பௌத்த தாதுகோபத்துடன் தொடர்பான கட்டிட அம்சங்கள்


வாகல்கடம் 

தாதுகோபத்தின் நாற்றிசை வாசல்களுக்கும் எதிராக அண்டத்துடன் அண்டியதாக அதன் அடித்தளப்பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் செதுக்கல் வேலைப்பாடு கொண்ட அமைப்பே வாகல்கடமாகும். இதனை புராதன காலத்தில் கல்வெட்டுக்களில் ஆயக்க எனவும் மகாவம்சத்தில் ஆதிமுக, என்ற பெயரிலும் அழைத்தனர். 

இந்த கலைநயமிக்க கட்டிட அம்சத்திற்குரிய சிறப்பம்சம் இந்த வாகல்கட அமைப்பானது இலங்கையில் உள்ள தாதுகோபங்களில் மட்டுமே காணப்படுகின்றது. வேறு நாடுகளில் அமைக்கப்பட்டிருக்கும் தூதுகோபங்களில் இந்த அமைப்பினை காணமுடியவில்லை. இந்தியாவின் சாஞ்சி தூபியின் நான்கு வாசல்களிலும் அலங்கார வேலைப்பாடமைந்த தோரணங்கள் காணப்படுகின்றன.

இதைப் போலவே இலங்கையில் தாதுகோபத்திற்கு செல்லும் நான்கு திசைகளிலும் உள்ள வாசல்களுக்கு நேராக வரவேற்பு தோரணம் போல் அலங்கார வேலைப்பாடு கொண்ட இந்த வாகல்கடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். 

வாகல்கடங்கள் தாதுகோபத்தின் அழகுக்காகவும் முக்கியமாக தாதுகோபத்தினது அண்டத்தினுடைய பலத்திற்காகவும் அமைக்கப்பட்டிருக்கலாம் எனவும் நம்பப்படுகின்றது. இந்த வாகல்கடங்கள் அடிப்பகுதி கருங்கல்லாலும் மேற்பகுதி செங்கல்லாலும் ஆக்கப்பட்டதை அவதானிக்கலாம். இவ் வாகல்கடம் அமைக்கும் வழக்கம் எப்போது ஆரம்பமானது என்பதற்கு ஆதாரங்கள் எதுவும் இல்லை. 

அநுராதபுரகாலத்தில் மிகிந்தலை கந்தகசைத்திய மற்றும் மிரிசவெத்தி தாதுகோபம், ரூவன்வெலிசாயா தாதுகோபங்களிலும் பொலனறுவையில் ரன்கொத்விகாரைத் தாதுகோபம் போன்றவற்றிலும் மிகப் பழைய வாகல்கடங்கள் காணப்படுகின்றது. இதில் மிகிந்தலை கந்தகசைத்திய வாகல்கடமே மிகச் சிறந்த வாகல்கடமாகும்.

வாகல்கடத்தின் கீழ்ப்பகுதி கருங்கற்களாலும் மேற்பகுதி செங்கற்களாலும் கட்டப்பட்டுள்ளது. வாகல்கடத்தின் அமைப்பினைப் பார்ப்போமானால் வாகல்கடம் பிரதானமாக மூன்று பகுதிகளைக் கொண்டதாகக் காணப்படுகிறது. வாகல்கடத்தின்; இரு பக்கமும் அழகிய செதுக்கு வேலைப்பாடுகள் கொண்ட தூண்கள் உள்ளன. இத் தூண்களில் நிறைகுடத்தில் இருந்து வெளிவரும் கொடிகள் போன்று செதுக்கப்பட்ட ஐPவ விருட்சம், கற்பக விருட்சம் மற்றும் நாக உருவங்கள், தேவதை உருவங்கள் என்பன காணப்படும். இத் தூண்களின் உச்சியிலே மிருக உருவங்கள் காணப்படும். இம்மிருக உருவங்கள் நான்கு திசைகளைக் காட்ட உருவாக்கப்பட்டதாக கருதப்படுகின்றது. அதாவது யானை உரு – கிழக்கையும், குதிரை உரு – மேற்கையும், சிங்க உரு - வடக்கையும், எருது உரு – தெற்கையும் குறிப்பதாக உள்ளது. 

அடுத்து கல்லால் ஆன செவ்வகவடிவ அடிப்பக்கத்தைப் பார்ப்போம். அதன் மத்திய பகுதி முன்துருத்தியவாறு காணப்படும். இதில் வரி வரியாக அழுத்தமாகவும், நுட்பமாவும் அமைக்கப்பட்ட செதுக்கல் வேலைப்பாடுகளை காணமுடியும். இச் செதுக்கல் வேலைப்பாடுகளில் யானைச் செதுக்கல், பேகட அமைப்பு, வாமன உருவம், லியவெல செதுக்கு வேலைப்பாடு என்பன காணப்படுகிறது. வாகல்கடங்களின் இந்த அடிப்பகுதிகள் முழுவதும் கருங்கற்களால் அமைக்கப்பட்டிருக்கும். 

அடுத்து மேற்பகுதியில் 3 விமானங்கள் உள்ளது. இந்த விமானங்கள் செங்கற்களால் கட்டப்பட்டுள்ளது இந்த 3 விமானங்களில் மத்தியில் உள்ள விமானம் பெரிதாகவும் மற்றைய இரு பக்கமும் உள்ளவை சிறியதாகவும் காணப்படும். விமானங்களினுள் புத்தரின் உருவங்கள் தேவ உருவங்கள் வைக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. இன்று காணப்படும் வாகல்கடங்களில் சில மேற்பகுதி அழிந்துவிட்டன. இதனால் வாகல்கட அமைப்பில் மேல்பகுதி பற்றிய விடயங்கள் அறிதல் கடினமாக உள்ளது. ஏனென்றால், அவை செங்கற்களால் கட்டப்பட்டமையால் உடைந்து சிதைவடைந்துள்ளது. 

அநுராதபுர மிகுந்தலையில் எழுந்த அதிகமான தூபிகளில் வாகல்கடம் முன்பாக கல்லால் செய்யப்பட்ட பூசைப் பீடம் ஒன்றும் பிற்காலத்தில் கட்டப்பட்டது. இதில் பக்தர்கள் பூக்களை வைத்து வழிபட்டனர். இது மலர்மேடை அல்லது பூப்பீடம் எனவும் அழைக்கப்பட்டது.



வாகல்கடம்

பௌத்த சமயத்தின் ஆரம்ப காலத்திலே தூபி அல்லது தாதுகோப வழிபாடு மாத்திரமே காணப்பட்டது. இந்த தூபியினை காற்று, மழை, வெயில் போன்றவற்றில் இருந்து பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதால் தாதுகோபத்தின் பாதுகாப்புக்கருதி தாதுகோபத்தினைச் சுற்றி வட்டமாக அமைக்கப்பட்ட மனையே வட்டதாகே அல்லது வட்டதாமனை என அழைக்கப்படுகிறது. வட்டதாமனையை தூபகர, வேதியகர, சேத்தியகர எனும் பெயர்களால் அழைக்கப்படுகிறது. 

இலங்கையில் முதன் முதலாக அமைக்கப்பட்ட தாதுகோபமான தூபராம தாதுகோபத்தைச் சூழ அமைக்கப்பட்ட வட்டதாமனையே இலங்கையின் முதலாவது வட்டதாமனை ஆகும். 2ம்நூற்றாண்டில் இந்தியாவின் நாகர்ஜுன கொண்ட என்ற இடத்தில் தான் முதல் வட்டதாகே நிர்மாணிக்கப்பட்டதாக நம்பப்படுகின்றது. அதைப் பின்பற்றியே இலங்கையிலும் வட்டதாகே அமைப்புக்கள் கட்டப்பட்டன.
இந்த வட்டதாகே அமைப்பினைப் பார்ப்போமானால் உயர்ந்த மேடை ஒன்றின் ஒன்றின் மீது இது கட்டப்படும். மூன்று அல்லது நான்கு வரிசையில் தாதுகோபத்தைச் சுற்றி வட்டமாக தூண் வரிசையாக நாட்டப்பட்டிருக்கும். இத் தூண்களின் உயரம் முதல் வரிசையிலும் பார்க்க இரண்டாவது வரிசைத் தூண்கள் சற்று உயர்ந்தும் படிப்படியாக தாதுகோபுரத்திற்கு பக்கத்தில் இருக்கும் தூண்கள் தாதுகோபுரத்தின் உயரத்திலும் சற்றுக் குறைவானதாகவும் அமைக்கப்பட்டு இருக்கும். இதன் மத்திய பகுதியில் அரைக்கோள வடிவ கூரையமைப்பாகவும் வெளிப்பகுதி சாய்வாகவும் அமைக்கப்படுகிறது. வெளி வட்ட தூண்களுக்கு உள்ளாக சில இடங்களில் சிறிய மதில் கட்டப்பட்டிருக்கின்றது. 
இதில் கூரையைத் தாங்கி நிற்கும் தூண்கள் கலைநயமிக்கவை. மிக நுணுக்கமாக அமைக்கப்பட்ட கற்றூனின் உச்சி அழகாக அமைக்கப்பட்டுள்ளது. கற்றூண் உச்சியில் அமைக்கப்பட்ட பொதிகை மீது தீராந்திகள் பொருத்தப்பட்டு கூரை அமைக்கப்பட்டுள்ளது. இத் தீராந்திகள் காலத்தால் அழிவடைந்து தற்போது தனித் தூண்களையே எம்மால் காணமுடிகின்றது. 
கம்பளைக் காலத்தில் கடலதெனிய விகாரையில் காணப்படும் விஜய உத்பாயாவின் மேற்பகுதியும் வட்டதாகேயின் ஒரு வடிவமாகும். பிற்காலத்தில் வட்டதாகேயின் ஊடகப் பயன்பாட்டிலும் மாற்றங்கள் ஏற்பட்டது அதாவது செங்கற்களாலும் நவீன தொழில்நுட்பத்துடன் கொங்கிறீட் கொண்டும் அமைக்கப்படுகின்றது. 

அநுராதபுரத்தில் வட்டதாமனை காணப்படும் தாதுகோபங்களாக,

1. திரியாய வட்டதாமனை
2. மெதிரிகிரிய வட்டதாமனை
3. தூபராம வட்டதாமனை
4. மிகிந்தலை வட்டதாமனை
இவற்றில் பொலனறுவை மெதிரிகிரிய, வட்டதாகேயே ஒரளவு நல்லநிலையி;ல் உள்ள சிறப்பான வட்டதாமனை ஆகும்.



கருத்துகள்