ஓவியர் ஜோஜ்கீற்

1901ம் ஆண்டு ஏப்ரல் 17ம் திகதி கண்டி அம்பிட்டிய எனும் ஊரில் சிங்கள தாயாருக்கும் – பறங்கியரான தந்தைக்கும் பிறந்தவர்தான் ஜோஜ்கீற்;. இவர் கண்டி திரித்துவக் கல்லூரியிலே தனது ஆரம்பக் கல்வியைக் கற்றார். தனது பத்தாவது வயதிலே சிலுவையில் இயேசு என்ற ஓவியத்தை வரைந்து விருது பெற்றார். அவரது வீடு மல்வத்து விகாரைக்கு அருகில் இருந்தமையால் மல்வத்து பீடத்தைச் சேர்ந்த பிக்குவான பின்னவல தீரானந்த தேரரிடம் பாலி- பௌத்த தத்துவக்; கருத்துக்களைக் கற்றார். இதைவிட இரவீந்திரநாத்தாகூரின் நூல்கள் மூலம் இந்து சமயக்கருத்துக்களையும் விளங்கிக் கொண்டார்.

ஜோஜ்கீற் இலக்கியத்துறையிலும் அதிக ஈடுபாடு கொண்டவராகக் காணப்பட்டார். 1940 இல் சமஸ்கிருத இலக்கியப் படைப்பான ஜயதேவாவினுடைய கீதா கோவிந்தத்தை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தார். தமது ஓவியங்களையும் அந்த நூலில் உள்ளடக்கி வெளியிட்டார். அத்துடன் கவிசிலுமின, முவதெவ்தாவத்தை போன்ற சிங்கள தொல்சீர் நூல்களையும் ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தார். இவ்வாறாக இந்து, பௌத்த இலக்கிய நூல்களும் இந்து சமய கலைச் செல்வாக்கும் அவரது ஓவியங்களுக்கான கருப்பொருளாகவும் அமைந்தன. 

கலைஞர் லயனல்வென்ட்டினது நட்பு மற்றும் சீ.எவ்.வின்சரினது ஓவியக்கழகத்தில் இணைந்து செயற்பட்டமை போன்ற காரணத்தால் ஜோஜ்கீற் முற்று முழுதாக ஓவியக்கலையின் பால் அவருக்கு ஈர்ப்பு ஏற்படுவதற்கு காரணமாக அமைந்தன. இக்காலத்தில் நவீன ஓவியங்களின் பால் ஈர்ப்புக் கொண்ட சில கலைஞர்கள் ஒன்று சேர்ந்து 1943ம் ஆண்டு 43 என்ற ஓவியக் குழுவினை ஆரம்பித்தனர்.

இக்குழுவில் ஓவியர் ஜோஜ்கீற்றும் இணைந்து கொண்டார். பிரான்சின் பாரிஸ் நகரில் ஆரம்பிக்கப்பட்ட நவீன கலைத்துவப் போக்குகளின் செல்வாக்கினை அண்டி தமது கலைப்படைப்புகளை படைத்தவர்கள்தான் இந்த 43 என்ற ஓவியக்குழுவைச் சேர்ந்தவர்கள். இவர்களுடன் சேர்ந்து இலங்கையின் கலையை நவீனத்துவப்பாணிக்கு இட்டுச் சென்றவர்தான் ஓவியர் ஜோஜ்கீற். இயற்கையை அப்படியே ஓவியமாக வரைவதனைத் தவிர்த்து இயற்கையைப் பார்க்கும் போது கலைஞனின் மனதில் தோன்றும் உணர்வுகளை ஓவியமாக வரைதல் என்ற ஓவியக் கொள்கையை ஜோஜ்கீற் பின்பற்றினார். இதற்காக மேலைத்தேச கனவடிவாதக் கலைஞர்களான பிக்காசோ பிராக் போன்றவர்களின் கனவடிவாதக் கலைத்துவ பண்புகளை உள்வாங்கிய ஜோஜ்கீற் தமக்கே உரித்தான ஓவியப்பாணி மற்றும் உத்திகளைக் கொண்ட ஒரு ஓவிய முறையை உருவாக்கிக் கொண்டார். இவ்வாறு வரையப்பட்ட ஓவியங்களில் சிலவற்றை தற்போது நீங்கள் பார்க்கலாம்.

அடுத்து ஜோஜ்கீற்றின் திறமையை வெளியுலகிற்கு அறிய வைத்தது கொழும்பு பொரளையில் உள்ள கோதமி விகாரைச் சுவர்களில் வரைந்த ஓவியங்கள் தான். இங்கு பௌத்தமதம் தொடர்பான ஓவியங்களை வரைந்து பலரது பாராட்டைப் பெற்றார். கோதமி விகாரையில் ஓவியம் வரையும் பணி 1939ம் ஆண்டில் இருந்து 1941ம் ஆண்டு வரை இடம் பெற்றது. ஜோஜ்கீற் முழுமையாக 2 வருடம் அங்கு ஓவியங்களை வரையும் பணியில் ஈடுபட்டார். ஜோஜ்கிற்ரிற்கு கோதமி விகாரையில் ஓவியம் வரைவதற்கு சுவரினைத் தயார்படுத்திக் கொடுத்தவர் அன்ட்று புரோயிட் எனும் கலைஞர் ஆவார். கோதமி விகாரையில் பிரதட்சணைப்பாதையில் ஓவியங்களை தொடர் வரிசையாக ஜோஜ்கீற் வரைந்துள்ளார். 





ஒரு ஓவியத்துடன் இன்னொரு ஓவியத்தை இணைப்பதற்கும் ஒன்றிலிருந்து ஒன்றை வேறுபடுத்திக் காட்டுவதற்கும் ஜோஜ்கீற் கனவடிவாதக்கலை உத்திகளைப் பயன்படுத்தியுள்ளார். மேலும் பிரதட்சணைப்பாதையோடு இணைந்த உட்புற தியான மண்டப சுவரிலும் மூன்று பக்கமும் பாரிய ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது. இவை மிகப் பெரியவையாக உள்ளது. இந்த கோதமி விகாரை ஓவியங்களில் சிறப்பான ஒருவிடயமாக அவதானிக்கக்கூடியதாக உள்ளது குறு முறிகோடுகளின் பயன்பாடு ஆகும். அதாவது மனித உருவங்களுக்கான முறி கோடுகளை இடும் போது அவை முப்பரிமாணத்தன்மையை வெளிப்படுத்துவதாக ஓவியர் வரைந்துள்ளார். இது ஜோஜ்கீற்றிரின் ஒரு ஓவிய உத்தியாகும். நாம் ஒட்டுமொத்தமாக கோதமி விகாரை ஓவியங்களைப் பார்க்கும் போது அந்த ஓவியங்களில் கனவடிவாத கலைத்துவப் பண்புகளே வெளிக்காட்டப்படுவதை அவதானிக்க முடிகிறது.  

கோதமிவிகாரையில் வரையப்பட்டுள்ள சித்திரங்கள் புத்தரின் வாழ்க்கையுடன் தொடர்பானவை அவற்றில் மகாமாயாதேவியின் கனவு, சித்தத்தரின் பிறப்பு, நடனக்காரரின் ஆட்டங்களைக் காணுதல், ராகுல குமாரனைக் காணுதல், மாரா யுத்தம் என்பன குறிப்பிடத்தக்கவை. 

மாரா யுத்தம் ஓவியம்



 இது கோதமி விகாரைச் சுவரில் வரையப்பட்ட ஒரு ஓவியமாகும். மாறன் என்பவனின் யுத்தப்படைகள் புத்தரைச் சூழ்ந்து கொண்டு சண்டையிட தயாராவது போன்ற காட்சிகளாக இவை காணப்படுகிறது. இந்த ஓவியம் தெரிவு செய்யப்பட்டதன் முக்கியமான காரணம் இவ் ஓவியத்தில் கனவடிவப்பாணி மிகத்தெளிவாக காட்டப்பட்டுள்ளதைக் காணலாம். இந்த ஓவியத்தை அவதானியுங்கள் இங்கே மாறனின் படைகளின் முகங்களில் கொடும் பயங்கரத்தன்மையை வெளிப்படுத்திக் காட்டுவதற்கு கேத்திரகணித இருபரிமாண வடிவங்களைப் பயன்படுத்தியுள்ளார். 

இதன் மூலம் முகங்களில் இயற்கைத் தன்மை நீக்கப்பட்டு யுத்த படையினரின் பயங்கரமான சுபாவத்தை திறமையாக வெளிப்படுத்தியுள்ளார். இதைவிட மாரனின் படைகளை வேறுபடுத்திக் காட்ட கபிலம், சாம்பல், கறுப்பு போன்ற இருண்ட வர்ணங்களும் புத்தர் பெருமானைக்காட்ட மஞ்சள் இளம் கபிலம் போன்ற ஒளிப்பான வர்ணங்களும் பயன்படுத்தப்ட்டுள்ளது. உருவங்களின் முழுமைப்பாட்டையும் பூரணத்துவத்தையும் காட்ட பல்வேறு கோடுகளைப் பயன்படுத்தியுள்ளார். இந்த ஓவியமானது உலர் சுதையின் மீது தைலவர்ணத்தால் வரையப்பட்டுள்ளது. 

ஜோஜ்கீற்ரின் நாயிகா ஓவியங்கள்


இந்த ஓவியங்கள் அனைத்தும் பெண்ணுருவை கருப்பொருளாகக் கொண்டவை இந்த பெண்ணுருவங்களின் வழிகள் நீண்டதாகவும் அகன்ற உதடுகளையும் கொண்டதாக வரையப்பட்டுள்ளது. இங்குள்ள விசேட அம்சம் என்னவென்றால் நெற்றியையும் மூக்கையும் காண்பிக்க தனிநேர் கோட்டைப் பயன்படுத்தியுள்ளார். இந்த ஓவியங்களை இந்து சமய எண்ணக்கரு அடிப்படையில் வரையப்பட்டவையாகக் கருதப்படுகிறது. இந்த ஓவியமானது எண்ணெய் வர்ண ஊடகத்தால் கன்வஸ் மீது வரையப்பட்டுள்ளது. 




ஜோஜ்கீற்ரின் ஓவியத்தில் உள்ள கலைப் பண்பு

1. ஜோஜ்கீற் தனது ஓவியங்களுக்கு அதிகமாக இரேகைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.  அதாவது முறிகோடு, வளைகோடு, குறுக்குக்கோடு என்பனவற்றைப் பொதுவாக பாவித்து ஓவியம் வரைந்துள்ளார்.

2. கண்ணைக்கவரும் வர்ணங்களை உபயோகித்து உள்ளார். 

3. மனித உருவத்தின் முழுமையான தன்மையும் இரேகைகள் மூலமே வெளிப்படுத்திக் காட்ட முயற்சி எடுத்துள்ளார்.


ஓவியர் ஜோஜ்கீற் பற்றிய வீடியோ பாட அலகினைப் பெற்றுக் கொள்வதற்கு கீழே கிளிக் செய்யுங்கள்



ஜோஜ்கீற்றின் கோதமி விகாரை ஓவியங்கள்






கருத்துகள்