ஓவியர் மாற்கு

யாழ்ப்பணத்து தமிழ் மக்களிடையே மட்டுமல்லாது இலங்கைத் தமிழ் பேசும் மக்களிடையே நவீன ஓவியம் பற்றிய ஒரு விழிப்புணர்வையும் ஆர்வத்தையும் இரசனையையும் ஏற்படுத்திய ஒருவர் என்றால் ஓவியர் மாற்கினைக் குறிப்பிடலாம். யாழ்ப்பாண மக்களிடையே மரபுவழி உயிரோவியங்களுக்கு பிரசித்தி பெற்ற ஒருவராக விளங்கியவர் ஆட்டிஸ் மணியம் என அழைக்கப்படும் பெரியதம்பி சுப்பிரமணியம் ஆவார். அதே போன்று நவீன ஓவியங்கள் என்றால் மாற்கு என்று கூறும் அளவிற்கு மக்களிடையே பிரபல்யம் பெற்று விளங்கியவர்தான் ஓவியர் மாற்கு அவர்கள். 


மேலைத்தேச நவீன ஓவியர் பிக்காசோவின் படைப்புக்களின் ஓவியப்பாணியைப் பின்பற்றி இலங்கை ஓவியரான ஜோஜ்கீற் தனது ஓவியங்களை படைத்ததைப் போன்று, மாற்கு அவர்களும் தனது படைப்புக்களுக்கு பிக்காசோவின் பாணியை தனக்கேயுரித்தான விதத்தில் உபயோகித்தார். 

1933ம் ஆண்டு யாழ்ப்பாணம் குருநகரில் பிறந்த ஓவியர் மாற்கு அவர்கள் ஓவியக்கலையிலும் சிற்பக்கலையிலும் திறமைகாட்டிய ஒரு கலைஞராவார். சிறுவயது முதலே ஓவியத்திலும் சிற்பத்திலும் ஆர்வம் கொண்டிருந்த மாற்கு அவர்கள் யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரியிலே எட்டாம் வகுப்பு படிக்கும் போது அவரது வகுப்பாசிரியராக இருந்த குருவானவர் மார்சலின் ஜெயக்கொடி அவர்களை சிறந்த முறையில் ஓவியமாக வரைந்து அவரிடம் கொடுத்து பாராட்டைப் பெற்றார். இக் காலப்பகுதியில் சென்.சாள்ஸ் பாடசாலையில் ஓவியர் எஸ்.பெனடிக் அவர்கள் மாலை நேரங்களில் நடாத்திய ஓவிய வகுப்புக்கள் இவருக்கு ஓவியத்தில் நல்ல அடிப்படை அறிவை பெற்றுக் கொடுத்தது. 

ஓவியத்தில் உயர்பட்டப் படிப்பினை மேற்கொள்வதற்காக 1953இல் கொழும்பு நுண்கலைக்கல்லூரியில் சேர்ந்து 5 வருடங்கள் கலைத்துறையில் கல்வி கற்று பட்டம் பெற்றார். அக் கல்லூரியில் விரிவுரையாளராகவும், புகழ்பெற்ற ஓவியருமாக இருந்த டேவிட் பெயின்ரரின் அபிமானத்தைப் பெற்ற ஒரு காணப்பட்டார். 1955இல் நுண்கலைக் கல்லூரியில் நடந்த வருடாந்த கண்காட்சியில் ஒரு மாணவர்களிடமிருந்து 2 அல்லது 3 ஓவியங்களே தெரிவு செய்யப்பட்டபோதும் மாற்கு அவர்களினது 21 ஓவியங்கள் தெரிவு செய்யப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டமை அவரது திறமையை மேலும் எடுத்துக் காட்டுவதாக உள்ளது. 

ஆரம்ப காலத்தில் இவரது ஓவியங்கள் கிறிஸ்தவ மதசம்பந்தமானதாக, குறிப்பாக இயேசுக்கிறிஸ்துவின் உருவங்களைச் சித்தரிப்பனவாய் அமைந்திருந்தன. 1957ம் ஆண்டு கலாபவனத்தில் நடைபெற்ற வருடாந்த ஓவியக்கண்காட்சியில் இரண்டாம் இடத்தினைப் பெற்றுக் கொண்டார். 

ஓவியத்துறையில் உயர்படிப்பை முடித்த மாற்கு அவர்கள் சமூகத்தின் ஆதரவு இல்லாது சலிப்படைந்திருந்த ஓவியர்களை ஊக்குவிக்கும் முகமாகவும் இளம் ஓவியர்களுக்கு பயிற்சியளித்து ஓவியத்துறையை மக்கள் மயப்படுத்தும் நோக்கிலும் யாழ்ப்பாணத்தில் 'விடுமுறைக்கால ஓவியர் குழு' என்ற ஒரு அமைப்பை நிறுவி சித்திர வகுப்புக்களை நடத்தியதோடு, சித்திரக்கண்காட்சிகளையும் நடத்தி இளம் ஓவியர்களை சமூகத்திற்கு அறிமுகப்படுத்தினார். இதன் மூலமே ஓவியர் மாற்கு 1980களில் ஒரு சிறந்த ஓவியராகவும், சித்திர ஆசிரியராகவும் பிரபல்யம் பெற்றார். 

ஓவியர் மாற்குவின் படைப்புக்களின் இயல்பிற்கமைய அவற்றை இரண்டாகப் பிரிக்கலாம்.

1. நிறங்களை அடிப்படையாகக் கொண்ட காலம்

2. கோடுகளை அடிப்படையாகக் கொண்ட காலம்

  நிறங்களை அடிப்படையாகக் கொண்ட காலம் எனப் பார்க்கும் போது இருண்டகாலம், வெண்காலம், நீலக்காலம் என வேறு பிரிக்க முடியும். ஓவியர் மாற்கு அவர்கள் கலைக்கல்லூரியில் தனது படிப்பை முடித்து வெளிவரும் போது இருண்ட நிற ஓவியம் வரைதல் அல்லது கழுவுதற்பாணி ஓவியம் வரைவதில் ஆர்வமுடையவராக இருந்தார். இதனை வரைய நீர்வர்ண ஊடகத்தை அவர் தெரிந்து கொண்டார். இந்த இருண்ட வர்ண ஓவியம் வரையும் போது பிரகாசமான வர்ணங்களுடன் பிறவர்ணங்கள் கலக்கப்பட்டு ஓவியம் தீட்டப்பட்டதால், கலங்கலான தோற்றத்தை இவை கொடுத்தன. 

1970ம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து 1980ம் ஆண்டுகாலப்பகுதி வரை கோடுகளை அடிப்படையாகக் கொண்ட சித்திரங்களை அதிகமாக வரைந்துள்ளார். இக்காலத்தினை கனவடிவாதக் காலம் எனக்குறிப்பிடலாம். இதற்கு பிரபல இந்திய ஓவியர் ஹூசைனின் ஓவியச் செல்வாக்கிற்கு உட்பட்டு வரைந்ததாக ஓவியர் மாற்கு குறிப்பிடுகிறார். ஆனாலும் பிற்பட்ட காலத்தில் முற்றிலும் தனக்கே உரித்தான ஓரு பாணியை மாற்கு அவர்கள் அமைத்துக் கொண்டார். 

ஓவியர் மாற்கு அவர்கள் ஓவியங்களை வரைவதற்கு நீர் வர்ணம், பஸ்ரல் வர்ணம், கலப்புச்சாதனம், ஓட்டுச்சித்திரம் ஆகியவற்றை ஊடகமாகப் பயன்படுத்தினார். கூடுதலாக ஓவியர்கள் ஓவியம் வரைவதென்றால் ஓவியக்கூடம், எண்ணெய்வர்ணம், கன்வஸ்துணி என்பன இருந்தால்தான் ஓவியம் படைக்க முடியும் என்பார்கள். ஆனால் ஓவியர் மாற்கு அவர்கள் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பதற்கிணங்க அதிகளவாகப் பயன்படுத்திய ஊடகமாக இருப்பது பஸ்ரல் வர்ணம் ஆகும். இதனைப் பயன்படுத்தி பேப்பர், மட்டை போன்றவற்றில் ஓவியங்களை வரைந்தார். அக்காலப்பகுதியில் காணப்பட்ட பொருளாதார நெருக்கடியால் தரமான வர்ண ஊடகங்களைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல்நிலை ஆகும். அவர் தனது பெரும்பாலான ஓவியங்களை மாணவர்களுக்கு ஓவிய வகுப்பு நடைபெறும் போது வரைந்தவை என கூறப்படுகிறது. 

1980 வரை சமூகத்தில் குறிப்பாக கிராமிய தன்மைகளை பிரதிபலிக்கும் ஓவியங்களை வரைந்த ஓவியர் மாற்கு அவர்கள் அதன் பின்னர் நடைபெற்ற இனக்கலவரம், போர்ச்சூழல் என்பவற்றின் காரணமாக அவருடைய படைப்புக்களிலும் அவற்றை வெளிப்படுத்த தொடங்கினார். 

இவருடைய சிறந்த ஓவிப்படைப்புக்கள் 

1. சகுந்தலை 

2. தாண்டவம் 

3. காவடியாட்டம் 

4. ராகமாலிகை என்பனவற்றைக் கூறலாம்.

இதேபோன்று ஓவியர் மாற்குவின் சிற்பப் படைப்புகளைப் பார்க்கும் போது இவற்றிலும் கனவடிவாதத் தனமையை அதிகம் காணக்கூடியதாக உள்ளது. அதிலும் ஹன்றிமூரின் சிற்ப படைப்புகளின் செல்வாக்கினை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. அத்துடன் தனக்கே உரித்தான நவீன உத்தியையும் கையாண்டு சிற்பங்களைப் படைத்தார். 

ஓவியர் மாற்குவின் சகுந்தலை 

இந்த ஓவியமானது காளிதாசரினால் எழுதப்பட்ட சாகுந்தலம் என்னும் காவியத்தில் வரும் பிரதான பாத்திரமான சகுந்தலையை கருப்பொருளாகக் கொண்டு வரையப்பட்டுள்ளது. இந்த ஓவியத்தினை பார்க்கும் போது பெண்ணுருவத்தின் இயல்பான தன்மையை விஞ்சி மிகைப்படுத்தப்பட்ட விகாரப்படுத்தல் அல்லது எளிமைப்படுத்தல் சார்ந்த கலைத்துவப் பண்புகளைக் காட்டி நிற்கின்றது. கனவடிவாதப்பாணியின் இயல்புகள் இப்படைப்பின் மீது செல்வாக்குச் செலுத்தியுள்ளதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. சாகுந்தலை என்னும் பெண்ணுருவானது கனவடிவாத தளவுருக்களைக் கொண்டு வரையப்பட்டு இளநிறமும் தீட்டப்பட்டதால் இருபரிமாண இயல்புகள் வெளிப்படுத்துகிறது. ஆனால், உருவத்தினைச் சூழ வரையப்பட்டுள்ள கோடுகளை அவதானித்தால், அவை பல்வேறுபட்ட தடிப்பில் வரையப்பட்டுள்ளது. இதனால் ஓவியத்தில் முப்பரிமாணத்தன்மை வெளிப்படுத்த முயற்சிக்கப்பட்டுள்ளதை அவதானிக்கலாம். சித்திரத்தின் பின்ணணியில் உள்ள இருண்ட நிறம் தளம் முழுவதும் ஒரே சீராக பியோகிக்கப்பட்டுள்ளதால் முன்ணணியில் உள்ள ஒவியக்கருப்பொருள் தெளிவாகக் காட்டபட்டுள்ளது. 

இங்கு ஓவியர் சகுந்தலையின் உருவத்தினை காட்ட முயற்சி செய்யாது, காலில் குத்திய முள்ளை எடுக்கும் போது அதனால் அவளுக்கு ஏற்படும் வேதனை அல்லது வலி உணர்வினை வெளிப்படுத்துவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளமையே இந்த ஓவியத்தின் சிறப்பும் வெற்றியுமாக உள்ளது. 

ஓவியர் மாற்கு அவர்களின் நவீன சிற்பம் 



இது மனிதனும் நாய்களும் என்னும் சிற்பமாகும். இதனை கலைஞர் மாற்கு அவர்கள் புதிய ஒரு நுட்பமுறையில் உருவாக்கியுள்ளார். எவ்வாறெனில், சூழலில் கிடந்து பொறுக்கி எடுத்த கழிவுப் பொருட்கள் குறிப்பாக பிளாஸ்ரிக் போத்தல்கள், பிளாஸ்ரிக் குழாய்கள் போன்றவற்றைக் கொண்டு இச்சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பத்தினைப் பார்த்தீர்களானால், சிறியதும் பெரியதுமான இரண்டு நாய்கள் முன்னங்கால்களை உயர்த்தி பின்னங்கால்களில் நிற்கின்றன. இந்த இரு நாய்களுக்கும் முன்பாக நாய்களை விட சிறியதான ஒரு மனித உருவம் நாய்களைப் பார்த்து இரு கைகளையும் உயர்தியவாறு நிற்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது. மூன்று விதமான அளவுகளையுடைய பிளாஸ்ரிக் போத்தல்களைக் கொண்டு சந்தத்திற்கு அமையவும் சமநிலையாகவும் வெட்டி உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. போத்தலின் வெளித்துருத்திய மற்றும் உட்குழிந்த பகுதிகளால் உருவம் அமைக்கப்பட்டுள்ளது. கனவடிவாத கலைப்பண்பும் ஹன்றிமூரின் சிற்பங்களின் கலைப்பண்புகளான சிறிய தலை நீண்ட உடல் போன்றவற்றை இச்சிற்பத்தில் காணக்கூடியதாக உள்ளது. இந்த சிற்ப ஆக்கமானது விபரிப்புத்தன்மையற்ற எளிமையான ஒரு சிற்ப ஆக்கமாக காணப்படுகின்றது.

'கலைஞன் சுயாதீனமுள்ளவன் என்ற வகையில் கட்டுப்பாடுகளையும் நியமங்களையும் மீறி தேடலை மேற்கொள்ள வேண்டும். கால வேகத்தின் போக்குக்கு ஏற்ப நவீன ஓவியங்கள் மிகவும் அத்தியாவசியமானதே. எப்படி கவிதை இலக்கியத்தில், புதுக்கவிதை தவிர்க்கப்பட முடியாத அம்சமாகிவிட்டதோ அதே போல் ஓவியக்கலையில் அழனநசn யசவ தவிர்க்கப்பட முடியாத அம்சமாகி விட்டது என மாற்கு குறிப்பிடுகின்றார்.

இவருக்கு எல் கிரக்கோ என்ற ஸ்பானிய ஓவியர் நன்கு பிடித்தவராக இருந்தார். எனினும், செஸான், பிக்காசோ போன்ற மேலைத்தேச கலைஞர்களும் அவருக்கு பிடித்த கலைஞர்களாக இருந்தனர்.

மிக எளிமையான மனிதரான மாற்கு அவர்கள் தனக்கு பின் பெரியதொரு மாணவர் பரம்பரையையே உருவாக்கியிருக்கிறார். மாற்கு அவர்களின் முதலாவது ஓவிய சிற்பக் கண்காட்சி அவரது 57வது வயதில் யாழ்ப்பாணம் செஞ்சிலுவைச் சங்க யாழ்ப்பிரிவின் அனுசரனையுடன் நிகழ்ந்தது. பெரிய பணவசதி இல்லாமலே அற்புதமான தனது திறமையைக் காட்டிய மாற்கு அவர்கள் 2000ம் ஆண்டு தனது 67வது இறைவனடி சேர்ந்தார். 



ஓவியர் மாற்கு பற்றிய வீடியோ பாட அலகினைப் பார்வையிட இதன் மேல் கிளிக் செய்யுங்கள்.






கருத்துகள்