இந்து மதப் பண்பாடுடன் இணைந்த மரச் செதுக்கல் வாகனங்கள்

இந்து சமயக்கோவில் திருவிழாக்களின் போது அதாவது, உற்சவ நாட்களின் போது தெய்வங்களை சுற்றுப்பிரகாரத்தில் வீதிஉலா கொண்டு வருவதற்கு மரத்தாலான வாகனங்களை உபயோகிப்பார்கள். திருவிழாக்காலத்தில் அந்தந்த நாளுக்குரிய சிறப்புப் பெற்ற வாகனங்கள் வீதி உலாவின் போது உபயோகப்படுத்துவார்கள். இந்து சமயத்தில் ஒவ்வொரு தெய்வங்களுக்கும் தனித்த வாகனம் உள்ளது. இவை விலங்குகளாகவோ பறவைகளாகவோ காணப்படும். இந்த வாகனங்களைச் செய்யும் போது பெரும்பகுதி மரத்தினால் நிர்மாணிக்கப்படுவதால் இதனை மரவாகனம் என அழைப்பார்கள் எனினும், சில பாகங்கள் உலோகங்களினாலும் செய்யப்பட்டிருக்கும். இவை கோயிலில் அதற்கென கட்டப்பட்ட வாகன மண்டபத்தில் வைக்கப்பட்டிருக்கும். இந்த வாகனங்கள் மரத்தினால் செதுக்கப்பட்டு அழகிய வர்ணமிடப்படும். இதனை அலங்கரிப்பதற்கு பாரம்பரிய அலங்காரங்கள் குறிப்பாக மலர் அலங்காரங்களை உபயோகிப்பார்கள். 

மரவாகனங்களின் வரலாற்றுப் பின்ணணி:

இந்து ஆலயங்களில் மரவாகனங்கள் வரலாற்றிலே சங்ககாலம் முதல் பயன்பாட்டில் இருந்துள்ளது. ஆனால் இவை மரத்தில் செய்யப்பட்டதனால் இவை எளிதில் அழிவடைந்துவிட்டன. ஆனாலும், இந்த மரவாகனங்கள் இருந்தமைக்கான ஆதரங்களை பல இலக்கிய நூல்களில் இருந்து அறியக்கூடியதாக உள்ளது. உதாரணமாக, மணிமேகலை என்னும் இலக்கிய நூலில் மரத்தாலும் மற்றும் யானைத்தந்தம்,களிமண் போன்ற ஊடகங்களிலும் தெய்வ உருவங்கள் செய்யப்பட்டதாகக் அதிலுள்ள பாடல் ஒன்றில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதைவிட, புறநானூற்று நூலில் தச்சன் தேர் செய்வது பற்றிய குறிப்பும், பரிபாடலில் மரப் பதுமைகள் பற்றிய குறிப்பும் காணப்படுகிறது. இதுபோன்று மதுரைக் காஞ்சி, பட்டினப் பாலை போன்ற பழமையான இலக்கிய நூல்களிலும் இந்து மதத்துடன் தொடர்பான செதுக்கல்கள், உருவம் வரைதல், வர்ணம் தீட்டல், அலங்கார வேலைப்பாடுகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அறிஞர்களின் கூற்றுப்படி, பல்லவர் காலத்திலும், சோழர் காலத்திலும் இந்த மரவாகனங்கள் செய்யும் கலை, பெருமளவு வளர்ச்சியடைந்ததாக கூறப்படுகிறது. இன்று பெரும்பான்மையான கோயில்களில் உள்ள வாகனங்கள் நானூறு ஆண்டுகளுக்கு உள்ளாகச் செய்விக்கப் பட்டவையாகவே காணப்படுகின்றது. 

தொடக்க காலத்தில் இந்த இறை வாகனங்கள் மரத்தினால் செய்யப்பட்டிருந்தாலும், பிற்பட்ட காலங்களில் இயற்கை சீற்றங்களிலிருந்து பாதுகாக்க மர வாகனங்களின் மீது உலோகத் தகடுகளும் சேர்க்கப்படுகின்றன. தற்காலத்தில் இவை முழுவதும் உலோகத்தினாலும் செய்யப்பட்டு வருகின்றது.

                இந்த மரச்சிற்ப வாகனங்கள் செய்வதற்கு இலுப்பை, வேங்கை, தேக்கு, மகிழம், வாகை, சந்தனம், மருது ஆகிய மரங்கள் பயன்படுத்தப்படுகின்றது. 

இந்த மரவாகனங்கள் செய்வதற்கு விலங்குருவங்களும், பறவையுருவங்களுமே பயன்படுத்தப்படுகின்றன. விலங்குருவங்களாக யானை, சிங்கம், புலி, குதிரை, எலி, காளை, கருடன் போன்றனவும், பறவை உருவங்களான மயில், அன்னம் போன்ற வாகனங்களையும் குறிப்பிடலாம். 

இவ்வாறு இந்த வாகனங்கள் பெரும்பாலும் விலங்கு உருவங்களாகவும், பறவை உருவங்களாகவும் செய்யப்பட்டு இருப்பினும், பல விலங்குகளின் சேர்க்கையால் உருவான யாழி, பெண்ணின் தலையும் பசுவின் உடலையும் கொண்ட காமதேனு போன்ற கற்பனை உயிரினங்களும் இவற்றில் காணப்படுகிறது. 

மர வாகனங்களை முக்கியமாக இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

1. வடம் எனப்படும் கயிற்றால் இழுத்துச் செல்லப்படும் வாகனங்கள்.

 உதாரணமாக: தேர், மஞ்சம், கைலாசவாகனம், சப்பறம் 

2. மனிதர்களால் தூக்கிச் செல்லப்படும் வாகனங்கள்.

 உதாரணமாக: சிங்கவாகனம், நாக வாகனம், அன்ன வாகனம், எலிவாகனம், மயில் வாகனம், குதிரை  வாகனம் 

இலங்கையில் காணப்படும் சிறப்பான சில மரவாகனங்கள்

சிங்க வாகனம்


யாழ்ப்பாணத்திலுள்ள மூளாய் என்னும் ஊரில் அமைந்துள்ள சித்தி விநாயகர் கோயிலில் இதனைக் காணலாம். 20ம் நூற்றாண்டுக்குரிய இந்த சிங்க வாகனத்தினை யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த, சின்னட்டியார் ஆசாரி என்பவர் அழகுற இதனை நிர்மாணித்துள்ளார். 

சிங்க வாகனத்தினுடைய கலைப்பண்புகள்

இது ஒரு மோடிப்படுத்தப்பட்ட உருவமாகக் காணப்படுகிறது. அதாவது உண்மையான சிங்கத்தின் உருவத்தினைப் போல் வடிவமைக்காது சிங்கத்தின் உருவத்தினை அலங்காரத்தன்மையுடனும் அதற்குரிய குணவியல்பினை வெளிப்படுத்தும் வண்ணமாகவும் வடிவமைத்துள்ளனர். 

மிகவும் நுட்பமான முறையில் செதுக்கப்பட்டுள்ள இந்த சிங்க வாகனத்தில் சிங்கத்தினுடைய சீற்றத்தினை அல்லது கோபத்தினை வெளிப்படுத்திக்காட்டும் படியாக அதன் கண்களை துருத்திக் கொண்டிருக்கும் உருட்டு விழிகளாகவும், அதன் திறந்த வாயில் சிவந்த முரசையும் அதனுடைய சிறியதும் பெரியதுமான கோரமான அந்த பல்வரிசையையும் காட்டுவதன் மூலம் பார்போரைப் பயமுறுத்தும் வண்ணம் அழகாக செதுக்கியுள்ளார். இதைவிட சிங்கத்திற்குரிய அந்த ராஜ கம்பீரத்தினைக் காட்டும் வகையில் நிமிர்ந் தலைக்கு சமாந்தரமாக வளைந்தெழுந்து வில்போல நிற்கும் படியாக அதன் வாளையும் நிர்மாணித்துள்ளார். 

இதைவிட சிங்கத்தின் கழுத்தில் அடுக்கடுக்காக மாலைகள், பதக்கங்கள் என்பவற்றுடன் பூவலங்காரமும் இடப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளதை அவதானிக்கலாம். இவற்றிலே, சிறப்பான ஒரு அலங்கார நுட்பமுறையாக இருப்பது, சிங்கத்தில் உள்ள புடைப்பலங்காரங்களில், கண்ணாடி இழையங்கள் தைக்கப்பட்டுள்ளமை ஆகும். அந்த கண்ணாடித் துண்டுகளில் ஒளிபட்டு தெறிக்கும் போது ஒரு விண்ணுலகப் பாங்கை அதற்கு கொடுப்பதாக தெரிகின்றது. இதுவே இந்த மூளாய் சித்தி விநாயகர் ஆலய சிங்க வாகனத்தின் கலைச்சிறப்பு ஆகும்.

குதிரை வாகனம்

இந்தக் குதிரை வாகனத்தை யாழ்ப்பாணம் கந்தசாமி கோயிலில் காணலாம். இதனைச் செதுக்கி நிர்மாணித்தவர் இந்தியாவைச் சேர்ந்த திருவிடை மருதூர் கோவிந்தசாமி ஆசாரியர் ஆவார். இந்த குதிரை வாகனமானது 1963 – 1964 காலப்பகுதியில் இவரால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 

குதிரை வாகனத்தின் கலைப்பண்புகள்.

இந்த குதிரை வாகனமானது நேர்முகத் தன்மையுடையதாக உள்ளது. இந்த குதிரையானது யுத்தம் ஒன்றுக்கு பாய்ந்து செல்லும் தோரணையில் அதன் முகபாவம், அசைவு என்பன வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், குதிரையின் ஆக்கிரோசம், கம்பீரம் மற்றும் அதற்கேயுரிய மிடுக்கான தன்மை போன்ற உணர்வு வெளிப்பாட்டை சிற்பி சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். வீதிஉலா வரும்போது குதிரை பாய்ந்து செல்வதைப்போல் முன்னும் பின்னும் அசைப்பதற்கு ஏற்றபடியாக அதனை வடிவமைத்துள்ளார். இவ்வாறான அசைவினை ஏற்படுத்துவதற்கு சிற்பி குதிரையின் உடற்பாரத்தினை அதன் பிற்பகுதியில் அதிகமாக வைத்து நிர்மாணித்துள்ளார். இதனால் குதிரையை பின்னாலிருந்து அசைக்கும் போது குதிரை இலகுவாக அசையக் கூடியதாக இருக்கும். இது சிற்பியின் தொழிநுட்பத்திறனை எடுத்துக் காட்டுவதாக இருக்கின்றது. இவ்வாறு, பல சிறப்புகளையுடைதாக நல்லூர் ஆலய குதிரை வாகனம் காணப்படுகிறது.

வடம் எனப்படும் கயிற்றால் இழுத்துச் செல்லப்படும் வாகனங்கள்

தேர்


இந்து ஆலயங்களிலே தேர்த்திருவிழா அல்லது தேரோட்டம் என்பது மிகவும் சிறப்பானதொன்றாகும். இந்த தேரானது மூன்று பகுதிகளைக் கொண்டதாகக் காணப்படுகிறது. அவையாவன, 

1.கீழ்ப்பகுதி 

2.நடுப்பகுதி 

3.மேல்ப்பகுதி  

கீழ்ப்பகுதியில், சக்கரங்களுக்கு மேல் அடுக்கடுக்காக சிற்பங்கள் செதுக்கப்பட்டிருக்கும். இங்கே கடவுள் உருவங்களும் விலங்கு உருவங்களும் பறவையுருவங்கள் பூதங்கள் மற்று மலர் அலங்காரங்களான தாமரை அலங்காரம், பலாபெத்தி அலங்காரம் என்பனவும் செதுக்கப்பட்டிருக்கும். 

தேரின் நடுப்பகுதியில் தான் கடவுளை வைக்கும் பீடம் காணப்படுகிறது. இப்பகுதியினை தேவாசனம் என அழைப்பார்கள். தேவாசனப்பகுதியையும் மேற்பகுதியையும் இணைக்கும் தூண்களை பவளக்கால்கள் என அழைப்பார்கள். 

தேரின் மேற்பாகத்தினை விமானம் என அழைப்பார்கள். தேரின் மேற்பகுதியானது வட்டவடிவில் அமைக்கப்படும். நடுப்பகுதியில் ஆரம்பிக்கும் வட்டத்தின் சுற்றளவு அதிகமாகவும் அது மேலே செல்லச் செல்ல குறைவடைந்து ஒடுங்கிச் சென்று முடிவடையும். தேரின் உச்சியில் கலசம் அமைக்கப்படும். இதுவே தேரின் பகுதிகள் ஆகும்.

இதைவிட, இந்த தேர்கள் இரண்டு வகையாகக் காணப்படுகின்றது. 

1.மூலத்தேர் 

2. கட்டுத்தேர் 

இதில் மூலத்தேர் என்பது அதன் கீழிருந்து மேல் வரைக்கும் ஒட்டுமொத்தமாக அதன் பாகங்கள் நிரந்தரமாகவே அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், கட்டுத் தேர் என்பது அதன் கீழ்ப்புறம் மட்டுமே நிரந்தரமுடையதாகக் காணப்படும். நடுப்பக்கம், மேற்பக்கம் என்பன தேர்ரோட்டத்தின்  போது மட்டுமே தற்காலிகமாக கட்டப்படும். இதனாலேதான் இதற்கு கட்டுத்தேர் என அழைக்கப்படுகிறது. 

கட்டுத்தேரின் அடிப்பாகம்

இவ்வாறான கட்டுத் தேர்களின் மேற்பக்கமானது தேர்த்திருவிழாவிற்கு முதல் நாட்களில் பல வர்ணத் துணிகளினால் சுற்றிக் கட்டி அதில் கொடிகள் கொண்டு அலங்கரிப்பர். இதேபோல் மூலத்தேர்களின் மேற்பாகம் மரச்சட்டகங்களினால் நிரந்தரமாக அமைக்கப்பட்டிருக்கும். இவற்றில் சிற்ப வேலைப்பாடுகளோ அலங்கார வேலைப்பாடுகளோ இருப்பது குறைவு. 

ஆனால், இரண்டு வகைத் தேர்களிற்கும் வேறுபாடற்ற பகுதியாக இருப்பது அவற்றின் அடிப்பகுதி அல்லது கீழ்ப்பகுதி ஆகும். தேரில் தெளிவாக பார்க்கக்கூடிய பகுதியாக இருப்பதும் இந்த கீழ்ப்பகுதி மட்டுமே ஆகும். எனவே, தேரினுடைய கீழ்ப்பகுதியில் கலை வேலைப்பாடுகள் அதிகளவில் நிர்மாணிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். இவ்வாறு, தேர்களில் கலைநயம் மிக்க ஒரு பகுதியான கீழ்ப்பாகத்தில் இங்கு புராணக்கதைகள், கடவுள் விக்கிரகங்கள், யாழிகள், அன்னங்கள், பூத உருவங்களின் வரிசை அல்லது குள்ள உருவங்களின் வரிசை என்பன அமைக்கப்பட்டிருப்பதுடன் கண்ணைக்கவரும் அலங்கார வடிவங்களும் அமைக்கப்பட்டிருக்கும்.


இதில் உள்ள சிற்பங்கள் எட்டு அங்குலம் முதல் இரண்டரை அடி உயரம் வரை அமைந்துள்ளன. தேரின் அச்சுப் பகுதியில் கடவுளர்கள், பூத கணங்கள் ஆகியோரின் உருவங்கள் வைக்கப்பட்டுள்ளன. அவர்கள் தேர்களின் பாதுகாவலர்களாகக் கருதப்படுகின்றனர். தேரின் பீடத்தில் நாட்டியப் பெண்கள், இசைக் கருவிகளை மீட்டுவோர், தேவர்கள்;, துவார பாலகர்கள், கஜலட்சுமி ஆகியவற்நின் உருவங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. 

    முற்காலத்தில் இந்த மரத் தேர்களின் அடிப்படையில்தான் கல்தேர்கள் என்னும் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட கல்ரதங்கள், பல்லவர்களால் மாமல்லபுரத்தில் அமைக்கப்பட்டன. எம்மால் பழங்காலத்தில் அமைக்கப்பட்ட தேர்களை இப்போது காண முடியவில்லை. இருப்பினும் சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்றவற்றிலும் தேர்கள் அக்காலத்தில் இருந்தமைக்கான செய்திகள் உள்ளன. அவை பொற்தேர், நெடுந்தேர், கொடித்தேர், அணிகொள்தேர் என்றெல்லாம் அழைக்கப்பட்டிருக்கின்றன. சிலப்பதிகாரம் புத்த பகவானுக்கு தேர்த்திருவிழா நடைபெற்றதைக் குறிப்பிடுகிறது.


இலங்கையில் உள்ள சிறப்பான தேர்


இலங்கையில் உள் சிறந்த தேர்களில் மட்டக்களப்பில் உள்ள கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் உள்ள சித்திரத்தேர் சிறப்பானதாகும். இத்தேரானது ஒரு கட்டுத்தேர் ஆகும்

. பல நூற்றாண்டுகளைக் கடந்த இந்த தேரானது இலங்கையின் காலத்தால் முற்பட்ட மரச் செதுக்குப் பாரம்பரியத்தினை பிரதிநிதித்துவப்படுத்துவதாக உள்ளது. தருமசிங்கன் என்னும் மன்னன் சோழ சிற்பிகளை இந்தியாவில் இருந்து வரவழைத்து மூன்று தேர்களை செய்வித்ததாக மட்டக்களப்பு மான்மியம் கூறுகின்றது. ஆனால் தற்போது இங்கு இரண்டு தேர்கள் மாத்திரமே காணப்படுகிறது. இவற்றில் சிவனுக்குரிய தேரே அதிக பழமை வாய்ந்ததாக உள்ளது. இங்கு நடைபெறும் தேரோட்ட நிகழ்வானது இந்தியாவின் ஒரிசா பூரி ஜெகன்நாதர் ஆலய தேரோட்ட நிகழ்வை ஒத்ததாகக் கூறப்படுகின்றது.  

மஞ்சம் 


இந்த மஞ்சமானது தேரைப் போன்று அதனை ஒத்ததாகவே காணப்படினும், தேருக்கும் மஞ்சத்திற்கும் இடையேயான வேறுபாடும் ஒன்று காணப்படுகின்றது. அதாவது, தேரின் மேல்ப்பகுதியில் அல்லது கூரைப்பகுதியில் சிற்ப வேலைப்பாடுகள் அலங்கரிப்புக்கள் காணப்படமாட்டாது. ஆனால், மஞ்சத்தின் மேல்ப்பகுதியானது கோயில் கோபுரத்தின் பண்புகளை ஒத்தாகக் காணப்படும். 

ஒரு கோயில் கோபுரத்தில் விமானத்தின் அடுக்குகளின் உள்ளே தெய்வ உருவங்கள் விலங்குருவங்கள் மலர்க்கொடி அலங்காரங்கள் என்பன செதுக்கல்களாக நிர்மாணிக்கப்பட்டிருப்பதைப் போல மஞ்சத்தின் மேற்பகுதியிலும் அமைக்கப்பட்டிருக்கும். 

தேரிற்கும் மஞ்சத்திற்கும் இடையேயான வித்தியாசம் இதுவாகும். இதைத்தவிர மஞ்சமும் தேரைப் போன்று மேல்பகுதி நடுப்பகுதி கீழ்ப்பகுதி என மூன்று பகுதிகளைக் கொண்டது. நடுப்பகுதியில் கடவுளை வைக்கும் பீடம் காணப்படும். அதனைத் தேவாசனம் என்பர். தேவாசனப்பகுதியையும் மேற்பகுதியையும் இணைக்கும் தூண்கள் பவளக்கால்கள் எனப்படும். இந்தப் பவளக்கால்களுடன் சேர்ந்து வெளிப்பக்கமாக யாழி வடிவங்கள் அமைக்கப்பட்டிருக்கும். இவை நெடுத்த தட்டையான பலகையில் செதுக்கப்பட்டிருக்கும். இந்த யாழி வடிவங்கள் சுற்றிவரவுள்ள ஒவ்வொரு பவளக்கால்களுடனும் சேர்த்து அமைக்கப்பட்டுள்ளது.  

இலங்கையின் சிறப்புமிக்க அழகான மஞ்சம்

 யாழ்ப்பாணம் இணுவில் கந்தசாமி கோயிலில் காணப்படும் மஞ்சம் சிறப்பானது ஆகும். இது 1909-1910 ஆண்டு காலப்பகுதியில் நிர்மாணிக்கப்பட்டது. கோயிலின் மகோற்சவ நாட்களில் ஒரு நாளான மஞ்சத் திருவிழாவிற்கான நாளிலே மஞ்சம் எனப்படும் இந்த விசேட வாகனத்தில் இறைவனை வைத்து வீதியுலா வருவார்கள். 


இந்த பாட அலகிற்கான வீடியோ பகுதியினை பார்வையிட கீழே கிளிக் செய்யுங்கள்.








கருத்துகள்