இலங்கையின் தாதுகோபங்கள் (Sri Lanka Stupas)


 தூபராமதாதுகோபம்


 இலங்கையின் தாதுகோப நிர்மாணம் 3ம் நூற்றாண்டில் மகிந்தனின் வருகையுடன் ஆரம்பமாகின்றது. கிமு 3ம் நூற்றாண்டில் தேவநம்பியதிஸ்ஸ மன்னனால் மகிந்ததேரரின் ஆலோசனைப்படி இது அமைக்கப்பட்டது.  கிரிவறண்டுசேய, மகியங்கனை தாதுகோபங்கள் தூபராமவிற்கு முற்பட்டது எனினும் புத்த தர்மம் நிலை நாட்டப்பட்ட பின்னர் இலங்கையில் முதன் முதலில் கட்டப்பட்ட தாதுகோபம் என்பதால் முதன் முதலில் நிர்மாணிக்கப்பட்ட தாதுகோபம் என்ற பெயரை தூபராமதாதுகோபம் பெறுகின்றது. பௌத்த நூலாகிய தூபவம்சமும் இதனை இலங்கையின் முதலாவது தூபி எனக் குறிப்பிடுகின்றது. 

        தூபியும், ஆச்சிரமமும் ஒருங்கே அமையப் பெற்ற தலமாக அமைந்திருப்பதனால் தூபாராம என்னும் பெயர் வரக் காரணமாக அமைந்தது என மகாவம்ச நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

        புத்தபெருமானது காரை எலும்பை (தோள் எலும்பு - Right collarbone)  வைத்து கட்டப்பட்டு உள்ளதென வம்சக்கதைகள் கூறுகின்றன. இது முதலில் தானியல் குவியல் வடிவில் கட்டப்பட்டது. பின்னர் இத் தாதுகோபமானது 1842இல் மணிவடிவமாக திருத்தி கட்டப்பட்டது. தற்போதைய இதன் உயரம் 63 அடியாகும் அதன் விட்டம் 59அடியாகும். பல அரசர்களால் காலத்துக்கு காலம் புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளதுடன் பல கட்டிட அங்கங்களும் இணைத்துக் கட்டப்பட்டுள்ளது. 

     இத் தாதுகோபமானது அட்டமஸ்தானங்களிடையே முக்கிய வழிபாட்டு ஸ்தானமாக காணப்படுகிறது.

    7ம் நூற்றாண்டில் இலஞ்சதிஸ்ஸ(வசபன்) அரசனால் தாதுகோபத்தினைப் பாதுகாப்பதற்காக இதனைச் சுற்றி வட்டதாகே என்ற வட்டமான அமைப்புள்ள கூரைக் கட்டிடம் அமைக்கப்பட்டது என மகாவம்சம் கூறுகிறது. இதற்கு தாதுகோபத்தினைச்; சுற்றி 176 தூண்கள் அமைத்து அரைக்கோள அமைப்பில் மரத்தால் கூரைபோடப்பட்டது. தற்போது அதனைக் காணமுடியாவிட்டாலும் அமைக்கப்பட்டமைக்கான ஆதாரமாக அதனைச் சுற்றி நான்கு வட்டங்களிலான சிறந்த செதுக்கல்கள் கொண்ட போதிகையுடைய 88 தூண்களைக் காணமுடியும். இதனைச் சுற்றி குறுமதில் காணப்படுகிறது. உள்ளே செல்ல வடக்கிலும் தெற்கிலும் வாசல்கள் உண்டு. வாயில்களில் காவற்கல், சந்திரவட்டக்கல், கைபிடிவரிசை ஆகியன காணப்படுகிறது. 



ரூவன்வலிசாயா தாதுகோபம்



இந்திய சாஞ்சி தூபியை மாதிரியாகக் கொண்டு அமைக்கப்பட்ட இத்தூபி பௌத்த மக்களின் உன்னத சின்னமாகும். இதனால் மகாதூபி எனவும் இதனை அழைப்பர். அநுராதபுர புனித நகரத்தின் ஸ்வர்ணமாலி மாவத்தையில் அமைந்துள்ளதால் ஸ்வர்ணமாலி தூபி எனவும் அழைப்பர். இது கி.மு 2ம்நூற்றாண்டில் அநுராதபுரத்தில் துட்டகைமுனுவால் நீர்க்குமிழி (புலக்கார) வடிவில் அமைக்கப்பட்டது. 5ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ளது. 

இத்தாதுகோபத்தின் உயரம் 350 அடியும் விட்டம் 300அடியையும் கொண்டது. இதன் பளிங்கினால் நிர்மாணிக்கப்பட்ட சிகரமானது 25 அடி உயரம் கொண்டது. மகாவம்சத்தில் இதன் உயரம் 180 அடி எனக் குறிப்பிடப்படுகிறது. இது அண்டத்தின் உயரம் மட்டுமே என ஆய்வாளர் குறிப்பிடுகின்றனர். இங்கு புத்தரின் அஸ்தி வைத்துக்கட்டப்பட்டுள்ளது. 'சாயா' என்ற சொல் புனிதரின் உடல் எச்சங்களை வைத்துக் கட்டியதால் வந்ததாகும்.  

மகாவம்சம் ரூவன்வலிசாயா பற்றிக் கூறும் போது ஸ்தூபி அமைப்பதற்கு ஏற்ற இடம் முதலில் பத்தரை அடி தோண்டப்பட்டது என்றும் பின்னர் அங்கு பலவான்களால் சுண்ணாம்புக்கல் போடப்பட்டு சம்மட்டியால் அடித்து இறுக்கப்பட்டு மீண்டும் அதனுள் சிறு கற்கள் இடப்பட்டு யானைகளால் மிதிக்கச் செய்யப்பட்டது என்றும் கூறப்படுகி;ன்றது. பின்னர் பளிங்குக்கற்கள் இடப்பட்டு பல்வேறு வேலைகளும் செய்யப்பட்டதாகக் கூறப்படுகின்றது. பழைய தாதுகோப அண்டத்தின் மேல் கல்வேதியையும் சதுரக்கோட்டம், குடை கொண்டதாக இருந்தது. பின்னர் குடைக்குப் பதிலாக சந்திராவலி அமைக்கப்பட்டது. இதில் உள்ள ஹதரஸ் கொட்டுவ ஒவ்வொரு பக்கமும் 120 அடி நீளம் கொண்டது. இதில் சூரிய சந்திர உருவங்களும் தங்கம், வெள்ளி, முத்து, மாணிக்கம் போன்றன பொறிக்கப்பட்டிருந்ததாக தூபவம்சம் குறிப்பிடுகிறது. இது பழைய ஏடுகளில் சீவ்ரஸ் கொட்டுவ என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு மேல் தேவதஸ்கொட்டுவ காணப்படுகிறது. அதில் தேவர் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேல் கொத்கரல்ல எனும் சிகரம் உள்ளது. கீழிருந்து மேலாக ஒடுங்கிச் செல்லும் இதன் உச்சியில் சூடாமாணிக்கம் உள்ளது. 

ரூவன்வலிசாயா தாதுகோபத்தினைச் சுற்றிவர பேசாவளலு மூன்று காணப்படுகின்றது. இதனை துன்மால் பேசாவ என அழைப்பர். தாதுகோபம் அமைந்துள்ள கற்கள் பதிக்கப்பட்ட மிக விசாலமான சுற்றுப்பிரகார (சலபதல மலுவ) மேடையின் நான்கு பக்கங்களிலும் மகா தூபத்தின் மாதிரி அமைப்பைக் கொண்ட சிறு தூபங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை உபயதூபி எனப்படும். இது 4அடி 2அங்குல உயரமுடைய இந்த உபய தூபிகளை நிசங்கமல்ல மன்னன் நிறுவினான். 

தாதுகோபத்தின் நான்கு பக்கங்களிலும் வாகல்கடங்கள் உள்ளன. நான்கு புறமும் வாகல்கடம் உள்ளது. மேற்குப்புற வாகல்கடம் பழைய அம்சங்களுடன் உள்ளது. ஏனைய மூன்று வாகல்கடங்களும் புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது. வாகல்கடங்கள் சத்தாதிஸ்ஸ அரசன் காலத்தில் அமைக்கப்பட்டவை. அது மலர்க்கொடி அலகுகளால் செதுக்கி அலங்கரிக்கப்பட்டுள்ளது. தாதுகோபத்தின் பிரதான வாசல் கிழக்குப் புறம் அமைந்துள்ளது. வாசலில் நாகராஜ துவாரபாலகர், காவற்சிலை, யானை உருவம் கொண்ட கைபிடி வரிசையும் காணப்படுகிறது.    

தாதுகோபத்தின் அண்டம் வரை மட்டுமே துட்டகைமுனு மன்னன் நிர்மாணித்தான். மிகுதிப்பகுதியை துட்டகைமுனு துணியில் வரைந்து காட்டினான். தாதுகோபத்தின் கட்டிட வேலைகள் பூர்த்தியடைவதற்கு முன் துட்டகைமுனு அரசன் இறந்து போனதால் அவனுடைய சகோதரன் சத்தாதிஸ்ஸன் அதனைக் கட்டி முடித்தான். அத்துடன் சுற்றிவர யானைத் தலையும் இருகால்களும் கொண்ட யானை அணி மதிலையும் (அத்பவுர) கட்டி வெள்ளையடித்து பூர்த்தி செய்துள்ளான். யானைகள் மேடையைச் சுமந்து வருவது போல் அமைக்கப்பட்ட இம்மதில் விசேட கலைச் சிறப்புடைய ஒரு நிர்மாணமாகும். 

பிற்காலத்தில் இத் தாதுகோபத்திற்கு அருகாமையில் சத்தாதிஸ்ஸ மன்னனின் மகன் இலஞ்சதிஸ்ஸன் சிலைமனை ஒன்றையும் கட்டுவித்தான். இதனுள் கக்குசந்த, கோணாகம, காசியப்ப, கௌதம ஆகிய நான்கு புத்தர்சிலைகளும் மற்றும் மைத்திரேய போதிசத்துவர், எல்லாளன் துட்டகைமுனு யுத்தக்காட்சி, துட்டகைமுனு விகாரமாதேவி பாதிஸ்ஸ அரசன் ஆகியோரின் சிலைகள் உண்டு. இச்சிற்பங்கள் இந்திய அமராவதி சிற்ப மரபில் அமைக்கப்பட்டுள்ளது.

தாதுகோபமானது பிற்காலத்தில் இலங்கையை ஆண்ட அரசர்களால் புனரமைப்புச் செய்யப்பட்டதுடன் பல்வேறு அங்கங்களும் இணைத்து நிர்மாணிக்கப்பட்டது. கிழக்கு வாகல்கடவிற்கு அருகில் நிசங்கமல்லனின் 12ம் நூற்றாண்டுக்குரிய கல்வெட்டு ஒன்று உள்ளது. இதில் ரூவன்வலிசாயாவை அவன் பராமரித்தமை தொடர்பாக 35 வரிகள் காணப்படுகிறது. 


ஜேதவனராம தாதுகோபம்


    மகாசேன மன்னனால் (கி.பி 275 – 304) அநுராதபுரம் ஜோதிவனத்தில் கட்டப்பட்ட இத் தாதுகோபம் உலகின் மிகப்பெரிய புராதன தூபியும் இலங்கையின் மிக உயர்ந்த தாதுகோபமும் ஆகும். மகிந்ததேரரை தகனம் செய்த இடத்தில் கட்டப்பட்டதாக மகாவம்சம் கூறுகிறது. இதன் உயரம் எகிப்த்திய பிரமிட்டை நினைவுபடுத்துவதாகவுள்ளது. ஜேதவனராமையின் கட்டடக்கலை நுட்பமும் முதன்மையான செதுக்கற் கலைத்திறனும் இலங்கைக் கலைஞர்களின் தனித்துவத்தை எடுத்துக் காட்டுகின்றது. அபயகிரி தாதுகோபத்திற்கு ஒப்பான வடிவுடையது. இதனுள் தாதுப்பொருளாக புத்தரின் இடுப்புப்பட்டி (பட்டிதாது) வைத்துக் கட்டப்பட்டுள்ளது. 

8 ஏக்கர் பரப்பளவில் 367அடி விட்டத்தில் அமைக்கப்பட்ட இதன் உயரம் 400 அடி (123மீற்றர்) ஆகும். ஆனால் தற்போது 233 அடி மட்டுமே உள்ளது. முதலில் கட்டப்படும் போது நீர்க்குமிழி வடிவில் கட்டப்பட்ட போதும் பின்னர் புனர்நிர்மாணம் செய்யும் போது தானியக் குவியலாக மாற்றப்பட்டது. கி.பி 7ம் நூற்றாண்டு வரை இதன் தூபியில் கல்வேலியும் குடையும் காணப்பட்டது. பின்பு, சதுரக்கோட்டம், தேவகோட்டம் என்பன கட்டப்பட்டது. முதலாம் பராக்கிரமபாகு மன்னன் இதன் கொத்கரல்ல பகுதியை நிர்மாணித்ததாகக் கூறப்படுகின்றது. நான்கு திசைகளிலும் வாகல்கடங்கள் காணப்படுகின்றது. சுற்றிவர பாரூத் தூபியின் கல்வேலியை ஒத்த கல்வேலி காணப்படுகிறது. தாதுகோபத்தின் மேற்குப் பக்கத்தில் சிலைமனையொன்றும் இருந்துள்ளது. அழிவடைந்த நிலையில் உள்ள இச்சிலைமனையில் இருந்து நாக உருவம், மாயாதேவி கனவு, பிரஸ்வதியின் அற்புதச் செயல் போன்ற புடைப்புச் சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை ஆந்திர சிற்பப்பாணி கொண்டவை.  

    ஜேதவனராம தாதுகோப அகழ்வாராட்சியின் போது இதன் அத்திவாரம் 28 அடியிலிருந்து ஆரம்பமாவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இது சுட்ட செங்கற்களால் இடப்பட்ட படிகள் கொண்ட அத்திவாரமாகும். செங்கற்கட்டுகளுக்கு கீழ் கொங்கீரிட் இடப்பட்டிருப்பதை தொல்பொருள் ஆணையாளரான எச்.சீ.பி.பெல் குறிப்பிடுகின்றார். இதன்படி மிக உறுதியான அத்திவாரம் போடுவதற்காக அத்திவார குழிகளில் கற்கள் நிரப்பி தோலால் ஆன வார்களால் பாதுகாக்கப்பட்ட கால்களையுடைய யானையினால் மிதிக்கப்பட்டு இறுக்கப்பட்டதாக மகாவம்சமும் விளக்குகின்றது.

    மிக உறுதியாக அத்திவாரம் போடப்பட்ட பின்னர் பூச்சிகள் மற்றும் தாவரவேர்கள் ஊடுருவிச் செல்வதைத் தடுக்க அதன் மேல் நல்லெண்னை சேர்க்கப்பட்ட ஆர்சிமிக் (யுசளநஅiஉ) அமிலம் ஊற்றப்பட்டு அதன் மேல் செப்புத் தகடு போடப்பட்டது. இதன் மீதே தாதுகர்ப்பம் நிர்மாணிக்ப்பட்டது.  

தாதுகோபத்தைக் கட்டுவதற்கு சுட்ட செங்கற்கள் உபயோகிக்கப்பட்டுள்ளன. இவை 35 சதவீதம் களியும் 60 சதவீதம் 281 முப அழுத்தத்தைத் தாங்கக்கூடியவாறும் இருந்தது. இது இலங்கையின் புராதன கட்டடக்கலை வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாகும். 

சரியான அரைக் கோளமாக அமைவதற்காக முழுக்கற்கள் மற்றும் அரைக்கற்கள் கொண்டு தாதுகர்ப்பப்பகுதி (அண்டம்) அரைக்கோளமாக கட்டப்பட்டது. அந்த அரைக்கோளப் பகுதியை நிரப்புவதற்கு மண் உபயோகிக்கப்பட்டதாக ஆய்வாரள்கள் கூறுகின்றனர். இதனாலேயே மிகப் பெரிய தாதுகர்ப்பத்தினைக் கட்டமுடிந்துள்ளது. இதனைக் கட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட சாந்துக் கலவையானது கல், அரிந்த மணல், களி போன்றவற்றை கலந்து தயாரிக்கப்பட்டது. களி இலகுவில் இணங்குவதால் அசைய அனுமதிக்காது. கட்டு வேலைக்குப் பயன்படுத்தும் கற்களின் ஒரு பக்கம் கரடுமுரடாக இருப்பதால் சாந்தினைப் பூசி கற்களை வைக்கும் போது இலகுவாகப் பிடித்துக் கொள்ளும். பின்னர் மேற்பூச்சு பூசப்பட்டது. இவ் மேற்பூச்சானது கடற்சிற்பி சுண்ணாம்பு, சீனிப்பாணி,முட்டை வெள்ளளைக்கரு, இளநீர், தாவரகுங்கிலியம், மணல்,களி என்பவற்றைக் கலந்து தயாரிக்கப்பட்டது. இச்சாந்துப் பூச்சு பூசுவதன் நோக்கம் கட்டிடத்தினுள் தண்ணீர் உட்புகுதலையோ அல்லது ஊறிச்செல்வதையோ தடுப்பதாகும். 

           ஜேதவனராமையவைக் கட்டுவதற்கு 15 ஆண்டுகள் பிடித்ததாகக் கூறப்படுகின்றது. இதற்காக திறன் வாய்ந்த மேசன்களும், கல்வெட்டுவோர், சூளையாட்கள் என நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் தேவைப்பட்டிருக்கலாம் என கணிக்கப்படுகின்றது. 


அபயகிரிய தாதுகோபம்

இலங்கையிலுள்ள மிகப் பெரிய தூபிகளில் இரண்டாம் இடத்திலுள்ளதாகக் கருதப்படுகின்ற தூபியாக அபயகிரித் தூபி விளங்குகின்றது. வட்டகாமினி அபய அல்லது வலகம்பா (கி.மு.89–77) என அழைக்கப்படும் மன்னன் இந்த விகாரையை நிர்மாணித்ததாக தீபவம்சம் கூறுகிறது. அபயகிரி விகாரையை உத்தர மகா வெத்த> அபயகிரி தாதுகோபுரம்> அபஹயகர> பஹிரினக> பயாகிரி என பல பெயர்களாலும் அழைக்கப்பட்டு வந்துள்ளது.

சுமார் 200 ஹெக்டெயார் நிலப்பரப்பில் இந்த விகாரை அமைந்துள்ளது. மகா விகாரையில் மூவாயிரம் பிக்குகள் தங்கியிருந்ததாகவும்> அபயகிரி விகாரையில் ஐயாயிரம் பிக்குகள் தங்கியிருந்ததாகவும்> ஐந்தாம் நூற்றாண்டில் இலங்கைக்கு வருகை தந்த பாஹியன் தேரர் அவர்கள் குறிப்புகளில் கூறியுள்ளார்.

கிரி என்னும் பெயருடைய சமண மதகுருவின் தியான இடமாக இது முன்பு இருந்தது. தென்னிந்திய படையெடுப்பிற்கு பயந்து வட்டகாமினி அபய மன்னன் தப்பி ஓடும் போது சமணத்துறவியான கிரி என்பவர் 'உரத்த கறுத்த சிங்களவன் ஓடிப்போகிறான்' எனச் சத்தமிட்டு நகைத்தார். மீண்டும் ஆட்சிக்கு வந்த அபய மன்னன் அந்த தியான இடத்தை முற்றாக அழித்து 1ம் நூற்றாண்டில் அவ்விடத்திலேயே அபயகிரி தாதுகோபத்தை கட்டினான். இதனால் 'அபய' என்ற மன்னனின் பெயருடன் 'கிரி' என்ற மதகுருவின் பெயர் இணைக்கப்பட்டு 'அபயகிரி' என்று அழைக்கப்படுகின்றது. இத் தாதுகோபத்தை அமைத்த வலகம்பா மன்னன் அதனை குப்பிக்கலா மகா திஸ்ஸ தேரரிடம் கையளித்ததாக மகாவம்சம் கூறுகின்றது.

இது ஒருஅட்டமஸ்தானத்திற்குரிய வழிபாட்டுத்தலமாகும். பரந்தளவில் ஒரு விகாரராமயக்குரிய சங்கிராமத்தின் கூறுகளான சிலைமனை> போதிகறய> தடாகம் போன்றனவும் காணப்படுகின்றது. அநுராதபுரக் காலத்தின் கட்;டடக்கலை எய்தியிருந்த உன்னத நிலையினை எடுத்துக்காட்டும் சிறந்த சின்னமாக விளங்குகின்றது.

அபயகிரி தூபி 235 அடி உயரமும்> தூபியின் அடித்தளம் 310 அடி விட்டமும் கொண்டது. ஆரம்ப காலத்தில் அபயகிரி விகாரையின் மூன்று அடித்தளத் தட்டுக்களும் 9அடி உயரத்தில் அமைக்கப்பட்டு இருந்துள்ளது. அதேபோல் தூபியின் ஹதரஸ்கொட்டுவ (சதுரக்கோட்டம்) கொத்கறல்லத்திற்குப் பதிலாக சந்திராவலியும் அதனைத் தாங்கி நிற்கும் கம்பமும் (உச்சியில் கம்பம்> குடை வடிவிலான 3 கற்தட்டு) இருந்ததாக கூறப்படுகின்றது. இது இந்தியாவின் சாஞ்சி தூபியை மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. அத்துடன் தூபியின் நான்கு பக்கங்களிலும் ஆயக எனப்படும் நான்கு சிறிய சைத்தியக்கள்> சுற்று மதில் போன்ற அம்சங்களும் காணப்படுகின்றன. இத்தாதுகோபத்திற்கு நுழையும் பகுதியில் சந்திரவட்டக்கல்> காவற்கல்> கொரவக்கல் குள்ளர் உருவங்கள் என்பன அமைக்கப்பட்டுள்ளன.

. தாதுகோபுரத்தின் தென்திசை வாயிலின் இருமருங்கிலும் காணப்படுகின்ற சங்கு, தாமரை, பைரவ உருவங்கள் ஆகியன சிற்பக் கலையைப் பரிணமிக்கும் எடுத்துக் காட்டுகளாகும். இந்த பைரவ உருவங்கள் தொடர்பான சமயக் கிரியைகள் தற்காலத்திலும் இடம் பெறுகின்றன. இவ்விகாரையின் கிழக்குத் திசையிலுள்ள சிறிய சைத்தியவில் ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்ததற்கான சான்றுகள் காணப்படுகின்றன. அத்துடன் தூபி அமைந்திருந்த மண்டபத்திலிருந்து ஸ்ரீபாத இலச்சினை ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பின்னர் முதலாம் கஐபாகுவினால் இத் தாதுகோபம் திருத்தப்பட்டதாகவும் கனிஸ்டதிஸ்ஸ அரசனால் இதற்கு எட்டு வாகல்கடங்கள் அமைக்கப்பட்டதாகவும் மற்றும் மலராசனம் செய்து அதில் புத்தர்சிலை வைத்தான் என்றும் வரலாற்றில் கூறப்படுகின்றது. சீன யாத்திரிகன் பாகியனின் குறிப்புப்படி இதற்கு தங்க முலாம் பூசப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது.

மகாசேன மன்னனது ஆட்சிக் காலத்தில்> அபயகிரி விகாரையின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் உச்சக் கட்டத்தினை அடைந்திருந்ததுடன்> மகாயான பௌத்த தர்ம சம்பிரதாயங்களின் முக்கிய கேந்திர நிலையமாகவும் அபயகிரி விளங்கியது. அபயகிரி விகாரைத் தொகுதியிலுள்ள கட்டிடங்கள் உள்நாட்டு தேவைகளுக்காக மாத்திரமன்றி, சர்வதேச ரீதியாகவும் மிக முக்கியமான கல்வி நிறுவனமாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.



ரன்கொத் விகாரை

 

இலங்கையின் பண்டைய நகரமாகிய பொலனறுவை நகரில் அமைந்துள்ள இலங்கையின் நான்காவது பெரிய தாதுகோபமாகும். பொலனறுவைக் காலத்தில் பிரசித்தி பெற்ற ஓர் தாதுகோபமாக விளங்குகியது. கி.பி 12ம்நூற்றாண்டில் பராக்கிரமபாகுவின் மனைவியான ரூபவதியால் ஆரம்பிக்கப்பட்ட இதன் கட்டுமாணப் பணிகள் கி.பி 13ம் நூற்றாண்டின் முற்பகுதியில் நிஸங்கமல்லனால் (1187 – 1196) மகாவிகாரைப் பாரம்பரியப்படி கட்டி முடிக்கப்பட்டது. ஆரம்பத்தில் இதன் உயரம் 200 அடியாகவும் இதன் விட்டம் 804 அடியாகவும் இருந்துள்ளது. தற்போது இதன் உயரம் 108 அடி (33மீ) அடிப்படை விட்டம் 550 அடியும் (170மீ) கொண்டது. இருப்பினும், ஸ்தூபியின் அசல் வடிவம், குறிப்பாக அதன் மேல் பகுதி, பிற்கால ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட புனரமைப்புப் பணிகளின் போது மாற்றப்பட்டுள்ளது, நீர்க்குமிழி வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை முதலில் இரத்னாவலி சைத்தியம் என அழைத்தனர்.

நான்கு புறமும் வாகல்கடங்களும் அவற்றிடையே எட்டு சிலைமனைகளும் உள்ளன. வாகல்கடங்களில் யானை தாமரை செதுக்கல்கள் காணப்படுகிறது. சிலைமனையில் புத்த உருவங்கள் அழிந்த நிலையில் உள்ளன.  

     இதனை கலாநிதி கொடகும்புறா அவர்கள் 1950 இல் கண்டு பிடித்தார். அநுராதபுரத்தில் கட்டப்பட்ட மகாவிகாரையையும் றுவன்வலிசாயாவையும் ஒத்ததாகக் கட்டப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் றுவன்வலிசாயா என அழைக்கப்பட்டதாக ஓர் கல்வெட்டுக் கூறுகின்றது. பிற்காலத்தில் இதன் கொத்கரல்ல பகுதி தங்க முலாமிடப்பட்டு இருந்தமையால் றன்கொத் விகாரை என அழைக்கப்பட்டது. முழுவதும் செங்கல்லால் கட்டப்பட்டு மேற் பூச்சு சாந்தினால் பூசப்பட்டுள்ளது. பிற்காலத்தில் வந்த ஆட்சியாளர்களால் மேற்பகுதி மறுசீரமைக்கப்பட்டது. 


கிரி விகாரை

கி.பி 12ம் நூற்றாண்டில் மகா பாராக்கிரமபாகுவினால் பொலனறுவையில் அமைக்கப்பட்டுள்ளது. இது பராக்கிரமபாகு மன்னனின் மனைவி சுபத்திராதேவி மகாராணிக்கு கட்டி அர்பணிக்கப்பட்டு அவரின் பெயராலேயே இத் தாதுகோபம் அழைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. இதனை ரூபாவதி தாதுகோபம் எனவும் அழைப்பர். இதன் உயரம் 88 அடி ஆகும். குமிழ் வடிவில் அமைந்துள்ளது. பொலனறுவையில் மிகவும் பேணப்பட்ட நிலையில் உள்ள தூபி இதுவாகும். இத் தாதுகோபமானது செங்கற்களால் கட்டப்பட்டு வெண்ணிற சுண்ணம்பு பூச்சு பூசப்பட்டமையால் பால்நிறத்தில் மிகவும் வெண்மையாகக் காட்சியளித்துள்ளது. இதனாலேயே இதற்கு கிரி விகாரை (பால்நிறக் கோயில்) எனப் பெயர் வந்தது. பொலனறுவை இராட்சியம் வீழ்ச்சியடைந்த பின்னர் 7 நூற்றாண்டு காலம் கவனிக்கப்படாது விடுபட்டாலும் அதன் வெள்ளையடிப்பு அழிந்து விடாமல் அப்படியேயுள்ளது. பின்னர் 19ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் வந்த போது இவ்விடம் கண்டுபிடிக்கப்பட்டது. அப்பொழுது இதன் அண்டப்பகுதியில் உள்ள மேற்பூச்சினை 700 ஆண்டுகளுக்குப் பின்னர் அகற்றும் போதும் அதில் வெண்ணிறச் சுண்ணாம்புப் பூச்சுக்களைக் காணக்கூடியதாகவுள்ளது. 

 ஹங்குரன்கெத பொத்குல் விகாரை தூபி

    கண்டிக் காலத்திற்குரிய இத்தூபி ஹங்குரன்கெத விகாரையின் சிலைமனையினுள் கட்டப்பட்டுள்ளது. சிறிய தூபியான இது 14 அடி 10 அங்குலம் உயரத்தையும் 24 அடி 5 அங்குல விட்டத்தையும் கொண்டுள்ளது. விகாரையினுள் உயரமாக அமைக்கப்பட்ட சதுர வடிவமான மேடையில் வட்டவடிவமான மலுவையின் (தரையின்) மேல் இத்தூபி கட்டப்பட்டுள்ளது. 

    இத்தூபியின் விசேட அம்சமானது தூபியின் மேற்பரப்பில்  அழகான அலங்கார வேலைப்பாடுகள் வரைந்துள்ளமையாகும். சிவப்பு, செம்மஞ்சள் மற்றும் மஞ்சள் நிறங்கள் அதிகமாக உபயோகித்து இரேகைகளைக் கொண்டு தூபியின் பேசாவளலு மீது பலாபெத்தி அலங்காரங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. தூபியின் கர்பய (அண்டம்) மேகங்கள் மற்றும் அரச இலைகளாலும் சதுரக் கோட்டம், தேவ கோட்டம் மற்றும் சிகரம் கொடி, மலர் வேலைப்பாடுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.  




    தற்போதைய ஹங்குரன்கேதா பொத்குல் மாலிகா ராஜமஹா விகாரயா 1830 ஆம் ஆண்டில் போஹோலியாதே தேரோ என்ற புத்த மத குருவால் கட்டப்பட்டது> அங்கே அவர் கொண்டு வந்த பிரசாதத்தின் கலசத்தை நிலத்தில் வைத்து விட்டு ஓய்வெடுக்கும் போது அது நிலத்தில் உறுதியாக பிணைக்கப்பட்டுவிட்டது. புராணக் கதையின் படி புத்த தேரர் ஒரு யாத்திரை மேற்கொண்டார்> அவர் இந்த வழியில் செல்லும் போது இரவு பொழுதை அங்கே கழித்தார். அடுத்த நாள் அவர் வெளியேறத் தயாரானபோது> அவரது பிரசாதத்தை சுமந்த கலசத்தை முந்தைய நாள் அவர் வைத்த இடத்திலிருந்து நகர்த்த முடியவில்லை. தேரர் இதை ஒரு சகுனமாகக் கருதி> சங்கருவாங்கேதா (இப்போது ஹங்குரங்கேத) என்று அழைக்கப்படும் இந்த பூமியில் ஒரு விகாரையைக் கட்டத் தொடங்கினார்.
    இந்த கோயில் பொலன்னருவ ராஜ்யத்தின் போது (1070 - 1236) இருந்த தேவரம் விகாரையின்; இடிபாடுகளில் கட்டப்பட்டுள்ளது என்றும் நம்பப்படுகிறது.
    ஸ்ரீ வீராபராக்கிரம நரேந்திரசிங்க (1707 - 1739) மற்றும் ஸ்ரீ விஜயராஜசிங்க (1739 -1747) ஆகிய மன்னர்கள் கண்டியின் இரண்டாவது தலைநகரமாக ஹங்குரங்கேத்தையை பயன்படுத்தினர் என்றும் இந்த நகரத்தில் அரண்மனை ஒன்று கட்டப்பட்டிருந்ததாகவும் றொபேட் நொக்ஸ் பதிவு செய்துள்ளார்.

























கருத்துகள்

Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
Super notes. And very use full. Thankyou so much 🙏🙏