நிஸ்ஸங்கலதா மண்டபம்

இந்த நிசங்கலதா மண்டபமானது பொலனறுவைக்கால சிற்பிகளின் உன்னதமான கலைத்திறனை எடுத்துக் காட்டும் நிர்மாணமாகவும், இலங்கையில் காணப்படும் கருங்கல்லினாலான மண்டபமாகவும் நிஸ்ஸங்கலதா மண்டபம் காணப்படுகின்றது. கலிங்கநாட்டை ஆண்ட கலிங்க ஜயகோப அரசனின் மகனான. நிஸங்கமல்ல மன்னன்   கி.பி 1187 இல் இருந்து 1196 வரையான ஒரு குறுகிய காலமே ஆட்சி செய்தான். இருந்த போதிலும், இவனது காலத்தில் செய்யப்பட்ட நிர்மாணிப்புகள் அரிய கலைப்படைப்புக்களாக உள்ளன. 

 பொலனறுவைக் காலப்பகுதியில் நிஸ்ஸங்கமல்ல மன்னனால் அமைக்கப்பட்ட பௌத்த மதம் சார்ந்த கட்டிடமே இந்த நிஸ்ஸங்கலதா மண்டபமாகும்.. இதனால் இம்மண்டபத்தினை நிஸ்ஸங்கலதா மண்டபம் என அழைக்கின்றனர். 

அழகாகவும் சிறப்பாகவும் நிர்மாணிக்கப்பட்ட இந்த மண்டபத்தினை நிஸ்ஸங்கமல்ல மன்னன் முக்கியமாக தர்மபோதனையைக் கேட்பதற்கான உபதேச மண்டபமாக பாவித்ததாகவும் புனித தந்த தாதுவை வழிபடும் இடமாக பயன்படுத்தியுள்ளதாகவும் பேராசிரியர் செனரத் பரணவிதான அவர்கள் ஆதாரங்களுடன் முன்வைக்கிறார். இங்குள்ள தூண்களிலும் சுருங்கைகளிலும் காணப்படும் குறிப்புகளின் படி இவற்றை அறியக்கூடியதாக இருப்பதாகக் பரணவிதான கூறுகின்றார். 

நிசங்கலதா மண்டபத்தின் கலைத்துவப் பண்புகள் 

34அடி 8 அங்குல நீளமும் 28 அடி 8 அங்குல அகலமும் உடைய உயரமான செவ்வக வடிவ மேடை ஒன்றின் மீது இம்மண்டபம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தில் விசேட அம்சமாக காணப்படுவது இங்குள்ள தூண்கள் ஆகும். இத்தூண்கள் தாமரைத் தண்டின் வடிவில் கலைநயம்மிக்கதாக அமைக்கப்பட்டுள்ளமையே இதன் விசேட அம்சமாகும். இந்த மண்டபத்தில் 7அடி உயரமுடைய 8 தூண்கள் உள்ளன. இத்தூண்கள் கீழிருந்து மேல் நோக்கிச் செல்லும் போது தாமரைத் தண்டைப் போல் ஒடுங்கிச்; செல்கின்றமையைக் காணலாம். கற்றூண்களின் உச்சியில் அதாவது போதிகைப் பகுதியானது மலர்ந்த தாமரைப் பூ வடிவ அமைப்பில் செதுக்கப்பட்டுள்ளது. தூணின் இடையிடையே அரைப்புடைப்பு முறையில் தாமரை இலை வடிவிலான லியவெல அலங்காரம் செதுக்கப்பட்டுள்ளது. 

பொலனறுவைக்கால மனித உருவ ஓவியங்களிலும் காவற்கற்களிலும் திவங்க சிலைமனை சிலைகளிலும் பொதுவாக திரிபங்கநிலை காட்டப்பட்டிருப்பதை அவதானிக்கலாம். இதே போன்று தாமரைத் தண்டின் அமைப்பிலே செதுக்கப்பட்ட இத்தூண்கள் உயிரோட்டமாக அமைவதற்காக சிற்பி இத்தூண்களை மூன்று வளைவுகளுடன் அதாவது திரிபங்க நிலையில் அமைந்துள்ளதைப் போல் செதுக்கியுள்ளமை சிறப்பாக உள்ளது. மிகவும் கவனமாகவும் தெளிவாகவும்; கருங்கற்களில் தாமரைத் தண்டு வடிவில் செதுக்கப்பட்ட இத்தூண்களை இலங்கையில் எங்குமே காணமுடியாது. மிகவும் கடினமான இந்த வேலையைச் சிற்பி நளினமான முறையில் சிறப்பாகச் செதுக்கியுள்ளார். 

கூரையானது தற்போது காணப்படவில்லை. ஆனால், அது மரத்தால் அமைக்கப்பட்டதால் காலத்தால் அழிவடைந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது. நிஸ்ஸங்கலதா மண்டபத்தின் தரையானது கற்கள் பதிக்கப்பட்டு செப்பனிடப்பட்டுள்ளது. கட்டிடத்தின் அடிப்பாகத்தில் மனித உருவங்கள் வணங்குவது போன்று செதுக்கப்பட்டுள்ளது. இம்மண்டபத்தின் நடுவில் வணங்குவதற்காக நீர்க்குமிழி வடிவ தாதுகோபம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இத்தாதுகோபத்தின் அடியில் வணங்கும் மனித உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளதைக் காணலாம். இவற்றுடன் இம் மண்டபத்தில் சிம்மாசனம், காவற்கல், சந்திரவட்டக்கல் என்பனவும் காணப்படுகின்றது. 

மண்டபத்தில் நுழைய ஒரு வாசல் மட்டுமே உள்ளது. இம்மண்டபத்தினைச் சுற்றி கிடையான நிலைக்குத்தான கருங்கற் பாலங்களால் கல்வேலியொன்று சுற்றிவர அமைக்கப்பட்டுள்ளது. அதன் நீளம் 43அடியும் அகலம் 28 அடியும் ஆகும். இக் கல்வேலியானது தூண்களாலும் குறுக்குத் தூண்களாலும் அமைக்கப்பட்டுள்ளது. இவை சாஞ்சி தூபி, பாரூத் கல்வேலிகளை ஞபகப்படுத்துவதாக உள்ளது. எனினும், இக்கல்வேலியில் செதுக்கல் வேலைப்பாடுகள் காணப்படவில்லை.

நிஸ்ஸங்கலதா மண்டபம் பற்றிய வீடியோ பாட அலகினை பார்க்க கீழே கிளிக் செய்யுங்கள்:

கருத்துகள்