ஓவியக்கலைஞர் கே.கனகசபாபதி

 

ஓவியக்கலைஞர் கே.கனகசபாபதி

20ம் நூற்றாண்டில் இலங்கை நவீன ஒவியக் கலைத்துறையில் முன்னோடியாச் செயற்பட்ட தமிழ் ஓவியக்கலைஞரான கே.கனகசபாபதி. 1915ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் உள்ள உரும்பிராய் என்ற இடத்தில் பிறந்த கனகசபாபதி அவர்கள் உரும்பிராய் இந்துக்கல்லூரியிலே சித்திர ஆசிரியர் அம்பிகைபாகன் என்பவரிடம் தனது ஆரம்பகால சித்திரக்கல்வியைப் பயின்றார். இளமைக்காலத்தில் புகைப்படங்களைப் பார்த்து வரைவதில் அதிக ஆர்வமுடையவராய்க் காணப்பட்டார். 

பிற்காலத்தில் ஆசிரியர் கலாசாலையில் சித்திரக்கலை பயின்றார். அக்காலத்திலே பிரபலமாக இருந்த ஓவியரும் ஓவிய ஆசிரியருமான திரு.எஸ்.ஆர் கனகசபை அவர்கள் கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் வின்சர் ஆட்கிளப் அல்லது வின்சர் ஓவியக்கழகம் என்ற பெயரில் ஒரு ஓவியக்கழகத்தை ஆரம்பித்து சித்திர ஆசிரியர்கள் அல்லது ஓவியம் பயில விரும்புபவர்களுக்கான ஒரு பயிற்சி வகுப்பினை ஆரம்பித்தார். அதில் ஓவியக்கலைஞர் கே.கனகசாபதி அவர்களும் இணைந்து ஓவியத்துறையில் முறையான பயிற்சியைப் பெற்றார். அதனைத் தொடர்ந்து கொழும்பு தொழிநுட்பக்கல்லூரியில் இணைந்து ஒவியக்கலை பயின்றார். அதன் பின்னரே பலாலி ஆசிரியர் கலாசாலையில் சித்திரக்கலை விரிவுரையாளராக பணியாற்றினார். 

இவரது ஆரம்பகால ஓவியங்களில் ஐரோப்பாவில் தோன்றிய அக்கடமிக் யதார்தவாதம் என்ற ஓவிய கலைப் பண்புகளுடனான செல்வாக்கு காணப்பட்டது. பிற்காலத்தில் வின்சர் ஓவியக்கழகத்தில் பெற்ற கல்வி, அதன் கழக உறுப்பினருடனான பழக்கம் ஆகியன காரணமாக அவரது ஓவியப்படைப்புக்களில் கனவடிவாதக் கலைப்பண்புகளின் செல்வாக்கு ஏற்படத் தொடங்கியது. இந்த கனவடிவாதக்கலையில் தமக்கே உரித்தான ஒரு பாணியை உருவாக்கிக் கொண்ட கே கனகசபாபதி அவர்கள் தென் இலங்கையில் பிரபலமாக இருந்த 43 என்ற ஓவியக்குழுவினரால் கொழும்பில் நடாத்தப்பட்ட ஓவியக்கண்காட்சியில் பங்குபற்றினார். 


கே.கனகசபாபதி வரைந்த ஓவியங்களில் வாசிக்கும் பிள்ளை சேவற்சண்டை. ஓய்வெடுத்தல். நிலத்தோற்றம். ஆகியன சிறந்த படைப்புகளாகும். பொதுவாக இவரது நவீன பாங்கான ஓவியங்கள் அனைத்தும் இயற்கையில் நாம் காணும் விடயங்களை அப்படியே யதார்தபூர்வமான ஓவியப்படைப்பாக வரையாமல். இயற்கைக்கு மாறாக வித்தியாசமான கலைப்பாணியில் வரைந்திருப்பதனை நாம் அவதானிக்கலாம். நவீன ஓவியக்கலைப்பாணியின் பிரதான பண்பு இதுவாகும். இதற்கு கனகசபாபதி அவர்கள் கனவடிவாத ஓவியப்பாணியை தனக்கேயுரித்தான முறையில் மாற்றி ஓவியப்படைப்புக்களில் பயன்படுத்தியுள்ளதை நாம் காணலாம்.

கனகசபாபதியின் வாசிக்கும் பிள்ளை ஓவியம்

கே.கனகசபாபதி அவர்களால் தனது மகனைப் பார்த்து வரைந்த ஓவியம் எனக் கூறப்படுகின்றது. சிறுவன் ஒருவன் யன்னல் அருகே அமர்ந்து அந்த யன்னலினூடாக வரும் ஒளியில் புத்தகம் ஒன்றை வாசித்துக் கொண்டிருக்கும் காட்சியே இதுவாகும். யன்னலானது கிடையான பல பலகைச் சட்டங்களால் செய்யப்பட்டுள்ளதால் அதனூடாக வரும் வெளிச்சமானது கோடுகளாக விழுகின்றது. இதைப்போன்ற யன்னல்களை தற்போது காண்பது அரிது. கலை என்பது காலத்தின் கண்ணாடி அல்லது பதிவேடு என்று கூறுவார்கள் எனவே இந்த ஓவியத்திலும் அன்றைய யுத்த காலகட்டத்தில் மின்சாரமே இல்லாத விளக்கெண்ணை தட்டுப்பாடான காலகட்டத்தில் மாணவர்கள் பகல் வெளிச்சத்தில் தான் கல்வி கற்றார்கள். இவ்வாறான ஓரு காலகட்டதில்தான் இந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது. 

இந்த வாசிக்கும் பிள்ளை என்ற ஓவியமானது கன்வஸ் துணியின் மீது தைல வர்ணம் அல்லது எண்ணெய் வர்ண ஊடகத்தால் வரையப்பட்டுள்ளது. இந்த ஓவியத்தைப் பார்க்கும் போது நவீனத்துவக் கலைப்பாணியான கனவடிவ கலைப்பாணி இயல்புகளை வெளிப்படுத்தி வரையப்பட்டுள்ளதைக் காண முடிகிறது. இவ் ஓவியத்திலே இங்கே நாம் காணுகின்ற விசேட அம்சமாக இருப்பது ஓவியத்தினுடைய முன்ணணியும் அதாவது வாசிக்கும் சிறுவனும் பின்ணணியும் அதாவது பின்னாலுள்ள சுவர் யன்னல் என்பனவும் ஒரே தளத்தைப் போன்று முன்ணணி பின்னணி என்று வித்தியாசம் காண்பிக்காது வரைந்துள்ளமை விசேட அம்சமாக உள்ளது. அதாவது கேத்திர கணித வடிவங்களைப் பயன்படுத்தி வேறுபட்ட வடிவங்களையும் வௌ;வேறு தன்மை கொண்ட கோடுகளையும் ஒரு தனிவர்ணப் பின்ணணியில் சித்தரித்துக்காட்டியுள்ளார். ஆயினும். இந்த ஓவியத்திலே வெளியின் ஆழத்தினை அதாவது தூரநோக்கினைக் காண முடிகிறது. இதைவிட ஒளிநிழல் என்பன கூட பல்வேறு விதமான தடித்த மெல்லிய கோடுகள் மூலம் காட்டப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. வர்ணப் பிரயோகமாக ஓவியத்தில் பச்சை நிறமும் அதன் சாயல்களையுடைய நிறங்களுடன் கபில. பழுப்பு நிறங்களைப் பயன்படுத்தி பிரயோகித்து முன்ணணி பின்னணி வரையப்பட்டுள்ளதைக் காண முடியும். இந்த தனி வர்ணப்பாவனையானது கோடுகளின் மூலம் பல்வகைத் தன்மையுடையதாகக் காட்டபடுகிறது. ஓவியத்தில் கோடுகள் வர்ணம் மூலம் வரைய எடுத்துக் கொண்ட தலைப்பை மேலும் தெளிவுபடுத்தி அல்லது ஆழப்படுத்திக்காட்டவும் உணர்வு வெளிப்பாட்டை வெளிப்படுத்தவும் ஓவியர் கனகசபாபதி அவர்கள் முயற்சி ஏடுத்துள்ளதைக் காணலாம். அதாவது வாசிக்கும் பிள்ளையை ஓழுங்கமைத்த ஓவிய வெளியினுள் இடப்பரப்பைத் திட்டமிட்டு வாசித்தல் எனும் செயற்பாடு காட்டப்பட்டுள்ளது. 


சேவற் சண்டை ஓவியம் 


கலைஞர் கே.கனகசபாபதியினால் வரையப்பட்ட இந்த ஓவியமும் தைலவர்ணம் அல்லது எண்ணெய் வர்ணத்தினால் கன்வஸ் மீது வரையப்பட்டுள்ளது. நவீனத்துவ பாணியில் வரையப்பட்ட இந்த ஓவியமானது கனவடிவ கலைப்பண்புகளின் செல்வாக்கிற்கு உட்பட்டு வரையப்பட்டுள்ளதைக் காண முடியும். இங்கு இரண்டு சேவல்கள் சண்டையிடும் காட்சியே வரையப்பட்டுள்ளது. இருபரிமாண வடிவங்களைப் பயன்படுத்தி வரையப்பட்டிருந்தாலும் வர்ணம் தீட்டும் போது முப்பரிமாணப் பண்பு வெளிப்படுமாறு ஓவியர் வர்ணம் தீட்டியுள்ளதைக் காணலாம். சேவல்கள் சண்டையிடும் வேகம், துரிதம், லயம் என்பவற்றைக் காட்டுவதற்கு இரண்டு சேவல்களைச் சூழவும் பின்ணணியில் பல்வேறு விதமான தடித்த மெல்லிய முறிகோடுகள் வரையப்பட்டு ஓவியக் காட்சியின் வெளிப்பாட்டுத்தன்மைக்கு மேலும் வலுச் சேர்த்துள்ளது. 

இங்கு கனவடிவாதக் கலைப்பாணியின் இயல்புகளை ஆதாரமாகக் கொண்டு பிராணி உருவங்களையும் பின்ணணியையும் ஓவியர் ஆக்கியுள்ளார். அடிப்படையில் ஒரு தனி வர்ணம் தீட்டுதலைக் காட்டும் கனவடிவாதக்கலையின் வர்ணம் தீட்டல் பண்புகளையும் இந்த ஓவியத்தில் காணலாம். இங்கேயும் ஒத்த கோடுகள் மற்றும் தளவடிவங்களை பின்ணணி மற்றும் முன்ணணியில் பயன்படுத்துவதன் மூலம் அவை ஒரேதளத்தில் அமைந்துள்ளதைப் போல் காட்டப்பட்டுள்ளது. இப்பண்பானது கனவடிவாதக்கலையின் முதன்மையான ஒரு பார்வை உத்தியாகும்.

ஓவியர் கனகசபாபதியின் ஓவியங்களில் உள்ள கலைப் பண்புகளாக.

கனவடிவாதப் பண்புகளை ஓவியத்தில் சில பகுதிகளுக்கு மட்டும் உபயோகிக்காது      ஓவியம் முழுமையும் வரையப்பட்டுள்ளதை அவதானிக்கலாம்.

ஒரு தனி வர்ணம் பயன்படுத்தியிருத்தல். 

பல்வேறு கோடுகள் வர்ணங்களின் ஒத்திசைவு மூலம் தலைப்பை மேலும் முனைப்பாகவும் உணர்வு பூர்வமாகவும் காட்டுதல் என்பன ஓவியர் கனகசபாபதி அவர்களின் ஓவியங்களில் உள்ள கலைத்துவப் பண்புகளாக உள்ளது. 

இப்பாட அலகுக்குரிய வீடியோ கீழே உள்ள லிங்கில் பெறலாம்:

ஓவியக்கலைஞர் கே.கனகசபாபதி

கருத்துகள்