அநுராதபுரக்காலப் புத்தர்சிலைகள்

இலங்கையின் புத்தர்சிலை நிர்மாணிப்புக்கலையானது கி.மு 3ம் நூற்றாண்டில் ஆரம்பிக்கப்பட்டதாக மகாவம்சம் குறிப்பிடுகின்றது. இச்சிலைகள் இலங்கையின் பல பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அநுராதபுரக் காலப்பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட சிலைகள் இந்தியாவில் நிர்மாணிக்கப்பட்ட புத்தர்சிலைகளின் ஒத்த பண்புகளையும், வேறுபட்ட பண்புகளையும் கொண்டுள்ளன. இச்சிலைகள் இந்தியக்கலை மரபுகளான குப்த கலை மரபு, பல்லவ கலைமரபு, அமராவதிக் கலைமரபு ஆகிய கலைமரபுகளின் செல்வாக்கைத் தழுவியுள்ளன. பல்வேறு காலப்பகுதிக்கும் உரிய புத்தர்சிலைகள் இலங்கையின் பலபகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டாலும் அநுராதபுரக்காலப்பகுதிக்குரிய புத்தர் சிலைகளே சிறப்பானவை எனக் கருதப்படுகிறது. இவ்வாறு சிறப்புப் பொருந்திய புத்தர்சிலைகளான மகாமேகவனப்புத்தர் சிலை, தொழுவிலப்புத்தர்சிலை, பங்குளியப்புத்தர்சிலை, அவுக்கண புத்தர்சிலைகள் பற்றிப் பார்ப்போம். 

மகாமேகவனப் புத்தர்சிலை 

அநுராதபுரத்தில் உள்ள அபயகிரி விகாரையின் வளாகத்திலே அமைந்துள்ள மகாமேகவனப் பூங்காவில் இந்த அமர்ந்த நிலையிலான சமாதிப்புத்தர் சிலை அமைந்துள்ளது. கி.பி 4-5 நூற்றாண்டுகளுக்கிடையே அல்லது 5-6 நூற்றாண்டு காலப்பகுதிக்கிடைப்பட்டதாகக் கருதப்படுகிறது. இந்த மகாமேகவனப் புத்தர்சிலையானது மகாசேனமன்னன் காலத்தில் நிர்மாணிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. இச்சிற்பமானது கருங்கல்லிலே பூரண புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இச்சிலையானது 9அடி 6 அங்குல உயரமுடையது. ஆரம்ப காலத்தில் சிற்பத்தின் மீது சுண்ணாம்பு சாந்து பூசப்பட்டு வர்ணம் பூசப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன. இதன் மூக்கு, சிதைவடைந்து பின்னர் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பத்தின், கலைப்பண்புகளையும் பாவவெளிப்பாடுகளையும் பார்ப்போமானால், புத்தர்சிலையின் கைகள் தியான முத்திரையையும், கால்கள், வீராசன முறையிலும் அமைந்துள்ளது. மகாமேகவனப் புத்தர் சிலையானது எளிமைத் தோற்றத்துடனும், பலம், நேர்த்தியான தன்மை என்பவற்றுடன், சாந்தத்தன்மையும், ஆழ்ந்த ஆன்மீக வெளிப்பாடும் வெளிப்படுத்தப்படுவதினால், இலங்கையில் நிர்மாணிக்கப்பட்ட, மிகச் சிறந்த சிலையாக, இந்த மகாமேகவனப் புத்தர்சிலை காணப்படுகிறது. இந்த சமாதிப் புத்தர்சிலையை அவதானிப்போமேயானால், தலையில், வலஞ்சுழியான நத்தைச் சுருள் கேசமும், உச்சிக்குடுமி, உயரம் குறைவான கழுத்து, உடலின் வடிவத்தினை எடுத்துக் காட்டும், மெல்லிய மடிப்புகளற்ற காவி ஆடை, என்பன இந்தியாவின் குப்த சிற்ப மரபின் சாயலினை எடுத்துக்காட்டுகின்றது. சமாதிநிலையில் காணப்படும் இப்புத்தர்சிலையானது கைகள் தியான முத்திரையிலும் கால்கள் வீராசன முறையிலும் அமர்ந்துள்ளது. நீள்வட்ட முகம், புன்சிரிப்புடன் கூடிய உதடு, பாதி மூடிய விழிகள், நீளமான செவிகள், மென்மையான சுருண்ட கேசம் என்பவற்றினூடாக முகத்தில் சாந்தம், பெருங்கருணை என்பவற்றை சிற்பி சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். 

தொழுவிலாப் புத்தர்சிலை.

அநுராதபுரக்காலத்திற்குரிய இந்த தொழுவிலாப் புத்தர்சிலையானது, அநுராதபுத்தில் உள்ள தொழுவிலா என்ற பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டமையால், இது தொழுவிலாப் புத்தர்சிலை எனப்படுகிறது. இச்சிலை 2ம் காசியப்பமன்னன் காலத்திற்குரியது என, பரணவிதான கூறுகின்றார். கி.பி 7ம்நூற்றாண்டைச் சேர்ந்த, இப்புத்தர்சிலையில், நாம் முன்பு பார்த்த, சமாதிப் புத்தர் சிலையின்  ஒத்த இயல்புகள் காணப்படுவதினை அவதானிக்கலாம். அதாவது சமாதிப்புத்தர் சிலை போன்றே, அமர்ந்த நிலையில் காணப்படும் இந்த தொழுவிலாச் சிற்பமும் கைகள் தியான முத்திரையுடனும் கால்களை வீராசனமுறையிலும் வைத்து அமர்ந்துள்ளது. இந்த தொழுவிலப்புத்தர்சிலையானது, பளிங்கு போன்ற மஞ்சள் நிறமான ஒருவகை, சுண்ணாம்புக்கல்லில் பூரண புடைப்பு நுட்பமுறையிலே செதுக்கப்பட்டுள்ளது. இதன் உயரமானது 5அடி 8 அங்குலமாகக் காணப்படுகின்றது. தற்போது இந்த தொழுவிலாப்புத்தர் சிலையினை கொழும்பு தேசிய அரும்பொருட்காட்சியகத்தில் நீங்கள் பார்க்க முடியும். 

தொழுவிலாப்புத்தர்சிலையின் கலைப்பண்புகளைப் பார்ப்போம் 

அழகிய மலர்ச்சியான தன்மையைக் கொண்ட இந்த தொழுவிலாப்புத்தர் சிலையானது உயர்வான பாவவெளிப்பாட்டைக் கொண்டதாகக் காணப்படுகிறது. இதன் தலையில் நத்தைச்சுருள் அமைப்புள்ள தலைமுடியும் அதனுடன் உச்சிக்குடுமியும் காணப்படுகிறது. பெரிய காதும், பாதிமூடிய கண்களும், புன்சிரிப்புடன் கூடிய உதடுகளும் இச்சிலைக்கு சிறப்பினைக் கொடுக்கின்றது. மேலும், உடலின் ஒருபக்கத்தினை மறைத்திருக்குமாறு காவியுடையணிந்துள்ளார். இந்த காவியுடையானது உடல் அமைப்பை வெளிப்படுத்தும் வண்ணம் உடலுடன் ஒட்டியவாறு மடிப்புக்களின்றி காணப்படுகிறது. சமாதிப்புத்தர்சிலை போன்று தொழுவிலாப் புத்தர்சிலையிலும் குப்த மரபின் பண்புகள் காணப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். தியானம் செய்யும் இயல்பு, சாந்தம், கருணை என்னும் பண்புகள் இப்புத்தர்சிலையில் வெளிக்காட்டப்பட்டுள்ளது. 

பங்குளியப் புத்தர்சிலை

இச்சிலையானது அநுராதபுரத்தில் உள்ள, பங்குளிய என்ற கிராமத்தில் அமைந்துள்ள, அசோக்கராமய விகாரையில் காணப்படுகிறது. இதனால் இப்புத்தர்சிலை பங்குளியப் புத்தர்சிலை என அழைக்கப்படுகிறது. இந்த பங்குளியப் புத்தர்சிலையானது 5ம் நூற்றாண்டுக்கும் 6ம் நூற்றாண்டுகளுக்கிடைப்பட்ட காலப்பகுதிக்குரியது என இச்சிலை வைக்கப்பட்டுள்ள சிலைமனையில் உள்ள கல்வெட்டில் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பங்குளிய புத்தர் சிலையின் உயரமானது ஏறக்குறைய 6அடி 8அங்குலமாகக் காணப்படுகிறது. இந்த சிலையினைச் செய்வதற்கான ஊடகமாக பளிங்கு போன்ற சுண்ணாம்புக் கல் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

பங்குளியப் புத்தர்சிலையின் கலைப்பண்புகளையும் பாவவெளிப்பாடுகளும்.
அமர்ந்த நிலையில் காணப்படும் இந்த பங்குளியப்புத்தர் சிலையானது சற்று சிதைவடைந்த நிலையிலேயே காணப்படுகிறது. இதனால் இப்புத்தர்சிலையின் பண்புகளை இனங்காண்பது என்பது  கடினமாகவே உள்ளது. எனினும், இப்புத்தர்சிலையின் இரு கைகளும் இருவேறு முத்திரைகளைக் காட்டி நிற்பதாகக் கூறப்படுகிறது. அதாவது, இதன் வலது கையினால் விதர்க்க முத்திரையும், இடது கையினால் கடஹஸ்த முத்திரையும் காட்டப்பட்டுள்ளதென அறிஞர்கள் கருதுகின்றனர். கால்கள் வீராசன முறையில் வைத்து அமர்ந்துள்ளார். சிற்பத்தின் தலைப்பகுதியை பார்ப்போமானால், இது ஒரு நீள்வட்ட வடிவமுடைய முகமாக உள்ளது, தலையிலே நத்தைச்சுருள் வடிவமுடைய கேசமும் தலையின் உச்சியிலே உஷ்ணிசய எனும் உச்சிக்குடுமியும் காணப்படுகிறது. இதைவிட, பெரிய காதுகள், பாதி மூடிய கண்கள் என்பவையும் காணப்படுகிறது. இதன் மூலம் புத்தரின் சாந்த குணம் மற்றும் பெருங்கருணையுடன் கூடிய ஆன்மீகப்பண்புகள் என்பவை சிறப்பாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளதை அவதானிக்கலாம். அத்துடன், இந்த பங்குளியப் புத்தர்சிலையானது புத்தர் தர்ம போதனை செய்வதைக் காட்டும் ஒரு சிற்ப வடிவம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இச்சிலையின் கண்களுக்கு மாணிக்கக்கற்கள் பதித்திருந்தமைக்கும், இதன் உச்சந்தலையில் காணப்படும் குடுமி மீது சிரசணி அமைக்கப்பட்டிருந்தமைக்குமான சான்றுகள் கிடைக்பெற்றுள்ளது. சிற்பமானது மிகவும் தேய்வடைந்த நிலையில் காணப்படுவதால் காவியுடையின் மடிப்புகள் பற்றி தெளிவாக கூற முடியாது உள்ளது. எனவே எஞ்சியிருக்கும் சிற்பத்தின் பகுதிகளை உற்று நோக்கும் போது இது சமாதிப்புத்தர் சிலை, தொழுவிலாப் புத்தர் சிலைகள் கொண்டிருக்கும் கலைமரபான குப்தர் கலைபாணியின் இயல்புகளையே இந்த பங்குளியப் புத்தர் சிலையும் கொண்டிருக்கிறது என்பது விமர்சகர்களின் கருத்தாக உள்ளது. 

அவுக்கண புத்தர்சிலை
அநுராதபுரக்காலத்திற்குரிய இப்புத்தர் சிலையானது, இலங்கையின் நின்ற நிலைப் புத்தர்சிலைகளிடையே மிகவுயரமான புத்தர்சிலை என்ற விசேட இடத்தைப் பெறுகின்றது. கி.பி 5ம் நூற்றாண்டுக்கும் 8ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், நிர்மாணிக்கப்பட்டதாகக் கருதப்படும் இச்சிலையானது, அநுராதபுர மாவட்டத்தில் உள்ள கலாவாவிக்கு அண்மையில் அமைந்துள்ள 'அவுக்கண' என்ற கிராமத்தில் உள்ளது. இதனால் இச்சிலையினை அவுக்கண புத்தர்சிலை என அழைக்கின்றனர். அவுக்கண புத்தர்சிலையானது, தாதுசேன மன்னன் காலத்தில், நிர்மாணிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இயல்பாக இருந்த, ஒரு உயரமான கருங்கற் பாறையின் முகப்பிலே, முழுப்புடைப்பு சிற்ப முறையிலே இந்த அவுக்கண புத்தர்சிலையானது செதுக்கப்பட்டுள்ளது. இச்சிற்பமானது தாமரைப் பீடத்தின் மீது, சமபங்க நிலையில் நிற்பது போன்று, வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது, சமபங்க நிலை என்பது, உடலின் பாரத்தை இருகால்களும் தாங்கும் வண்ணம் உடலை நேராக வைத்து நிற்றல் ஆகும். அடுத்து, இச்சிற்பத்தின் உயரமானது, 38 அடி 10 அங்குல உயரமாகக் காணப்படுகிறது. இதைவிட அவுக்கண புத்தர்சிலையானது, சிற்ப அளவான நவதாள சிற்ப அளவில் அதாவது, சிற்ப அளவான ஒன்பது தாளவகை அளவில் அமைக்கப்பட்டிருப்பதும் இதன் சிறப்பம்சமாகும். 

மேலும், இச்சிற்பத்தின் மூலம் புத்தபெருமானின் மகா புருடஇலட்சணங்களையும், பத்துப் பெரும் சக்திகளையும் காட்டுவதற்கு முயற்சி எடுக்கப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது. புத்தபெருமானின் 32 மகாபுருடஇலட்சணங்களான, பரிபூரணமாண உடல், பொலிவான புயங்கள், பொலிவான உள்ளங்கைகள், பொலிவான தோள்கள், வலஞ்சுழியான தலைமயிர் சுருள்கள், நேரிய காதுச்சோனை, மிக நுணுக்கமான குடுமி, அதற்கு மேல் அமைந்த சிரசணி, ஆகியன, இச்சிலையில் காட்டப்பட்டுள்ளதை அவதானிக்கலாம். இங்கு தலையில் உள்ள சிரசணி அல்லது தீச்சுடரானது, சிற்பம் அமைக்கப்பட்ட காலப்பகுதியில் அமைக்கப்படாது, பிற்பட்டகாலத்தில் செய்து பொருத்தப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. 

அவுக்கண புத்தர்சிலையின் வலதுகையானது, அபய முத்திரையைக் காட்டி நிற்கிறது. இதன் இடக்கையானது காவியுடையைத் தாங்கியவாறு உள்ளது. பேராசிரியர் சரச்சந்திரவிக்கிரமகே அவர்கள் இடதுகையானது கடகஸ்த முத்திரையையும் குறிப்பதாக கூறுகின்றரர். உடலின் ஒரு பக்கத்தை மாத்திரம் மறைத்துள்ள காவியுடையானது ஆழமற்ற சந்தத்துடன் கூடிய ஒற்றை மடிப்பாக செதுக்கப்பட்டுள்ளது. இதனூடாக உடலின் அமைப்பு ஊடுருவித் தெரிகிறது. இவ்வாறு ஒட்டுமொத்த சிற்பக்கலையின் பண்புகளின் அடிப்படையில் பார்க்கும் போது இது அமராவதி சிற்பமரபைச் சார்ந்ததாக அறிஞர்களால் கருதப்படுகிறது.



புத்தர்சிலைகள் பற்றிய வரலாற்றுப் பின்ணனி

புத்தர்சிலைகள் பற்றிய கலைத்துவப்பண்புகள்




கருத்துகள்