சிறப்பு வாய்ந்த பாரம்பரிய விலங்குருவங்கள்

சிறப்புவாய்ந்த விலங்குருவ அலங்கார வடிவங்களாக காணப்படுபவை ரிஷப குஞ்சரம், கிபிகி முகம், மகர உருவம், யாழி உருவம் போன்ற நான்கு விலங்குருவ அலங்காரங்களும் ஆகும். இந்த விலங்குருவ அலங்காரங்கள் ஒவ்வொன்றும் பல விலங்குருவங்களினாலோ அல்லது, விலங்குருவங்களின் உடற் பகுதிகளைக் கொண்டோ, ஒருங்கிணைத்து, ஒரு கற்பனை விலங்குருவாக, நிர்மாணிக்கப்பட்டிருப்பதனை அவதானிக்கலாம். இந்த சிறப்பு வாய்ந்த பாரம்பரிய விலங்குருவங்களை பார்க்கும்; போது, இவற்றை நிர்மாணித்த கலைஞனின் ஒருங்கிணைப்புத்திறன் சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டுள்ளதையும் அவதானிக்கலாம். ஏனெனில், பல விலங்குகளின் உடற்பாகங்களை ஒன்று சேர்த்து அல்லது ஒருங்கிணைத்து கற்பனையான ஒரு விலங்குருவினை கலைஞர் உருவாக்கியுள்ளார். அதாவது, தனது கற்பனையில் தோன்றிய அலங்கார விலங்குருவிற்குப் பொருத்தமான, விலங்குகளில் இருந்து, அதன் பாகங்களை எடுத்துப் பொருத்தி, அழகிய அலங்கார விலங்குருவை உருவாக்கியுள்ளார். அநேகமாக இந்த சிறப்பான பாரம்பரிய விலங்குருவங்களை பழமையான சுவரோவியங்களிலும், செதுக்கல்களிலும் காணக்கூடியதாக உள்ளது. 


ரிஷபகுஞ்சரம் அலங்காரம்




இந்த ரிஷபகுஞ்சர அலங்காரமானது யானையும் காளை மாடும் எதிரெதிராக நோக்கியிருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு யானையினதும் மாட்டினதும் தலைகளை ஒருங்கிணைத்து ஒரே தலையாக நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் இரண்டுக்கும் பொதுவாக ஒரு கண்மட்டும் வரையப்பட்டுள்ளது. அடுத்து, இங்கு மாட்டின் கொம்புகள் யானையின் தந்தங்களாக இடப்பட்டுள்ளது. யானையின் தும்பிக்கை மாட்டின் திமிலாக அமைந்துள்ளது. ஆகவே, நீங்கள் யானையின் உடலை மறைத்துக் கொண்டு பார்த்தீர்களேயானால் காளைமாடு தென்படும் அதேபோல், காளைமாட்டின் உடலை மறைத்துக் கொண்டு பார்த்தீர்களேயானால் யானையும் தென்படும். இதைப்போன்ற ஓவியங்களை குருநாகல் ரிதிவகாரையிலும் கண்டி தலதாமாளிகை, எம்பக்கே தேவாலயம் போன்ற இடங்களிலும் உள்ளது.

மகர உருவ அலங்காரம் 


இந்த மகர உருவ அலங்காரமானது, ஏழு விலங்குகளின் கூட்டுப்பலத்தினை எடுத்துக் காட்டும், ஒரு அமைப்பாக காணப்படுகிறது. அதாவது, யானையின் தும்பிக்கை, சிங்கத்தின் முன்னங்கால், முதலையின் பற்கள், மயிலின் இறகுகள், பன்றியின் காதுகள், குரங்கின் கண்கள், மீனின் உடல் என ஏழு விலங்குகளின் அங்கங்களின் சேர்க்கையால் இந்த மகர உருவம் அமைக்கப்பட்டுள்ளது. மங்களச்சின்னங்களில் ஒன்றாகக் கருதப்படுவதால் இந்த மகரமானது வணக்கத்தலங்களிலே கைபிடிச் சுவர்களை அலங்கரிப்பதற்காகவும், நுழைவாயிலின் மேலே அமைக்கப்படும் மகரதோரணத்திலும் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த மகர எண்ணக்கருவை அடிப்படையாகக் கொண்ட அலங்காரவடிவங்களை இந்தியா, சீனா, கிரேக்கம் போன்ற நாடுகளிலும் காணலாம்.




கிபிகி முக அலங்காரம்



இந்த கிபிகி முக அலங்காரத்தினையும் அதிகமாக வணக்கத்தலங்ளில்தான் பயன்படுத்துவார்கள். இதனைக் கீர்த்திமுக, கிஹிம்பி முக போன்ற பெயர்களாலும் அழைப்பார்கள். இந்த கிபிகி முகத்தினை மகரதோரணத்தில் இருபக்கமும் அமைந்துள்ள மகர உருவங்களுக்கு மத்தியிலே காணக்கூடியதாக உள்ளது. கிபிகி முகத்தினுடைய வாய் அகன்று காணப்படும். அதன் உதடுகள் சிவப்பு நிறத்தில் காணப்படும். வாயின் இரு புறத்திலும் நீண்டு வளைந்த இரு கூரான பற்கள் காணப்படுகிறது. இப்பற்கள் இரண்டும் அலங்கார கொடிவலை நிர்மாணிப்பாக அமைக்கப்பட்டுள்ளது. இதைவிட இதன் விழிகள் உருண்டையான பெரிய விழிகளாகக் காணப்படுகிறது. பயமுறுத்தும் அல்லது கோபங் கொண்ட ஒரு விலங்கின் உணர்வுகளை வெளிக்காட்டும் ஒரு முகமாக இந்த கிபிகி முகம் காணப்படுகிறது. இந்த கிபிகி முக உருவத்திலும் பல்வேறுபட்ட விலங்குகளின் உடற்பாகங்கள் ஒருங்கமைக்கப்பட்டுள்ளதை உணரக்கூடியதாக உள்ளது. 




யாழி உருவ அலங்காரம்


யாழி வடிவம் என்பது புராணக்கதைகளில் கூறப்பட்ட ஒரு கற்பனை வடிவமாகும். மிகப் பழமையான நிர்மாணிப்பான இந்த யாளி வடிவத்தினை கலைசார் நிர்மாணிப்பாக தென்னிந்திய சிற்ப கலைவடிவங்களில் அதிகமாக பயன்படுத்தியுள்ளனர். அனேகமாக இதனை இந்துக் கோயில்களில் காணக்கூடியதாக உள்ளது. அதாவது, ஆலய மண்டபத்தின் உட்புற தூண்களுடன் இணைந்ததாக இந்த யாழி வடிவம் அமைக்கப்பட்டிருக்கும். யாளிகள் பொதுவாக சிங்கத்தின் உடல் அமைப்பைக் கொண்டுள்ளன. அவற்றின் தலைகளோ வேறு ஒரு விலங்கின் சாயலில் வடிவமைக்கப்படுகின்றன. இந்த யாழியின் தலையை நிர்மாணிப்பதற்காக யானை, சிங்கம், குதிரை, ஆடு போன்ற விலங்குகளின் தலைகளை உபயோகித்துள்ளார்கள். இவற்றிலே சிங்கத்தலை கொண்ட யாளி உருவத்தினை சிம்ம யாளி எனவும், ஆட்டுத்தலை கொண்ட யாழி வடிவத்தினை மகர யாளி எனவும் யானை முகம் கொண்ட யாளி வடிவத்தினை யானை யாழி எனவும் அழைப்பார்கள். இந்த யாளி வடிவத்தில் பலம், பாதுகாப்பு என்பவற்றை குறிக்கும் விலங்கு வடிவங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளமையால் யாளிகள் கோவில்களை பாதுகாப்பதாகவும், மக்களை ஆலயத்திற்கு வழி நடத்துவதாகவும் நம்பப்பட்டது. கோயில் மரவாகனங்களான தேர், மஞ்சம் போன்றவற்றிலும் அழகிய யாளி உருவங்களைக் காணலாம். முதலாம் ஆதித்யன் மற்றும் பராந்த சோழனால் கருங்கற்களை கொண்டு முதன்முதலில் கோவில்கள் கலைநயத்துடன் கட்டப்பட்டன. அதில் தொடங்கி, மற்ற கோவில்களிலும் யாளி முக்கிய இடம் பெற்றது. தென்னிந்திய ஆலயங்களில் காணப்படும் யாளி உருவமானது இலங்கையில் காணப்படும் யாழி உருவத்திற்கு ஒத்த தன்மையைக் கொண்டிருக்கின்றது. 




கருத்துகள்