சந்திரவட்டக்கல் மற்றும் காவற்கல்

 


சந்திரவட்டக்கல்

சந்திரவட்டக் கல்லானது சிங்களக் கலைஞர்களின் சிரேஸ்ட நிர்மாணமாகும். இவை அரண்மனைகள், வழிபாட்டுத்தலங்கள் போன்றவற்றின் வாசலில் படிக்கட்டின் இறுதியில் காணப்படும் செதுக்கல் கொண்ட அரைவட்டவடிவப் படிக்கல்லாகும்.

இது முதலில் சதுரவடிவில் இருந்து காலம் செல்லச் செல்ல அதன் பயனை இலகுவாக்கும் வகையில் அந்தங்கள் வட்டமாக்கப்பட்டுள்ளன. அலங்காரத்திற்கும் பாதுகாப்புக்குமாக பிற்காலத்தில் அது அரை வட்டவடிவான தன்மையில் அமைக்கப்பட்டுள்ளது. 

அரைவட்டவடிவான சந்திரவட்டக்கல் முதலில் உருவங்கள் எதுவுமின்றி நிர்மாணிக்கப்பட்டது. பின்பு ஒரு மையத்தில் இருந்து ஐந்து கீலங்களாக பிரிக்கப்பட்ட அரைவட்ட இரேகைகளுக்குள் அலங்காங்கள் செதுக்கும் முறை உருவாகியது. பின்னர் பூவிதழ்களின் செதுக்கல்கள் பயன்படுத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து உருவவரிசைகள் சேர்க்கப்பட்டன. காலம் செல்லச் செல்ல உருவ வரிசைகளின் அளவு கூடியது. அரைவட்டத்தினுள் உருவங்கள் திட்டமிட்டு செதுக்கப்பட்டுள்ளது. அவ்வரிசையில் பறவைகள், விலங்குகள், கொடிகள், தீச்சுவாலைகள் போன்றவையும் சேர்க்கப்பட்டன. சந்திரவட்டக்கல்லின் செதுக்கல்களில் அதிகமானவை அரைப்புடைப்புச் சிற்பமாக உள்ளன. ஆழமாக ஆக்கப்பட்ட உருக்களும் சில சந்திரவட்டக் கற்களில் காணலாம். சந்திவட்டக் கல்லின் செதுக்கல்களில் உள்ள உருக்கள் மிக எளிமையானவை. இலகுவானவை சிக்கலற்றவை. செதுக்கலுக்கேற்ற உருக்களே மிகப் பொருத்தமாக அமைக்கப்பட்டுள்ளன. இவை இயற்கையாகவும் உயிர்த்துடிப்புடையவையாகவும் இருப்பதைக் காணலாம். மிருகங்களை வடிவமைக்கும் போது நிறைவுடனும் அசைவுடனும் செயற்படும் விதத்தில் செதுக்கப்பட்டுள்ளது. இதற்கெனப் பயன்படுத்தப்பட்ட சிங்கம் மற்ற விலங்குகளை விட உயிர்த் துடிப்புள்ளதாகக் காணப்படுகின்றது. 

சந்திரவட்டக்கல் செதுக்கல்களுக்குப் பயன்படுத்தப்பட்ட அலங்காரங்கள் கேத்திர கணித அமைப்பின் படி நிர்மாணிக்கப்பட்டுள்ளன. பழைய சந்திரவட்டக்கற்களில் சமாந்தரமான அலங்காரங்கள் கொடிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மத்தியில் பூவிதழ்களைக் கொண்ட ஒரு பட்டியுள்ளது. சந்திவட்டக்கல்லின் மத்திய பகுதி ஏனைய பகுதிகளை விட மேலாக அமைந்துள்ளது. 

இச் சந்திரவட்டக்கல் செதுக்கலில் உள்ள அலங்கார வடிவங்கள் பௌத்த மத எண்ணக்கருக்கள் கொண்ட குறியீட்டுட்டு ரீதியாக பல அர்த்தங்களைக் கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது. அவற்றின் 6 பகுதிகளும் அதன் பொருளும் கீழே தரப்பட்டுள்ளது.

பகுதி உருவம்                                                       பொருள்

1 தீச்சுடர்                                                                 பேராசை,ஆசை,குரோதம்

2 யானை, குதிரை, சிங்கம், எருது        வயோதிபம், நோய், மரணம், ஐhதி

3 கொடி அலங்காரம்                                           பேராசை எனும் பிணைப்பு

4 ஹன்சாவலிய (அன்னப்பட்சி) பேராசையைப் புத்தியால் தவிர்த்தல்

5 கொடியலங்காரம்                                             பேராசை எனும் பிணைப்பு

6 அரைத்தாமரை                                          முக்தி நிலையைப் பெற்றுக்கொள்ளல்.


அநுராதபுரக்காலச் சந்திரவட்டக்கல்

    அநுராதபுரக்காலச் சந்திர வட்டக்கற்கள் பொலனறுவைக்காலச் சந்திரவட்டக்கற்களை விட சிறப்பானதும் நேர்த்தியானதுமாகும். இவை குப்த மரபில் இக்காலப்பகுதிக்கான சந்திரவட்டக்கற்கள் அமைக்கப்பட்டன. இவை நடுவில் அரைத்தாமரை வடிவத்தையும் அடுத்த வரிசையில் சொன்டினால் கௌவியபடி செல்லும் அன்னப்பட்சியையும் அடுத்து இலை,கொடி அலங்காரத்தையும், அடுத்து யானை,குதிரை,சிங்கம்,எருது ஆகியன ஒன்றையொன்று துரத்துவது போன்ற மிருகவரிசையையும் இறுதியில் தீச்சுடரும் காணப்படுகின்றது. மிருகவரிசையில் ஓட்டமும் அசைவும் சிறப்பாக செதுக்கப்பட்டுள்ளது. 

    சந்திரவட்டக்கல் செதுக்கல்களுக்குப் பயன்படுத்தப்பட்ட அலங்காரங்கள் கேத்திர கணித அமைப்பின் படி நிர்மாணிக்கப்பட்டுள்ளன. பழைய சந்திவட்டக்கற்களில் சமாந்தரமான அலங்காரங்கள் கொடிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மத்தியில் பூவிதழ்களைக் கொண்ட ஒரு பட்டியுள்ளது. சந்திவட்டக்கல்லின் மத்திய பகுதி ஏனைய பகுதிகளை விட மேலாக அமைந்துள்ளது. ஆனால் அநுராதபுரத்தின் பெருமளவு சந்திரவட்டக்கற்கள் பல அளவுகள் குறைந்த ரேகைகள் பயன்படுத்தப்பட்ட கொடிச்செதுக்கல்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. 


அநுராதபுரக்காலத்திற்குரிய அலங்கார சந்திர வட்டக்கற்கள் சில பின்வரும் இடங்களில் உள்ளன.

1. அநுராதபுரம் இராணி(பிசோ) மாளிகையில் (மகாசென் மாளிகை) உள்ள சந்திரவட்டக்கல்

2. அபயகிரி விகாரை உள்ள சந்திரவட்டக்கல்

3. வசபக்குளத்திற் கண்மையில் உள்ள கட்டிடமொன்றில் உள்ள சந்திரவட்டக்கல்

4. தூபராமைக்கு அண்மையில் உள்ள மகாமேகவன உயன்னாவில் உள்ள சந்திரவட்டக்கல்

5. ஹீ மகாபோதி (வெள்ளரசு மரம்) அருகில் உள்ள சந்திரவட்டக்கல்.

6. அனுராதபுரக்கால தலதாமாளிகை வாசல் உள்ள சந்திரவட்டக்கல்.

மேற்கூறிய சந்திரவட்டக்கற்கள் அளவில் சமமானவை அல்ல. அளவில் செதுக்கலில் வேறுபட்டவை. 

சாதாரணமாக சந்திர வட்டக்கல்லின் அந்தத்தில் உள்ள வட்டத்தில் காணப்படும் தீச்சுவாலைச் செதுக்கல் ஸ்ரீ மகாபோதி விகாரையின் சந்திரவட்டக்கல்லின் மத்தியில் உள்ள தாமரைக்கு அருகில் செதுக்கப்பட்டுள்ளது. விலங்குகளின் வரிசைச் செதுக்கல் ஆரம்பமாகும் இடமும் முடிவுறும் இடமும் சகலவற்றுக்கும் 2ம் இடத்திலும் யானையொன்றின் உருவத்தைக் காணக்கூடியதாக உள்ளது. குதிரை உருவம் இரண்டை மட்டும் காணக்கூடியதாகவுள்ளது. இச் செதுக்கலில் சிங்க உருவங்கள் காணப்படவில்லை. 

    ருவன்வெலிசாயாவிற்கும் வசவக்குளத்திற்கும் இடையில் காணப்படும் கட்டடமொன்றில் உள்ள சந்திரவட்டக்கல்லில் 4 விலங்குருவங்களும் இரு தடவையும் மேலும் ஒரு யானை உருவமும் அமைக்கப்பட்டுள்ளது.  அதில் அன்ன வரிசையொன்று சொண்டினால் எதுவும் சுமக்காத வகையில் செதுக்கப்பட்டுள்ளது. 

அனுராதபுரக்கால தலதாமாளிகையில் உள்ள சந்திரவட்டக்கல்லில் உள்ள செதுக்கல்கள் அந்தளவு வித்தியாசமாக இல்லாவிட்டாலும் கலைப்படைப்புகளில் ஒர் உயர்தரமான நிர்மாணமாக அதன் மத்தியில் உள்ள தாமரை இதழ்களைக் கொண்டுள்ள விதம் மிகத்தெளிவாகச் செதுக்கப்பட்டுள்ளது. அதில் செதுக்கப்பட்ட கொடிவரிசை மெல்லியது. அதில் உள்ள அன்னங்கள் எதனையும் சுமக்காது உள்ளன.

வேறு இடங்களில் காணப்படாத கொடிச் செதுக்கல்களை ருவன்வலிசாயாவிற்குப் பின்னாலுள்ள மண்டபத்தில் காணலாம். அருகிலுள்ள மற்றைய செதுக்கல்கள் அநேக இடங்களில் காணப்படும் செதுக்கல்களுக்குச் சமமானது.

அநுராதபுரக்காலச் சந்திரவட்டக்கற்களில் மிகச் சிறந்தது அநுராதபுர இராணி மாளிகை சந்திரவட்டக்கல் ஆகும். இது அநுராதபுரக்காலக் கலைஞர்களின் கலை நுட்பத்தையும், உயிர்த்துடிப்பான சிற்பத்திறனையும் எடுத்துக் காட்டுகின்றது. இச் சந்திரவட்டக்கல்லின் மத்தியில் அரைவாசித் தாமரை ஒன்றுள்ளது. அதைச் சுற்றி மத்தியை நோக்கி 5 வரிசைகள் இருக்கின்றன. அருகிலுள்ள வரிசையில் சொண்டினால் தாமரைமொட்டுக்கள் மூன்றைக் கவ்விக் கொண்டுள்ள அன்னங்களைக் கொண்ட கொடியொன்றும் அடுத்த வரிசையில் சிக்கலான கொடியொன்றும் அடுத்த வரிசையில் ஒன்றோடொன்று பிணைந்து செல்லும் யானை, சிங்கம், குதிரை, எருது போன்ற நான்கு விலங்குகளும் கடைசி வரிசையில் தீச்சுவாலையின் செதுக்களையும் கொண்டும் அலங்கரிக்கப்பட்டுள்ளன. 




பொலனறுவைக்காலச் சந்திரவட்டக்கல்

    பொலனறுவைக்காலச் சந்திரவட்டக்கல்லானது தோற்றத்திலும் பருமனிலும் அனுராதபுரச் சந்திரவட்டக்கல்லுக்குச் சமனானது. ஆனால், இவை வௌ;வேறு இடங்களில் வேறுபட்ட அலங்காரங்களைக் கொண்டதாக உள்ளது. செதுக்கல் வடிவங்களும் எளிமையானவை. 

    இச் சந்திரவட்டக்கல்லில் உள்ள செதுக்கல்களாக நடுவே அரைத்தாமரையும் அடுத்து கொடியலங்காரமும் அடுத்து குதிரை வரிசையும், அடுத்து யானை வரிசை, அடுத்து அன்னப்பட்சி கொண்ட அலங்காரமும் இறுதியில் தீச்சுடரும் செதுக்கப்பட்டுள்ளது. 

    அநுராதபுரக்கால சந்திரவட்டக்கல்லில் வெளிவரிசையில் இருந்த தீச்சுவாலை பொலனறுவைக் காலத்தில் கூடுதலாக உள்வரிசையில் செதுக்கப்பட்டுள்ளது. அன்னக்கொடி வரிசையை முதல் வரிசைக்கு பயன்படுத்திய சந்திரவட்டக்கற்களும் உண்டு. 

    பொனறுவைக்காலச் சந்திரவட்டக்கல்லுக்கும் அனுராதபுரக்காலச் சந்திரவட்டக்கல்லுக்கும் இடையில் வேறுபாடகவுள்ளவை பொலனறுவைச் சந்திரவட்டக்கல்லில் மிருகவடிவங்கள் தனி வரிசையாக செதுக்கப்பட்டுள்ளமையும், எருது மற்றும் சிங்க வடிவங்கள் காணப்படாமையும் ஆகும். எருது வடிவம் நீக்கப்பட்டமைக்கான காரணம் அக் காலத்தில் நிலவிய சோழர் ஆட்சி ஆகும். சோழர் இந்து சமயத்தவர் இந்துமதத்தின் புனித சின்னம் எருதாக இருப்பதால் நீக்கப்பட்டது. 

    பொலனறுவை வட்டதாகே வாசலில் காணப்படும் சந்திரவட்டக்கற்கள் ஒவ்வொன்றும் வேறுபட்டவை. பொலனறுவை வட்டதாகேயில் உள்ள உருவங்கள் இட நெருக்கடி குறைவாகவுள்ளது. வட்டதாகேயின் ஒரு சந்திரவட்டக்கல்லில் தீச்சுவாலை வட்டத்தோடு உள்ள பகுதியில் அன்னக்கொடி பயன்படுத்தப்பட்டுள்ளது. விலங்குருவங்கள் ஒவ்வொரு வரிசையில் அமைக்கப்பட்டுள்ளது. இவை இடப்புறத்தில் இருந்து வலப்புறமாக ஓடுவது போல் செதுக்கப்பட்டுள்ளது. இதில் சூலகம் அற்ற ஒரு தாமரை உள்ளது. இன்னுமொரு சந்திரவட்டக்கல்லில் அன்னக்கொடி விலங்கு வரிசையொன்றும் இலைக்கொடி செதுக்கலொன்றும் காணப்படுகின்றது. அதில் முதலாவது குதிரை வரிசையாகும். அடுத்து யானைகளும் பின் இலைக்கொடியும் கல்லின் அடிவாரத்தில் அதாவது கரைப்பகுதியில் இலைக்கொடியினாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 

    பொலனறுவைக் கிரிவிகாரையின் வடக்கு வாயில் உள்ள சந்திரவட்டக்கல்லின் செதுக்கல் எளிமையான செதுக்கல்கள் அதிகமானவை. ராஜவைஷ்ய பூசாரி மண்டபத்திலுள்ள சந்திரவட்டக்கல்லும் முன்கூறிய சந்திரவட்டக்கல்லுக்குச் சமமாக இருப்பினும் செதுக்கல்களைப் பொறுத்தவரை தரமானவை எனக் கொள்ள முடியாது. 

    பொலனறுவை அட்டதாகே சந்திரவட்டக்கல் வடிவம் அரைவட்டத்திலும் அதிகமானது, விலங்குருவங்களை நெருக்கமாக அமைத்துள்ளனர். யானை, குதிரை, சிங்கம் போன்ற உருவங்களுடன் நடுவில் சூலகம் அற்ற ஒரு தாமரை மட்டுமே உள்ளது. 


கண்டிய காலச் சந்திரவட்டக்கல்

கண்டிக்காலத்தின் விகாரைகள் தேவாலயங்களுக்கருகில் அமைந்த சந்திரவட்டக்கல்லானது வடிவம், அமைப்பு என்பவற்றின் நிர்மாணத்தில் வேறுபட்டதாக முக்கோண வடிவில் அமைந்துள்ளது. செதுக்கலில் ஈடுபட்ட சிற்பிகளுக்கு தமது விருப்பப்படி புதிய அலங்காரங்களை உபயோகித்து நிர்மாணிக்கும் சுதந்திரம் இருந்துள்ளதாக நினைக்கத் தோன்றுகின்றது. 
எல்லாச் சந்திரவட்டக்கல்லிலும் இரு புறங்களிலும் சோளக்கதிர் மற்றும் கொடிச்(லியவெல) சிற்பவேலைப்பாட்டினைக் காணலாம். சந்திரவட்டக்கல்லின் மத்தியில் தாமரைப்பூவுக்குப் பதிலாக வட்டவடிவமாக இதழ்கள் செதுக்கப்பட்டுள்ளது. மத்தியில் உள்ள விட்டத்தைச் சுற்றியுள்ள கோடுகளில் மரச்செதுக்கல் கொடிகளிலான அலங்காரங்களைக் காணலாம். இக்காலச் சந்திரவட்டக்கல்லில் கோளவடிவான தொடர் அலங்காரவடிவங்கள் உபயோகிக்கப்பட்டுள்ளன. சந்திரவட்டக்கல்லின் முடிவிடங்களின் இருபுறமும் சிறிய வட்டவடிவமான அலங்கார அமைப்பு உள்ளது. சில சந்திரவட்டக்கற்களில் மகரம், கிபிகி போன்ற விலங்கு வடிவங்களும் அன்னம் போன்ற பறவை வடிவ அலங்காரமும் காணப்படுகின்றது. 
பொதுவாக இக்காலச்சந்திரவட்டக்கல்லில் செதுக்கல்கள் அதிகமாகவும் கரடுமுரடானதாகவும் உள்ளன. இதனால், கண்டியகால சந்திரவட்டக்கல்லானது வெறும் அலங்காரவடிவமைப்பாகவேயுள்ளது. முன்னைய இரு காலப்பகுதிக்குரிய சந்திரவட்டக்கல் போன்றல்லாது அர்த்தமற்ற வெறும் கவர்ச்சிக்கு செதுக்கப்பட்ட அலங்கார உருக்களாகவே இவை உள்ளன. எனவே கண்டியகால சந்திரவட்டக்கல்லில் கலைவனப்பு, அலங்கார வடிவமைப்புத்திறன் என்பன மரணித்துவிட்டதாக கலையாசிரியர்கள் கூறுகின்றனர். 
கண்டியகால சந்திரவட்டக்கல் காணப்படும் இடங்களாக களனிவிகாரை, தலதாமாளிகை, தெகல்தெறுவா விகாரை, கண்டி விஷ்ணு தேவாலயம் போன்ற இடங்கள் உள்ளன. 

கண்டி தலதாமாளிகைச் சந்திரவட்டக்கல்

    தலதாமாளிகை உருவச்சிலை வீட்டுக்கு உட்புகும் படிகளில் அடிப்பாதத்தில் உள்ள சந்திரவட்டக்கல்லலில் விலங்கினங்கள் காணப்படுகின்றன. அதன் மேற்பகுதியில் பதினாறு சிங்கங்களின் உருவங்களைக் கொண்ட ஒரு வரிசை காணப்படுகின்றது. அடுத்து அன்னங்களைக் கொண்ட ஒருவரிசையொன்றும் காணப்படுகின்றது. சந்திரவட்டக்கல் மத்தியில் பெரியதோர் தாமரைப்பூ உள்ளது. அதன் இரு பக்கமும் இரு பறவையுருக்கள் செதுக்கப்பட்டுள்ளன. சந்திரவட்டக்கல்லின் இருபுறமும் கொம்பு போன்ற இரு அலங்காரம் செதுக்கப்பட்டுள்ளது. இதன் உச்சியில் வட்டவடிவான கற்செதுக்கல் உள்ளது. இதில் பூவிதழ், அரும்பு, தாமரை இதழ் ஆகியவற்றால் செதுக்கப்பட்டுள்ளது. 
கண்டி விஷ்ணு தேவாலய சந்திரவட்டக்கல்
இது தொடர் கொடி வேலை அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட சந்திரவட்டக்கல்லாகும். அதன் மத்தியில் பூவிதழ் தொடர் இதழ்கள் என்பவற்றால் அலங்கரிக்கப்பட்ட தாமரைப் பூவொன்றின் வடிவத்தைக் கொண்ட செதுக்கல்களைக் கொண்டுள்ளது. சந்திரவட்டக்கல்லின் மேற்பகுதியின் உச்சியில் வட்டவடிவமான செதுக்கலைக் காணலாம். 



காவற்கல்

அரண்மனைகள், வழிபாட்டுத்தலங்கள் போன்றவற்றின் வாசலில் உட்செல்லும் படிக்கட்டின் இரு புறமும் சந்திரவட்டக்கலின் இரு புறத்திலும் காணப்படும் செதுக்கல் கொண்ட கற்கள் காவற்கற்கள் எனப்படும். இதன் கீழ்ப்பகுதி சதுரவடிவிலும் மேற்பகுதி அரை வட்டவடிவிலும் உள்ளன. இத்தூணாது அது பயன்படுத்தப்பட்டிருக்கும் கட்டிடத்தின் பாதுகாப்பிற்கும், சிறப்பை எடுத்துக்காட்டவும் படிக்கட்டின் பாதுகாப்பிற்கும் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

மிகப் பழைய காவறகற்களில் செதுக்கல்; உருவங்கள் காணப்படவில்லை. முதன் முதலில் வெறுமனே கல்லாக இருந்து பின்னரே கலசம், பாம்பு, கணங்கள், குள்ளர் உருவங்கள், துவாரபாலகர் உருவத்தைக் கொண்ட செதுக்கல் வடிவங்கள் செதுக்கப்பட்டன. இவை கலைநயமாக அரைப்புடைப்புச் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன. முற்காலத்தில் காவற்றூண்களில் உள்ள உருவங்கள் கலவைச் செதுக்கலினால் ஆக்கப்பட்டமையால் அவை பிற்காலத்தில் சேதத்திற்குள்ளாகி இருக்கலாம் எனப் பரணவிதான நம்புகிறார். எப்படியாயினும், பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட கற்றூண்களில் பலவித செதுக்கல்களைக் காணலாம். அநுராதபுரம் பொலனறுவைக்காலங்களில் கருங்கல்லில் செதுக்கப்பட்ட காவற்கல் பின்னர் செங்கல் சாந்து போன்ற ஊடகங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டன. 

காவற்கற்களில் பாம்பின் உருவம் கொண்ட காவற்கல் வைக்கப்பட்டால் என்றும் நீர்நிறைந்திருக்கும் என்பது ஐதீகமாகும். இதனால் குளக்கட்டு வாசலில் இவை வைக்கப்பட்டன. இவற்றை அநுராதபுரம் குட்டம் பொக்குணவில் காணலாம். 


அநுராதபுரக்கால காவற்கற்கள்

அனுராதபுரத்தில் உள்ள காவற்கற்களாக பின்வருவன உள்ளது. 
1. அநுராதபுர அரசமாளிகை வயில் காவற்கல் - துவாரபாலகர்
2. ரத்தின பிரசாத காவற்கல்
3. தூபராமைக்கு அருகில் உள்ள மகாமேகவன தோட்டத்தில் உள்ள காவற்கல்.
4. இசுறுமுனியா விகாரை காவற்கல்

அநுராதபுர அரசமாளிகை வாயிலில் அமைந்துள்ள விஐயபாகுமன்னன் காலத்து காவற்சிலையானது துவாரபாலகர் வடிவமுடையதாகும். பௌத்தகோயில் வாயிலின் இருமருங்கிலும் மற்றும் இந்துக் கோயிலின் இராஐகோபுரத்தின் இருமருங்கிலும் இன்றும் இவ்வடிவத்தினைக் காணமுடியும். உண்மையான ஒரு காவலாளியின் உயிர்த்துடிப்பும் தோற்றமும் கலைவனப்பும் கொண்ட சிற்பமாகவுள்ளது. துவாரபாலகரின் கிரீடத்தின் பின்புறத்தில் பாம்பின் உருவமும் கையில் காவலுக்குரிய கொட்டனும் காதில் காதணியும் கழுத்தில் மார்பை அழகு செய்யும் கழுத்தணிகளும் ஆடை அணிகளும் கொண்டுள்ள இச்சிற்பத்தில் சிற்பியின் கருத்துக்கள் நிரம்பவும் பிரதிபலிக்கின்றது. 
அடுத்து அனுராதபுரத்தில் மிக அதிகமாகக் காணப்படுவது நாகவடிவ  காவற்றூண்களாலும். ரூவன்வலிசாயாவுக்கு ஏறும் படிவரிசைகளுக்கு அண்மையில் நாக காவற்றூண்களைக் காணலாம். நிறைகுடம் கொண்ட காவற்றூண்களும் அனுராதபுரத்தில் நிர்மாணிக்கப்பட்ட மிகப்பழைய காவற்றூண் தொகுதியுடன் சேர்ந்து கொள்கின்றது.
இவை 1ம் நூற்றாண்டில் காணப்படும் காவற்றூண்களில் இருக்கலாம் என நம்பப்படுகின்றது. அத்தகைய காவற்றூண் ஒன்றை அனுராதபுரத்தின் தொல் பொருள் திணைக்களத்திற்குரிய நூதனசாலையில் நாம் காணலாம். 
இசுறுமுனியாவில் காணப்படும் காவற்றூணில் குள்ளன் ஒருவன் சங்கொன்றில் இருந்து வெளிப்படும் காசுக் கொடியைப் பற்றிப் பிடித்திருப்பதைக் காட்டும் விதமாக அமைந்துள்ளது.  இசுறுமுனியாவிலுள்ள காவற்றூண் செதுக்கலில் இருந்து குபேரனின் சங்கினையும் பதுமைகளையும் கொண்ட புதையலை வெளிக்காட்டுவதாக கலாநிதி பரணவிதான கூறுகிறார். இந்தியாவின் காவேரிப் பட்டினம் என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சங்கு பதுமை உருவங்களிலும் குள்ளர்கள் சங்கிலிருந்தும் பதுமம் ஒன்றிலிருந்தும் இழுபட்டு வரும் காசுக்கொடிகளை பிடித்துக் கொண்டிருக்கும் முறை காட்டப்பட்டுள்ளது. 
காவற்றூண் செதுக்கல் வடிவங்கள் அனைத்தினதும் ஒன்று திரட்டாக வாயிலோனைக் கொண்ட காவற்றூனைக் குறிப்பிடலாம். அலங்காரம் மிக்க இக் காவற்றூணில் மகா மேகவனத்தில் உள்ள ரத்னபிரசாதயவில் காணலாம். காவற்கல்லில் உபயோகித்த புன்கலசம், நாகவடிவம், பகிரவ வடிவம் என்பன ஒன்று சேர்ந்து நாகராஐதுவாரபாலகர் வடிவம் உருவாக்கப்பட்டது. 
இது 3ம் நூற்றாண்டு ஆட்சி செய்த கனிஷ்டதிஸ்ஸ அரசன் காலத்தில் குணராம தேவர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டது என நூல்களில் குறிப்பிட்டுள்ள இக் காவற்சிலை இரத்தினபிரசாதய எனப்படும். இக் காவற்றூணில் கீழ்ப்பகுதி சதுர அமைப்பைக் கொண்டிருப்பதுடன் மேற்பகுதி வட்டமான வடிவத்தையும் கொண்டுள்ளது. காவற்றூணின் சதுரப்பகுதியில் இரு புறத்திலும் கீழிருந்து மேலாக சிறிய இரு தூண்கள் செதுக்கப்பட்டுள்ளன. அவற்றின் மீது இரு மகரங்கள் காணப்படுகின்றன. இவ்விரண்டு மகரத் தோற்றத்தில் இருந்து வெளிப்படும் செதுக்கல்களினால் வட்டமான இரு பகுதியும் மூடப்பட்டுள்ளது. காவற்றூணின் ஒரு பகுதியில் இருந்து கீழ்நோக்கி வரும் தோரணத்தில் அலங்காரமும் தூணின் உச்சியில் உள்ள மகரத்தின் தலைவரை பரவியுள்ளது. காவற்றூணின் மத்தியில் மூவகை வளைவுகளையுடைய நாக அரசனின் உருவமொன்றுள்ளது. இவ்வாறான உருவம் ஒரு கையில் பூக் கொப்பொன்று போன்ற ஒன்றையும் மற்றக் கையால் நிறைகுடம் ஒன்றையும் பிடித்துக் கொணடுள்ளது. இது செல்வச் செழிப்பைக் காட்ட செதுக்கப்பட்டுள்ளது. நாக அரசனின் ஒரு காலில் அண்மையில் பைரவ ஒருவமொன்றுள்ளதும் நாக அரசனின் தலைக்குப் பின்னால் படமெடுத்த பல நாகங்களும் காணப்படுகின்றன.
நாக உருவமானது பல ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருப்பதும் ஆபரணங்களின் மிக நுட்பமான பகுதிகளையும் செதுக்கப்படும் உடலைத் தெளிவாகக் காட்டியும் பிண்ணியை விளக்கமாகக் காட்டியும் இருப்பதானது இந்தியாவின் குப்த சம்பிரதாயத்தின் அம்சங்களெனப் பரணவிதான கூறுகிறார்.
இச் செதுக்கல்கள் செம்மையாக இல்லாதிருப்பதுடன் எளிமையாகவும் உயிர்த் துடிப்புள்ளவையாகவும் உள்ளன. ஆனால் காலத்திற்கு காலம் வளர்சியடைந்த காவற்றூணின் வடிவம் அதிலுள்ள செதுக்கல்கள் படிப்படியாக பொலனறுவை தம்பதெனிய, கம்பளை, கண்டி காலங்களின் போது பொலிவிழந்து போயின என அவற்றை ஒப்பிட்டுப் பார்க்கும் போது தெரியவருகின்றது. 


பொலனறுவைக்கால காவற்கல்

    பொலனறுவைக்காலச் சந்திரவட்டக்கற்களின் அடிப்பாகம் சதுர வடிவாயும் மேல் வடிவம் வட்டவடிவையும் உடையது. பொலனறுவைக் காவற்கல்லின் முன்பக்கம் எளிமையான செதுக்கலினால் செதுக்கப்பட்டுள்ளது. இக்கால காவற்கல்லில் அனுராதபுரக்காலத்தைப் போன்று மூவகை வளைவுடன்; தலையில் ஏழு நாக பாம்புகளுடன் காணப்படும் நாகராஐவடிவம் உள்ளது. ஒரு கையில் நிறைகுடமும் மற்றைய கையில் தென்னம் பூ போன்ற ஒன்றையும் கொண்டிருக்கின்றது. இதனை அலங்கரிக்க தொங்கும் காதுகள் நீண்ட கைகள் ஆபரணங்கள் தொங்கும் இடுப்புப்பட்டி உடம்புடன் ஒட்டிய சுருக்கங்கள் கொண்ட ஆடைகள் என்பனவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. காவற்கல்லின் அடிப்பாகத்தில் பைரவனின் உருவம் காணப்படுகின்றது. ஆனால் சில காவற்கல்லில் பைரவ உருவங்களை விட வேறு உருவங்களும் உள்ளன. 

பொலனறுவையில் காவற்கற்கள் காணப்படும் இடங்களாக பின்வரும் இடங்கள் உள்ளன.

1. வட்டதாகே காவற்கல்

2. இலங்காதிலக காவற்கல்

3. திவங்க பிலிமகே காவற்கல்


பொலனறுவை வட்டதாகே காவற்கல்

    பொலனறுவை வட்டதாகேயின் பிரதான வாயிலின் மேல்படி வரிசையின் இருபுறமும் உள்ள காவற் செதுக்கல்கள் செம்மையாகவும் எளிமையாகவும் உள்ளன. அவை அநுராதபுரக்காலச் செதுக்கலை நினைவுபடுத்துகின்றன. ஏனைய காவற்கற்களில் உள்ள செதுக்கல்களைவிட புதுமையான செதுக்கல்கள் கொண்டும் காணப்படுகின்றன. காவற்கல்லின் செதுக்கலில் கரடுமுரடான தன்மை காணப்படுக்கின்றது. பொதுவாக காற்கல்லின் எளிமைத் தன்மை சற்றுக் குறைவாகவுள்ளது. பொலனறுவைக் காலத்தில் இந்தியாவின் கூடிய செல்வாக்குக் காரணமாக பல்லவ கலையம்சங்கள் அதிகமாக காணப்பட்டனவென்றாலும் பொலனறுவை நிர்மாணங்களில் காவற்கல் செதுக்கல்கள் முதலிடம் வகிக்கின்றன. 








கருத்துகள்