பொலனறுவைக்கால இந்துச்சிற்பங்கள்

அனுராதபுர காலத்தின் பிற்பகுதியில், சோழ படையெடுப்பு இலங்கையை சோழர்கள் ஆட்சி புரிந்தனர். இலங்கைத் தீவின் முக்கிய பகுதிகள் ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக அவர்களின் ஆட்சியின் கீழே தான் இருந்தது. இலங்கையினை சோழர்கள் மும்முடி சோழ மண்டலம் என அழைத்ததாக கூறப்படுகிறது. இந்த காலகட்டத்தில் பொலன்னறுவை சோழர்களின் தலைநகரமாக இருந்தது. அவர்கள் பொலனறுவையை ஜனநாதபுரம் என அழைத்தனர். இலங்கை வரலாற்றில் பொலன்னறுவை இரசதானிக் காலத்தின் தொடக்க ஆண்டுகள் சோழர் ஆட்சியுடன் தொடங்கியது என்றே கூறலாம். 

சோழ படையெடுப்பாளர்கள் திராவிட கட்டிடக்கலை படி இந்துக் கோவில்களைக் கட்டியிருந்தனர். தமிழ்நாட்டில் பெரிய தாஞ்சை பிரகதிஸ்வரர் கோயிலைக் கட்டிய இராஜராஜ சோழ மன்னன் பொலன்னறுவையில் ஐந்து சிவாலயங்களை திராவிட கட்டிடக்கலை படி கட்டியிருந்தனான். 

பொலனறுவை காலத்தில் இந்து கோவில்களில் ஏராளமான வெண்கல சிலைகள் நிறுவப்பட்டிருந்துள்ளன. இந்த சிலைகளின் சிற்ப பாணி அமைப்பு மற்றும் நுட்ப அலங்காரங்கள் தென்னிந்திய சோழ சிற்பங்களை ஒத்திருக்கின்றன. மிகப் பழைய வார்ப்பு தொழிநுட்பத்தில் செய்யப்பட்ட இந்துச் சிற்பங்களில் சில தென்னிந்தியாவிலும் செய்யப்பட்டவை என்று நம்பப்பட்டது. பொலனறுவைச் சிவாலயங்களில் கண்டெடுக்கப்பட்ட வெண்கலச் சிற்பங்களை நீங்கள் பொலனறுவை மற்றும் கொழும்பு தேசிய நூதனசாலைகளில் காணக்கூடியதாகவுள்ளது. இவ்வாறு இந்த 5 சிவாலயங்களிலும் கண்டெடுக்கப்பட்ட வெண்கலச் சிற்பங்களில் சிலவற்றைப் பற்றி கீழே தரப்பட்டுள்ளது.

நடராஐர் சிற்பம்


இந்து சமயத்திற்குரிய சிலைகளில் ஒன்றான இந்த நடராஜர் சிலை முழுமுதற் கடவுளான சிவனது தாண்டவ நடனத்தினை வெளிப்படுத்துவதாக இருக்கின்றது. இலங்கையில் சோழர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட ஐந்து சிவாலயங்களில் இருந்தும் ஆறு நடராஜர் திருவடிவங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த வெண்கலச் சிற்பங்கள் யாவும் 11ம் நூற்றாண்டிற்குரியனவாகும். இவற்றில் 1ம்; சிவாலயத்தில் இருந்து எடுக்கப்பட்ட நடராஜர் வடிவமே எல்லாவற்றிலும் மிகப் பெரியதும் அழகானதும் ஆகும். இதனை தற்போது கொழும்பு நூதனசாலையில் நாம் காணலாம். 

சோழர் சிற்பக்கலையின் மிகப் பழமை வாய்ந்த நுட்பத்தை பயன்படுத்தி அமைக்கப்பட்டுள்ள இந்த வெண்கலச் சிற்பமானது பிரபஞ்சத்தின் இயக்கத்தினை குறியீடுகள் மூலம் எடுத்துக் காட்டுவதாகவுள்ளது. அதாவது, ஆடற் தெய்வமாகிய நடராஐரின் ஆனந்த தாண்டவத்தின் மூலம் உலகின் ஆரம்பம், முடிவு என்பவற்றை விளக்குவதாக உள்ளது. பிரபஞ்ச இயக்கமானது ஐந்தொழில்களான படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் ஆகியன மூலமே நடைபெறுகின்றன. ஆகவே இவற்றினை எடுத்துக்காட்டும் விதமாக இச்சிற்பத்தில் குறியீடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளமையே இதன் சிறப்பம்சமாகும். 

இந்த சிற்ப உருவத்திலே நான்கு கைகள் காணப்படுகின்றன. இதில்  

1. படைத்தல் - வலது கையில் உடுக்கு

2. அழித்தல் - இடது கையில் அக்னி

3. காத்தல் - வலது கையில் அபயமுத்திரை

4. அருளள் - இடது கையினால் கஜஹஸ்த முத்திரை 

5. மறைத்தல் - முயலகனை மிதித்தலும் (முயலகன் அறியீனத்தின் குறியீடு)

பிரபஞ்சத்தை எடுத்துக் காட்டும் குறியீடாக, முழு உருவத்தையும் சுற்றி வட்ட வடிவமாக திருவாசி அல்லது தீச்சுவாலை என்னும் சோதிப்பிளம்பு வளையம், அமைக்கப்பட்டுள்ளதைக் காணலாம். இவ்வளையமானது நடராஜர் காலூன்றி நிற்கும் பத்மாசன பீடத்தின் இருபக்கமும் அமைந்துள்ள மகரத்தின் வாயில் இருந்து ஆரம்பிப்பதைக் காணலாம். 

தலைமுடியின் வலப்பக்கத்தில் கங்கையும் இடப்பக்கத்தில் பிறையும் பாம்பும் உள்ளது. சிற்பத்தில் அணிகலன்களாக வலது காதில் ஆண்களின் குண்டலமும் இடது காதில் பெண்களின் தோடும் உள்ளது. இது ஆண், பெண் கடந்த அர்த்தநாரீஸ்வரர் நிலையை எடுத்துக் காட்டுகின்றது. கழுத்தில் கபால மாலை அணிந்துள்ளமையானது ஐந்தொழில்களும் மாறி மாறி நடைபெறுகின்றது என்பதைக் குறிப்பதாகவுள்ளது. அத்துடன் உருத்திராட்சமானது பக்தர்கள் மீது சிவன் மிகுந்த அன்பு கொண்டவர் என்பதைக் குறிப்பதாகவுள்ளது. 

இவ்வாறு நான்கு கைகளுடனும் கவர்ச்சியான உடலமைப்புடனும் திரிபங்க நிலையில் படைக்கப்பட்ட இச் சிற்பத்தின் அங்கங்கள் மூலம் மொத்தமாக 13 குறியீட்டு அம்சங்கள் வெளிப்படுத்திக் காட்டப்பட்டுள்ளது. இந்து சமயத்தின் ஆழமான கருத்துக்களை நடராஐர் வடிவத்தின் குறியீட்டு அமசங்களின் மூலம் சிற்பி வெளிப்படுத்திக் காட்டியிருப்பது சிறப்பானதாக காணப்படுகிறது.  

பார்வதி சிலை

இது சிவபெருமானின் மனைவியான பார்வதி தேவியைக் குறிப்பதாக உள்ளது. பார்வதிதேவியை சிவசக்தி, சிவகாமசுந்தரி எனவும் அழைப்பார்கள். 12ம் நூற்றாணடைச் சேர்ந்த இச்சிலையானது பொலனறுவை 5ம் இலக்க சிவாலயத்தில் கண்டெடுக்கப்பட்டது. தற்போது இதனை பொலனறுவை நூதனசாலையில் நாம் காணலாம்;. 

இந்த வெண்கலப் படிவமானது வெண்கலத்தில் வார்ப்பு முறை மூலம் உருவாக்கப்பட்டுள்ளதை காணலாம். தலையிலே நீண்ட அலங்கரிக்கப்பட்ட அழகிய கிரீடம் அல்லது மகுடம் உள்ளது. உடல் அழகை வெளிப்படுத்தும் விதமாக உடலுடன் ஒட்டிய ஆடைகள் அலங்காரமான ஆபரணங்கள் என்பன சிலையின் அழகை மேம்படுத்துனவாக உள்ளது. பார்வதி சிற்பத்தின் வலது கை கடகஸ்த முத்திரையையும் இடது கை கீழே தொங்க விடப்பட்டவாறு லோக ஹஸ்த முத்திரையையும் காட்டிய வண்ணம் உள்ளது. 

பெண்மையின் நளினம் , மென்மை, அழகு வெளிப்படுத்தும் வகையில்; சிலையில் மூவளைவு கொண்ட திரிபங்க நிலை காட்டப்பட்டுள்ள இச்சிலையானது மேன்மையான ஒரு கலைப்படைப்பாக உள்ளது. 

பிள்ளையார் சிலை


இது சிவபெருமானினதும் பார்வதி அம்மாளினதும் மூத்த மகனான விநாயகர் அல்லது பிள்ளையாரின் சிலையாகும். பிள்ளையார் புத்திக்கும் எழுத்தறிவிற்கும் அதிபதியாவதுடன் விக்கினங்களைப் போக்குபவராகவும் கருதப்படுகின்றார். 
இது 5ம் சிவாலயத்தில் கண்டெடுக்கப்பட்ட 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு வெண்கலச் சிலை ஆகும். யானை முகத்தையும் பெரிய வயிற்றையும்  கொண்ட பிள்ளையார், இடது காலை மடித்தும் வலது காலை குத்தாகவும் வைத்துக் கொண்டும் ராஜலீலாசனப் பாங்கில் அமர்ந்துள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது. அமர்ந்திருக்கும் வட்ட வடிவ பீடத்திலே தாமரை மலர் இதழ்கள் செதுக்கப்பட்;டதால் இது பத்மாசன பீடம் என அழைக்கப்படும். இங்கு பிள்ளையாருக்கு நான்கு கைகள் காணப்படுகிறது. 
1. மேல்பக்கமாக உள்ள வலக்கையில் கோடரியும், 
2. மேல்பக்கமாக உள்ள இடது கையில் அரிச்சுவடியும், 
3. முன்பக்க வலக்கையில் உடைந்த தந்தமும் 
4. முன்பக்க இடக்கையில் மாங்கனியும் ஏந்தி இருப்பதை அவதானிக்கலாம்.


காரைக்கால் அம்மையார் சிலை 

வெண்கல வார்ப்பு செயன்முறையில் செய்யப்பட்டுள்ள இந்த சிலையினை பொலனறுவை 5ம் சிவாலயத்திலே கண்டெடுத்தனர். தற்போது இதனை அநுராதபுரம் நூதனசாலையில் நாம் காணலாம்.  
காரைக்கால் அம்மையாhர் சிவபெருமான் மீது கொண்ட மிகுந்த இறைபக்தி காரணமாக தமது இயல்பான பேரழகெல்லாம் நீங்கி மெலிந்த வடிவம் தரும்படி வரம் கேட்டதால், மெலிந்து எலும்புப் தோலுமாக மாறிய உருவத்தையே இச்சிற்பம் சித்தரித்து நிற்கிறது.

 மெலிந்து விகாரமாகக் காணப்படும் காரைக்கால் அம்மையார் அமர்ந்து தாளத்தினை இசைப்பது போல் சிற்பம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. காதிலே பெரிய காதணியும் கழுத்தில் மாலையும் அணிந்து காணப்படுகிறார். இலங்கையின் இந்து சமய கலைப்படைப்புக்களில் சிறப்பான கற்பனை வெளிப்பாட்டைக் கொண்ட ஒரு படைப்பாக இதனை ஒரு படைப்பாக இந்த காரைக்கால் அம்மையார் சிற்பத்தைக் கூறலாம். 

சுந்தரமூர்த்தி நாயனாரின் சிலை


இந்த வெண்கலச்சிலை சிவ பக்தனும் அறுபத்தி மூன்று சைவசமயக் குரவர்களில் ஒருவருமான சுந்தரமூர்த்தி நாயனாருடையது. ஆலயம் ஆலயமாகச் சென்று தேவாரங்களை இயற்றிப் பாடி சமயம் வளர்த்த ஒருவர். இவருடைய சிற்பமும் பொலனறுவை 5ம் சிவாலயத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டு கொழும்பு நூதனசாலையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. வெண்கல ஊடகத்தால் திண்ம வார்ப்பு நுட்ப முறைபை; பயன்படுத்தி நிர்மாணிக்கப்பட்டுள்ள இச்சிலை இந்து கலை நிர்மாணங்களிடையே விசேட இயல்புகளை வெளிக்காட்டி நிற்கும் சிலையாக உள்ளது. 
இளமையுடனும் எடுப்பான தன்மையுடனும் அழகுற அமைக்கப்பட்ட சிற்பமானது திரிபங்க நிலையில் பத்மாசன பீடத்தின் மீது அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். 
மங்களகரமான உடைகள்; ஆபரணங்கள் அணிந்து மணவாளக் கோலத்திலே காணப்படுகிறது. கைகளால் கடஹஸ்த முத்திரையைக் காட்டியவாறு இருக்கும் நின்ற நிலைச் சிலையாக உள்ளது. மனித உடற்பாகங்களை தத்துரூபமாக அங்க இலட்சணங்களுடன் இயற்கையாகத் தோன்றும் விதத்தில் அமைக்கப்பட்ட ஒரு உலோகச்சிலையாக இந்த சுந்தரமூர்த்தி நாயனார் சிலையைக் கூறலாம். 

பொலனறுவைக் காலத்தைச் சேர்ந்த 5 வெண்கலச் சிலைகளைப் பற்றி இந்த பாட அலகின் வீடியோப் பகுதியை பார்வையிட கீழே கிளிக் செய்யுங்கள்.




கருத்துகள்