தூபராம தாதுகோபம்

தாதுகோபங்களிலேயே மிகவும் பழமையானதும் வரலாற்றுச் சிறப்புமிக்கதுமான தாதுகோபமாகக் காணப்படுவது இந்த தூபராம தாதுகோபமாகும். ஏனெனில், இலங்கையில் புத்த மதம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் முதன் முதலாக இலங்கையில் கட்டப்பட்ட மிகப் பழமையான தாதுகோபம் இதுவாகும். கி.மு 3ம் நூற்றாண்டில் தேவநம்பியதிஸ்ஸ மன்னனால் தூபராமதாதுகோபம் கட்டப்பட்டது. இத்தாதுகோபமானது புத்தரின் வலது காரை எலும்பினை வைத்துக் கட்டப்பட்டதாக வரலாற்று நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஆரம்பத்தில் இந்த தாதுகோபத்தினை தேவநம்பியதிஸ்ஸ மன்னன் கட்டும் போது இதனை நெற்குவியல் வடிவில் கட்டியதாகவும், பின்பு பல்வேறு மறுசீரமைப்புகளுக்குப் பின்னர், மணிவடிவமாக மாற்றிக் கட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே இன்று நாம் பார்க்கும் தூபராமதாதுகோபத்தின் வடிவம் மணிவடிவம் அல்லது கண்டாகார வடிவம் ஆகும். தூபராம தாதுகோபத்தின் உயரம் 63 அடி ஆகும். இதன் அடிப்பாகத்தின் விட்டம் 164 ½ அடியாகவும் காணப்படுகிறது. தூபராமதாதுகோபம் கட்டிய பின்னர் ஆட்சிக்கு வந்த மன்னர்கள் இதனைப் புனர்நிர்மாணம் செய்ததுடன் மேலதிக கட்டிட அமைப்புக்களையும் கட்டினர். இந்தவகையில், இலஞ்சதிஸ்ஸ மன்னனால் தூபராமதூபியைப் பாதுகாப்பதற்காக அதனைச் சுற்றி வட்டதாகே எனப்படும் வட்டமான மனை அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது இந்த வட்டதாமனை அமைக்கப்பட்டதற்கு ஆதாரமாக இருப்பது தூபராமயவைச் சுற்றிக் காணப்படும் சிறிதும் பெரியதுமான கற் தூண்கள் ஆகும். 

இத்தூண்கள் அலங்கார செதுக்கு வேலைப்பாடுகள் கொண்டதாக காணப்படுகிறது. தூபராமயவைச் சுற்றி வட்டமான தூண்கள் அமைக்கப்பட்டு அரைக்கோள வடிவில் கூரை அமைக்கப்பட்டிருந்ததாக நம்பப்படுகிறது. இக்கூரை மரத்தினால் அமைக்கப்பட்டதால் அழிவடைந்து வெறும் தூண்களை மாத்திரமே காணக்கூடியதாக உள்ளது. 

ரூவன்வலிசாயா தாதுகோபம்

ரூவன்வெலிசாயா தாதுகோபமானது அநுராதபுரக்காலத்தில் அமைக்கப்பட்ட மிகப்பெரிய தாதுகோபமாக இருந்துள்ளது. இதனால் ரூவன்வலிசாயாவினை மகாதூபி எனவும் அழைத்தனர். நீர்க்குமிழி வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. கி.மு 2; நூற்றாண்டளவில் துட்டகைமுனு மன்னனால் இத்தாதுகோபம் கட்டுவிக்கப்பட்டது. ஆனாலும், ரூவன்வலிசாயா தாதுகோபத்தின் நிர்மாணப்பணிகள், நிறைவு பெறமுன்பு, துட்டகைமுனு மன்னன் காலமாகிவிட்டதால், அவரது தம்பியான சத்தாதிஸ்ஸ மன்னன், மிகுதிக் கட்டிடப்பணிகளைக் கட்டி முடித்து, அதற்கு வெண்சாந்து பூசும் வேலைகளையும் செய்து முடித்தான். அத்தோடு நின்றுவிடாது, ரூவன்வலிசாயாவைச் சுற்றி யானைத்தலைகள் கொண்ட யானை அணிமதிலையும் அழகுற அமைத்தான்.

தொடர்ந்து இலங்கையை ஆட்சி செய்த பல மன்னர்கள் ரூவன்வலிசாயாவை புனரமைப்புச் செய்ததுடன் பலபுதிய கட்டிட நிர்மாணங்களையும் கட்டினர். அதாவது, பேசாவளலு, கொத்கரல்ல, சூடாமாணிக்கம், வாகல்கடம், காவற்கல், சந்திரவட்டக்கல் ஆகியன பிற்பட்டகாலத்தில் அமைக்கப்பட்டன. ரூவன்வலிசாயாவின் கொத்கரல்லவானது பளிங்குக்கல்வினால் அமைக்கப்பட்டுள்ளது. இதன் உயரம் 25அடி ஆகும். தாதுகோபத்தின் நான்கு பக்கமும் வாகல்கடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாகல்கடத்தில் அழகிய பூக்கொடி அலங்கார வேலைப்பாடுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

ரூவன்வலிசாயா தாதுகோபம் அமைக்கப்பட்டுள்ள சதுரவடிவ மேடையின் நான்கு மூலையிலும் ரூவன்வலிசாயா தாதுகோபத்தினை மாதிரியாகக் கொண்ட சிறிய தாதுகோபங்கள் நான்கு அமைக்கப்பட்டுள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது. இதைவிட, ரூவன்வலிசாயாவின் சுற்றுப்பிரகாரத்தில் துட்டகைமுனு மன்னனின் சிலை, விகாரமாதேவியின் சிலை, பாதியதிஸ்ஸ மன்னனின் சிலை, ரூவன்வலிசாயாவின் மாதிரியமைப்பு போன்றனவும் நிர்மாணிக்கப்பட்டுள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது. 

அபயகிரி தாதுகோபம்


அநுராதபுரக்காலத்திற்குரிய இந்த அபயகிரி தாதுகோபமானது கி.மு 1ம் நூற்றாண்டில் வட்டகாமினி அபயன் என்று அழைக்கப்படும் வலகம்பா மன்னால் கட்டுவிக்கப்பட்டது. இதற்கு அபயகிரி எனப் பெயர்வரக் காரணம் கிரி எனப்படும் ஜைனமத நிகண்டராமய அதாவது துறவிமடம் இருந்த இடத்தில் இந்த தாதுகோபம் நிர்மாணிக்கப்பட்டதால், அபய என்ற மன்னனின் பெயரை முதலாகவும் கிரி என்ற இடத்தின் பெயரையும் இணைத்து அபயகிரி என்று அழைக்கப்பட்டதாக வரலாறு கூறப்படுகிறது. இதைவிட அபயகிரி தாதுகோபத்தினை உத்தரசைத்தியம், அபய, பயாகிரி போன்ற பெயர்களாலும் அழைப்பார்கள். 

புத்த பெருமான் ஒரு தடவை இலங்கைக்கு விஜயம் செய்யும் போது தியானநிலையில் இங்கு அமர்ந்ததாகக் கூறப்படுகிறது இதனால், இவ்விகாரை புனிதம் பெற்று அட்டமஸ்தானத்திற்குரிய ஒரு விகாரையாக விளங்குகின்றது. தானியக்குவியல் வடிவில் அமைக்கப்பட்டுள்ள அபயகிரி தாதுகோபமானது 245 அடி உயரமும் 355 அடி விட்டமும் உடையதாகக் காணப்படுகிறது. அபயகிரி தாதுகோபத்தினை ஆரம்பத்தில் அமைக்கும் போது சதுரக்கோட்டம் மற்றும் கொத்கரல்லவிற்குப் பதிலாக குடையும் அதனைத்தாங்கும் தூணும் மட்டுமே அமைக்கப்பட்டு இருந்துள்ளது. பின்னர் அது உடைந்து வீழ்ந்தமையால், பிற்காலத்தில் சதுரக்கோட்டமும் கொத்கரல்லவும் அமைக்கப்பட்டது. அபயகிரி தாதுகோபத்தின் நுழைவாயிலின் இருபக்கமும் பார்த்தீர்களேயானால், பைரவ வடிவ காவற்சிலைகள் 2 அமைக்கப்பட்டுள்ளது. இவற்றினை சங்கநிதி எனவும் பத்மநிதி எனவும் அழைப்பர்கள்.

ஜேதவனராம தாதுகோபம்

ஜேதவனராம தாதுகோபமானது, இலங்கையில் மிகவுயரமான தாதுகோபமாக இருப்பதோடு மட்டுமல்லாது, உலகில் இதைப் போன்ற நினைவுத்தூபிகளில், மிகவுயரமான புனிதக்கட்டிடம் என்ற சிறப்பையும் பெற்றுள்ளது. 

அநுராதபுரக்காலத்திற்குரிய இத்தாதுகோபமானது 4ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். இதனை மகாசென் என்னும் மன்னன் கட்டுவித்தான். மகாசென் மன்னன் மகாவிகாரையைச் சேர்ந்த ஒரு நிலப்பகுதியில் இந்த ஜேதவனராமயவைக் கட்டியதாகவும், பின்பு, தக்கின விகாரையில் இருந்த திஸ்ஸ என்னும் பிக்குவிற்கு, தானம் வழங்கியதாகவும் கூறப்படுகிறது. ஜேதவனராமயவைக் கட்டும் போது, அதனுள் வைத்துக் கட்டுவதற்கான தாதுப்பொருளாக, புத்தபெருமானின் இடுப்புப்பட்டி அல்லது பட்டிதாதுவை வைத்துக் கட்டியதாக நம்பப்படுகிறது. 

ஜேதவனராம தாதுகோபமானது தானியக்குவியல் வடிவில் கட்டப்பட்டது. ஆரம்ப காலத்தில் இதன் உயரம் 400 அடியாக இருந்துள்ளது. தற்போது இதன் உயரம் 232 அடியாகவும் விட்டம் 370 அடியாகவும் உள்ளது. சதுரவடிவ மேடை மீது அமைக்கப்பட்டுள்ள இந்த தாதுகோபத்தின் சுற்றுப் பிரகாரத்திற்குள் நுழைவதற்கு நான்கு பக்கமும் வாசல்கள் உள்ளன. இதைவிட ஜேதவனராமய தாதுகோபத்தைச் சுற்றி நான்கு பக்கமும் வாகல்கடங்களும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 

ரன்கொத் தாதுகோபம்.


பொலனறுவைக் காலத்திற்குரிய றன்கொத் தாதுகோபமானது அலஹெனப் பிரிவெனப் பூமிக்கு மேற்குத் திசையில் அமைந்துள்ளது. இந்த தாகோபத்தினை நிஸங்கமல்ல அரசன் கட்டுவித்ததாகக்
கூறப்படுகிறது. நிஸங்கமல்ல அரசனால் இந்த தாதுகோபத்திற்கு பொற்கலசம் பொருத்தப்பட்டதால் இதனை ரன்கொத் அதாவது பொற்கலச தாதுகோபம் என்ற பெயரால் அழைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. நீர்க்குமிழி வடிவில் கட்டப்பட்டுள்ள றன்கொத் தாதுகோபத்தின் உயரம் 200 அடியாகவும் விட்டம் 186 அடியாகவும் காணப்படுகிறது. தாகோபத்தின் எட்டு மூலைகளிலும் எட்டு சிலைமனைகள் காணப்படுகிறது. தாதுகோபத்தின் சதுரக்கோட்டத்தில் தாமரை பூ அலங்காரம் காணப்படுகிறது. றன்கொத் தாதுகோபத்தின் நான்கு பக்கமும் மலர்க்கொடி அலங்கார வேலைப்பாடுகளுடன் கூடிய வாகல்கடங்கள் நான்கும் காணப்படுகிறது.   


களனி தாதுகோபம் 


களனித் தாதுகோபமானது முதன் முதலாக அநுராதபுரக்கலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. பிற்காலத்தில் களனி தாதுகோபமானது அழிவடைந்தமையால் 20ம் நூற்றாண்டில் மீண்டும் கட்டப்பட்டது. களனிப்பிரதேசத்தில் அமைந்துள்ளதால் களனித் தாதுகோபம் எனப்படுகிறது. சித்தாத்தர் புத்தராகி 8வது ஆண்டில் மணி அக்பித என்ற நாக அரசரின் வேண்டுகோளுக்கு இணங்கி இலங்கைக்கு எழுந்தருளி இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட ஆசனத்தில் அமர்ந்து தர்ம உபதேசம் செய்தார். அந்த இரத்தினம் பதிக்கப்பட்ட ஆசனத்தை புனித தாதுவாக வைத்து ஜடாலதிஸ்ஸ என்ற மன்னன் இந்த களனி தாதுகோபத்தினை நிர்மாணித்ததாக கூறப்படுகிறது. 
இது பதினாறு புனிதத்தலங்களுள் ஒன்றாக அதாவது சொளோஸ்மஸ்தானங்களில் அடங்கும் விகாரையாக உள்ளது. தானியக்குவியல் வடிவில் அமைக்கப்பட்டுள்ள களனி தாதுகோபத்தின் முழு உயரம் 90 அடியாகும். இத் தாதுகோபத்தின் நான்கு திசைகளிலும் மலர் ஆசனமாகப் பயன்படுத்தப்படும் வாகல்கடங்கள் நான்கு அமைந்துள்ளன. 


இந்த பாட அலகிற்கான வீடியோவை பார்ப்பதற்கு இதன் மேல் கிளிக் செய்யுங்கள்:




கருத்துகள்