பெண் உருவங்கள் அடங்கிய சிறப்புவாய்ந்த பாரம்பரிய அலங்கார வடிவங்கள்

 

பெண் உருவங்கள் அடங்கிய சிறப்புவாய்ந்த பாரம்பரிய அலங்கார வடிவங்கள்

    பெண்ணுருவங்கள் அடங்கிய சிறப்புவாய்ந்த பாரம்பரிய அலங்காரங்கள் என்னும் போது இங்குள்ள சிறப்பான விடயம் ஒரு பொருள் ஒன்றின் வடிவத்தையோ, அல்லது ஒரு விலங்கின் வடிவத்தையோ பெண் உருவங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டு இருத்தலே இதன் சிறப்பான அம்சமாகும்.

    இந்தவகையில் பின்வரும் அலங்காரங்களான சதுர்நாரி பல்லக்கு, சப்தநாரி பல்லக்கு, சப்த நாரி ரதம், நவநாரி குஞ்சரம், பஞ்ச நாரி கலசம், நாரிலதாமலர் போன்ற சிறப்புவாய்ந்த அலங்காரங்கள் பற்றி பார்ப்போம்.

    நாரி என்பதன் பொருள் பெண் ஆகும். ஒரு வடிவம் கொண்டுள்ள பெண்களின் எண்ணிக்கையைக் கொண்டு அலங்காரங்களுக்கு பெயரிடப்பட்டுள்ளது. 

ஏனைய அலங்காரங்கள் போன்று இந்த பாரம்பரிய அலங்காரங்களையும் சுவரோவியங்களிலும், செதுக்கல்களிலும் பார்க்க முடியும். 

1. சதுர்நாரி பல்லக்கு 

    நான்கு பெண் உருவங்களைக் கொண்டு இந்த பல்லாக்கை நிர்மானித்துள்ளதால் இது சதுர்நாரி பல்லக்கு என அழைக்கப்படுகிறது. பல்லக்கின் உள்ளே தாமரை மலரை ஏந்திய தெய்வ உருவம் ஒன்றும் காணப்படுகிறது. இந்த அலங்காரத்தினை தலதாமாளிகையின் மேல் மாடியிலே உள்ள உட்கூரையின் செவ்வக வடிவ நிரலில் பார்க்க முடியும். 

2. சப்தநாரி பல்லக்கு
இந்தப்பல்லாக்கு வடிவமானது ஏழு பெண் உருவங்களைக் கொண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. சப்த என்றால் ஏழு. எனவே, ஏழு பெண் உருவங்களைக் கொண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளதால் சப்தநாரி பல்லாக்கு என அழைக்கப்படுகிறது. இதைப் போன்ற ஓவியத்தினை தலதாமாளிகையின் வெளிமாடத்தில் பார்க்க முடியும்.

3. சப்தநாரி ரதம்
இங்கு 7 பெண் உருவங்களைக் கொண்டு ஒரு இரதம் அல்லது தேர் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை சப்தநாரி இரதம் என அழைப்பார்கள். இங்கு தேர்ச்சில்லாக இரு பெண்கள் பின்புறமாக வளைந்து இரு பாதங்களையும் தலையால் தொட்ட வண்ணமுள்ளனர். இரதத்தின் உச்சியில் கிரீடம் அணிந்த பெண் ஒருவர் இரு கைகளிலும் சீன மலரை ஏந்திய வண்ணம் உள்ளார். தேரின் உள்ளே பத்தினி தெய்வம் உள்ளது. இந்த ஓவியத்தினை தலதாமாளிகையின் வெளிப்புற மாடத்தில் பார்க்க முடியும்.

4. நவநாரி குஞ்சரம்
குஞ்சரம் என்பது யானையைக் குறிக்கும். இது ஒன்பது பெண்ணுருவங்களைக் கொண்டு நிர்மாணிக்கப்பட்ட ஒரு தந்தம் கொண்ட ஒரு யானையின் வடிவம் என்பதால், நவநாரி குஞ்சரம் என அழைக்கப்படுகிறது. இதனை கண்டி தலதாமாளிகையின் வெளிப்புற மாட உட்கூரையில் பார்க்க முடியும்.

5. பஞ்ச நாரி கலசம்
ஜந்து பெண்ணுருவங்களைக் கொண்டு இந்த கலச வடிவம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பழமைவாய்ந்த விகாரைகளிலும் பாரம்பரிய கலைக் கைத்தொழில்களிலும் இதனை ஓவியமாகவும் செதுக்கல்களாகவும் அமைக்கப்பட்டுள்ளது. கலசம் என்பது செழிப்பை அடையாளப்படுத்துவதாக பேராசிரியர் எதிரிவீர சரச்சந்திர அவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளார். பாரம்பரிய கைத்தொழில்களிலே யானைத்தந்த செதுக்கல்களிலே அதிகமாகக் இந்த பஞ்சநாரி கலச வடிவ அலங்காரத்தைக் காணலாம். ரிதி விகாரையின் கதவில் யானைத்தந்தத்தில் செதுக்கப்பட்ட பஞ்சநாரிகலம் உள்ளது. இது மிக உயர்வான ஒரு கலைப்படைப்பாக உள்ளது. 

6. நாரிலதாமலர் அலங்காரம்
இந்த நாரிலதா மலரானது ஒரு பெண்ணையும் மலர்க்கொடி அலங்காரத்தையும் ஒருங்கமைத்து நிர்மாணிக்கப்பட்டுள்ளது. பெண்ணின் இடுப்பிற்கு கீழ்ப்பட்ட பகுதியானது மலர்ந்த மலர் பூக்கொடி அலங்காரமாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த நாரிலதாமலரானது காட்டில் தியானம் செய்யும் முனிவர்களின் தியானத்தைக் கூட கலைக்கக்கூடிய எனக் கூறப்படுகிறது. இந்த நாரிலதா உருவின் பெண் வடிவம் விசித்திரமான ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பழமையான விகாரைகளில் நாரிலதா மலரானது பலவிதமான முறையில் ஓவியங்களுடன் வரையப்பட்டுள்ளது. உதாரணமாக எம்பக்கே தேவாலய மரச்செதுக்கலிலும் தலதாமாளிகை ஓவியங்களிலும் காணக்கூடியதாக உள்ளது.  

பெண் உருவங்கள் அடங்கிய சிறப்புவாய்ந்த பாரம்பரிய அலங்கார வடிவங்கள்வீடியோ பட அலகினை பார்க்க கீழே உள்ள லிங்கினைக் கிளிக் செய்யவும்.








கருத்துகள்