஆராட்சியாளர்களால் கூட இதுவரை வாசித்து அறியமுடியவில்லை. இவை சுமேரிய, எகிப்திய, சைபீரிய நாட்டு எழுத்துக்களுடன் தொடர்புபட்டது. இவை ஒரே மூலத்தில் இருந்து பிரிந்தவையாக இருக்காலம் என ஹவுன்டர் என்னும் அறிஞர் கூறியுள்ளார்.  

சிந்துவெளி மக்கள் மிகப் பெரிய கலைப்படைப்புக்களை படைக்காவிடினும் சிறியளவிலான இந்த இலட்சினைகளில் அவர்களின் கலைத்திறமை வெளிப்படுத்தியிருப்பதைக் காணமுடியும். அதில் பொறிக்கப்பட்ட விலங்குருவங்கள் அவற்றின் மெய்யியல்புகள் வெளிப்படுமாறு சித்தரித்துள்ளனர். 

இங்கு கண்டெடுக்கப்பட்ட முத்திரைகள்: 

பூமாதேவி என அழைக்கப்படும் ஒருகையால் நிலத்தையும் மறு கையால் வயிற்றையும் தொடும் உருவம்.

அமர்ந்திருக்கும் உருவத்தை இருபக்கமும் நின்று வணங்குதல்.

அரசமரத்தின் நடுவில் ஒரு கொம்புள்ள தேவதை அதனை இன்னோர் தேவதை வணங்குதல்.

புலியின் உடலோடு கூடிய தேவதை.

ஆட்டின் உடல் புலியின் உருவத்தைக் கொண்ட இரு முத்திரைகள்.

பல மனிதர்களுடன் சண்டையிட்டு வெற்றிக் களிப்புடன் நிற்கும் எருமை. 

தலையில் கொம்புடன் மனித உடல் எருதின் வால் கொண்ட கற்பனை உருவம். 

கொம்புத் தெய்வமும் கொம்புக் கடவுளும் சண்டையிடுதல்.

பலிகொடுப்பதற்கு ஆடுகளுடன் காணப்படும் மனிதர்.

காட்டுக்கோழிகள் சண்டையிடுதல்.

மூன்று வகையான தலையுடைய ஒரு கற்பனை விலங்கு. 

முத்து சிவன் அல்லது கொம்புக்கடவுள். 

இந்த முத்திரை ஆக்கங்களினூடாக இந்து நதிக்கரை மக்களின் வளர்ச்சி பெற்ற கலை ஆக்கத்திறன், எழுத்தாற்றல், கலை போன்றே சமய, பொருளாதார மற்றும் சமூகமயத் தகவல்கள் வெளிக்காட்டப்படுகிறது.


யோகாசன தெய்வ உருவம் 

(கொம்புடைய கடவுள்/பசுபதி முத்திரை)

சிந்துவெளி இலட்சினைகளில் மிகவும் சிறந்ததாக மதிக்கப்படுகிறது. இது மாக்கல்லில் செய்யப்பட்டுள்ளது. மத்தியில் சிறு மேடை மீது அமர்ந்து யோகாசன நிலையிலுள்ள மனித உருவம் உள்ளது. இதன் தலையின் மேல் இரு கொம்புடன் கூடிய தலையணி உள்ளது. முன்பக்க முகத்தைத் தவிர இருபக்கமும் இரு முகங்கள் உள்ளன. இந்த உருவத்திற்குப் பின்ணணியில் காண்டாமிருகம், எருமை மாடு, யானை மற்றும் புலி போன்ற மிருகங்கள் காணப்படுகின்றன. அவற்றுடன் எழுத்து வடிவங்களும் உள்ளன. இந்த யோகாசன உருவம் அமர்ந்திருக்கும் ஆசனத்திற்கு கீழ் இரண்டு மான்களின் உருவங்களைக் காணமுடிகின்றது.

கொம்புக்கடவுள் உருவம் மூன்று இலட்சணைகளில் காணப்படுகிறது. இவற்றில் இரண்டு இலட்சினையில் அவ்வுருவம் ஒரு கற்பீடத்தில் அமர்ந்துள்ளது போலவும் ஒன்றில் நிலத்தில் அமர்ந்துள்ளது போலவும் காணப்படுகிறது. ஆனால்> மூன்றிலும் இந்திய யோகிகள் அமரும் ஆசனமுறையில் குதிக்கால்கள் இரண்டும் ஒன்றையொன்று தொடுமாறு கால்களை மடித்து அமர்ந்துள்ளது. உடலில் உடையின்றி கழுத்தில் அணிகலனுடன் உள்ளது. 

பீடத்தின் மீது அமர்தல், தியானநிலை, தலையில் கொம்பும் செடி போன்ற அமைப்பும் காணப்படல், சுற்றியுள்ளவர் வணங்குதல், மிருகங்கள் புடை சூழ அமர்ந்திருத்தல் போன்றவற்றைப் பார்க்கும் போது இது ஒரு தெய்வத்தைக் குறிப்பதாக ஆராய்சியாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். மேலும், சிந்துவெளி ஆய்வில் ஈடுபட்ட சேர் ஜோன் மார்ஷல் இது சிவபெருமானின் பசுபதி மூர்த்தத்தைப் புலப்படுத்துவதால் (உயிர்களின் அதிபதி) இதனை முத்துசிவன் என அழைத்தார்.   


விருட்ச தேவதை 

(கடவுள்> அடியார்கள் மற்றும் ஆடு)

இந்த முத்திரையின் ஒரு முனையில் வில் வடிவில் வளைந்த மரத்தின் மேல் கொம்புடைய பெண் நிற்கும் ஒரு உருவம் உள்ளது. அதனை மற்றொரு உருவம் வணங்குகிறது. அந்த உருவத்திற்கு மறுபுறத்தில் அதனைப் பார்த்தபடி ஒரு கொம்புடைய ஆட்டின் உருவம் பெரிதாகக் காட்டப்பட்டுள்ளது. முத்திரையின் கீழ்ப்பகுதியில் கூந்தலைப் பின்னிவிட்ட பெண்கள் ஏழு பேர் பணிவிடைபுரிய வரிசையாக காத்து நிற்பது போன்றும் உள்ளது. இந்த முத்திரை விருட்ச தேவதைக்காகச் செய்யப்பட்ட பூசையொன்று பற்றிய ஒரு அடையாளம் எனக் கருதப்படுகிறது. 


இரு புலிகளுடன் போராடும் மனிதன்

ஒரு மனிதன் புலியெனக் கருதப்படும் இரு மிருகங்களுடன் போராடும் சந்தர்ப்பம் இதில் பிரதிபலிக்கின்றது. முத்திரையின் மத்தியில் மனித உருவமும் இருபக்கமும் பின் கால்களில் நிற்கும் புலிகள் இரண்டினையும் காண முடிகிறது. மனிதன் கைகளை இருபக்கமும் விரித்து மிருகங்களைத் தடுப்பது போல் உள்ளது. 

இந்து நதிக்கரைச் சிற்பங்கள்

முண்டப்படிவம் (கவந்த உருவம்)
ஹரப்பாவில் இருந்து 800 மனித உருவங்களும் 300 விலங்குருவங்களும் கிடைத்துள்ளன. இவற்றில் தலை, கால்களற்ற இரு முண்டத்தின் உருவங்கள் மிகவும் உயர்தரமானவையாக காணப்படுகின்றன. உடல் உறுப்புகளின் தசைகள் உயிரோட்டத்துடன் காட்டப்பட்டுள்ள விதத்தைப் பார்க்கும் போது, உயிர் உருவங்களை ஆக்குவதில் ஹரப்பா கலைஞர்கள் திறமையுள்ளவர்களாக இருந்துள்ளமை அறிய முடிகிறது. 'நான் இவைகளை முதலில் பார்த்த போது இவை முற்பட்ட வரலாற்றுக்குரியவை என்று நம்ப முடியவில்லை. புராதன காலத்து கலைகள் பற்றி நாம் கொண்டிருந்த கருத்துக்களை அடியோடு மாற்றிவிட்டன. இத்தகைய வடிவமைப்பை கிரேக்க ஹெலனெஸ்ரிக் காலத்தைத் தவிர வேறெங்கும் காணமுடியாது' என சேர் ஜோன் மார்ஷல் வியந்து கூறியுள்ளார். 

செம்மணற்கல் மனித முண்டம்



ஹரப்பாவில் கண்டெடுக்கப்பட்ட கை,கால்கள் அற்ற முழுப்புடைப்புச் சிற்பமாகும். மனித உடலின் அழகை மிக மென்மையாகவும், நுட்பமாகவும் காட்டும் முண்ட மனித உருவம். சிந்துவெளி நாகரீகத்தின் உயர்தரத்தை உடைய ஒரு கலை ஆக்கமாகும். கிரேக்க ஆக்கங்களில் காணப்படுகின்ற மேன்மைச் சிற்ப இயல்புகள் காணப்படுகிறது. 
இச்சிற்பத்தில் தசைகளின் இயல்புகளைச் சிறப்பாக வெளிக்காட்டப்பட்டுள்ளது. 4''அங்குலம் (10சென்றி மீற்றர்) உயரத்தைக் கொண்ட இச்சிலை சிவப்பு நிற சுண்ணாம்புக் மணற் கல்லில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இச்சிற்பத்தின் மூலம் கட்டுமானமான ஆண் ஒருவருடைய உடல் இயல்பு வெளிக்காட்டப்பட்டுள்ளது. நிர்வாணமாகக் காணப்படும் இவ்வடிவம் சிவனுடைய மூலக்காட்சி நிர்மாணிப்பு எனக் கருதப்படுகிறது. ஏனெனில், இச்சிற்பத்திற்கு நான்கு கைகள் இருந்ததற்குரிய சான்று காணப்படுகின்றமையாகும். தலை, கைகள், கால்கள் காணப்படவில்லை. தலையும், கை, கால்களும் வேறுவேறு பகுதிகளாக செய்யப்பட்டு பொருத்தப்பட்டு உள்ளமை தெரிகின்றது. இப்பகுதிகளை இணைத்துக் கொள்வதற்காகத் துளைகள் பயன்படுத்தப்பட்டுள்ளதைக் காணக்கூடியதாகவுள்ளது. தற்போது புதுடில்லி தேசிய நூதனசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

நடனமாடும் வடிவ சாம்பல் மணற்கல் முண்டப்படிமம்

ஹரப்பாவில் இருந்து கிடைக்கப் பெற்ற இந்த முண்ட மனித உருவம் சாம்பல் நிற மணற் கல்லினால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 10 சென்ரி மீற்றர் உயரத்தைக் கொண்டது. இடது காலை மேலாகத் தூக்கியவாறு நடன நிலையிற் காணப்படுகிறது. எனவே இது சிவபெருமானின் நடன வடிவத்தை வெளிப்படுத்தும் நடராஜர் வடிவம் பிரதிபலிப்பதாக ஆய்வாளர் பிகொட் குறிப்பிடுகிறார். உரோம சிற்பங்களில் காணப்படும் இயற்கையான பண்புகள் இந்த முண்டத்தில் வெளிப்படுகிறது.

நடனமாது உருவம்


கலை விமர்சகர்களின் அவதானத்திற்கு உட்பட்ட ஆக்கங்களிடையே ஹரப்பாவில் இருந்து கிடைக்கப்பெற்ற வெண்கலத்தினால் நிர்மாணிக்கப்பட்ட நடன மாதின் உருவச்சிலை பிரதான இடத்தைப் பெறுகின்றது. சிந்துவெளி கலைஞர்கள் பொன், வெள்ளி, செம்பு, வெண்கலம், ஈயம், காரியம் ஆகிய உலோகங்களை பயன்படுத்தினர். இவர்கள் மிகுதியாக பயன்படுத்தியவை செம்பும் வெண்கலமும் ஆகும். இரு உலோகங்களைத் தக்க முறைப்படி சேர்த்துப் புதிய உலோகம் செய்யவும், பொருட்களைச் செய்வதற்கான உலோக வார்ப்புத் தொழில்நுட்பத்திறன் பெற்று இருந்ததற்கும் வெண்கலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்த நடனமாதின் வடிவம் சிறந்த ஒரு சாட்சியாக அமைகிறது. 

உலோக வார்ப்பு முறையில் முழுப்படைப்பாக ஆக்கப்பட்டுள்ள இதன் உயரம் 4½அங்குலமாகும். பெண் உடலின் நளினத் தன்மை சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பாதி மூடிய கண்கள், கோபம் கொண்ட உடல்நிலையில் நின்று கொண்டு ஒரு கையை இடையின் மீது வைத்து, மறு கை சிறிது மடக்கி காலின் மீது வைக்கப்பட்டுள்ளது. கூந்தலை வாரி ஒப்பனை செய்தபடி இருக்கும் மெலிந்த உடல்வாகுடன் கூடிய நிர்வாணமான இப்பெண் உருவச் சிலையானது மிகுந்த கலைச் சிறப்புடையது. கழுத்தில் மூவிதழ் கொண்ட மாலை ஒன்றும், இருகைகளிலும் நிறைந்த வளையல்களும் அணியப்பட்டுள்ளதால் அக்காலத்தில் ஆபரணங்கள் அணிந்தமைக்குச் சிறந்த சான்றாகும். சிற்பத்தின் மூலம் ஆலயத்தில் நடனமாடும் பெண் காட்டப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது. தற்போது புதுடில்லியில் உள்ள தேசிய தொல்பொருட்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.  

பூசகர் உருவம்




பூசகர் உருவம் மொகஞ்சதாரோ நகரத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடலின் மேற்பகுதி காட்டப்பட்டுள்ளது. உயிர்ப்பான ஒருவரைச் சித்தரிப்பதற்கு முயற்சி எடுக்கப்பட்டுள்ளமையைக் காணமுடிகிறது. 17½ சென்ரிமீற்றர் உயரமான சிலையாகும். வெள்ளைச் சுண்ணாம்புக் கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. இது பூசகர் உருவாகும் என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. உடலின் ஒரு பக்கத்தை மூடியுள்ள சால்வை, தட்டையான மூக்கு, தடித்த உதடுகள், ஒடுங்கிய நெற்றி, பாதி வழிக்கப்பட்ட தலை, தியான நிலை காட்டும் பாதி மூடிய கண்கள் போன்ற இயல்புகள் இவ்வுருவினைப் பூசகர் உரு எனக் குறிப்பிடுவதற்கான காரணமாகும். சால்வை மூன்று இதழ் கொண்ட மலர் அல்லது இலை வடிவ கோலத்தினால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. தலையைச் சுற்றி கொழுவியுடன். கூடிய நெற்றிப்பட்டி அமைந்துள்ளது. தத்ரூபமான படைப்பாக்கமாக அன்றி, மோடிப்படுத்தப்பட்ட ஒரு கலைப்படைப்பாக இது காணப்படுகிறது. இதில் மொங்கோலிய மனித அம்சங்கள் காணப்படுகின்றன என்ற கருத்தும் உள்ளது. தற்போது கராச்சி தொல்பொருட்காட்சிச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.


உசாத்துணை நூல்கள் (Reference Book) :

  • ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி - தரம்12(தேசிய கல்வி நிறுவகம்)
  • வியத்தகு இந்தியா - ஏ. எல் .பசாம்
  • பண்டையகால இந்தியா - ஆர்.எஸ்.சர்மா
  • வரலாற்று முன்னர் இந்தியா - ஸ்ருவாட் பிகற்  
  • இந்து கலாசாரம் - பேராசிரியர் சி. பத்மநாதன்
  • சிவ விக்கிரகவியல் - பேராசிரியர் ப.கோபாலகிருஷ்ண ஐயர்
  • நடனங்களும் ஓவியங்களும் ஓவியக்கலை - இராமமூர்த்தி
  • தமிழர் வளர்த்த அழகுக்கலைகள் - மயிலை சீ. வேங்கடசாமி
  • வாழ்வியற் களஞ்சியம் தொகுதி 9 - தஞ்சைப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
  • தென்னிந்திய வரலாறு - E. நீலகண்டசாஸ்திரி
  • தென்னிந்திய சிற்ப வடிவங்கள் - க. நவரெத்தினம்
  • சிவானந்த நடனம் - கலாயோகி ஆனந்தகுமாரசுவாமி
  • இந்துக் கோயில்களும் சிற்பங்களும் - பேராசிரியர் சி. பத்மநாதன்
  • இந்து கலைக் களஞ்சியம் - தொகுதி 07


 


கருத்துகள்

Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
Awesome keep it up sir
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
A