பாரம்பரிய வேடமுகக் கைத்தொழில்

வேடமுகம் என்றால் முகமூடி ஆகும். இவற்றை நீங்கள் சிறுவர் நாடகங்கள் முதல் பாரம்பரிய நடனங்கள் வரை பார்த்திருப்பீர்கள். இவ்வாறான வேடமுகங்களுக்கு உலகில் தொன்மையான ஒரு வரலாறு உண்டு. 

    இந்த வேடமுகங்கள் உலகின் பல்வேறு நாடுகளிலும் ஆதிகாலந்தொட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வேடமுகத்தினை மக்கள் வேட்டையாடுதலின் போது மிருகங்களை பயமுறுத்தவும் விலங்கிலிருந்து தப்பித்துக் கொள்ளவும் பயன்படுத்தினர். 

    முக்கியமாக புராதன காலத்தில் பல்வேறு விதமான சடங்குமுறைகள் காணப்பட்டன. இந்த சடங்குகளில் முகமூடிகள் அணிந்து கொண்டு பூசாரிகள் நடனமாடுவது வழக்கமாக இருந்தது. இச்சடங்குகள் பயிர்ச் செய்கை செய்யும் காலத்தில் அதற்கு வேண்டிய நல்ல காலநிலை கிடைக்க வேண்டியும், வியாதிகளில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்கும் நோய்களை விரட்டுவதற்காகவும் நடாத்தப்பட்டன.

இலங்கையில் காண்படும் வேடமுகங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

1. கோலம் வேடமுகம்

2. சன்னி வேடமுகம்

3. ராட்சா வேடமுகங்கள் 

கோலம் வேடமுகங்கள்

இவை நாட்டுப்புற நாடகங்களில் தோன்றும் கதாபாத்திரங்களைச் சித்தரிப்பதற்காக உபயோகிக்கப்படுகின்றது. இந்த வேடமுகங்கள் நகைச்சுவை பொருந்தியதாக ஆக்கப்பட்டுள்ளன. இவை பயன்படுத்தப்படும் நாடகங்கள் சமூகத்தில் நடைபெறும் குறைகளை நகைச்சுவையாக எடுத்துக் காட்டும் விதமான உரையாடல்களைக் கொண்ட நாடகங்களாக காணப்படும். இதற்கு உதாரணமான லெஞ்சியா, நொச்சி அக்கா, ஹெஞ்சப்பு, பொலிசுக்காரன், செட்டி போன்ற பல்வேறு விதமான சமுக மக்களின் வேடமுகங்கள் உள்ளன. 


சன்னி அல்லது பேயாட்ட வேடமுகங்கள்

புத்தசமயம் இலங்கையில் பரவ முன்னர் இங்கு பிசாசு வணக்கமுறை காணப்பட்டதாகவும். இந்த பேய்களுக்கான சாந்திக் கிரிகைச் சடங்கிற்கு இந்த முகமூடிகள் பயன்படுத்தப்பட்டன. இந்த சாந்திக் கிரிகைகள் உடல் உள ரீதியாக ஏற்படும் நோய்களை பிரச்சினைகளை தீர்க்கும் படியான சடங்காகக் காணப்படும். இந்த வேடமுகங்கள் ஒவ்வொன்றும் ஓவ்வொரு நோய்களை தீர்ப்பதற்காக அணிந்து ஆடப்படுபவை. இதில் 18 வகையான சன்னி வேடமுகங்கள் உள்ளது. இதற்கு உதாரணமாக கொரசன்னி, செவிட்டு சன்னி, ஜலசன்னி, வாதசன்னி, அமுக்குச் சன்னி, கபாலசன்னி, தீச்சுவாலைச் சன்னி என 18 வகையான சன்னி எனப்படும் பேய் ஆட்ட வேடமுகங்கள் உள்ளது.


ராட்சா வேடமுகங்கள்

24 வகையான ராட்சதர் வடிவங்களை அல்லது அரக்கர் வடிவங்களை உருவகப்படுத்திச் செய்யப்பட்டவை ஆகும். புராதன காலத்தில், இலங்கையை ஆண்டதாக, புராணக்கதையில் கூறப்படும் இராவணண், ஒரு இராட்சதன் எனவும், அவனால் பலவடிவங்களை மாற்றமுடியும் எனவும் நம்பினர். இதனால் இந்த இராட்சதர் வடிவ வேடமுகங்கள் இராவணனுடைய 24 வடிவங்களை எடுத்துக்காட்டுவதாக கூறப்படுகிறது.    


இலங்கைக்கு இந்தியாவின் கேரள மாநிலத்தில் இருந்தே இந்த வேடமுகக்கலை கொண்டு வரப்பட்டதாக நம்பப்படுகிறது. இதனால், இந்தியாவின் கேரளா வேடமுகத் தயாரிப்பு கலை நுணுக்கங்களையும் இலங்கைக்கு உரித்தான வேடமுகத் தயாரிப்பு நுணுக்கங்களையும் இணைத்து பல விதமான வேடமுகங்கள் தயாரிக்கப்படுகின்றன. 

இலங்கையில் வேடமுகக் கலைக்கு பிரசித்தி பெற்ற இடமாக இருப்பது அம்பலாங்கொட என்னும் இடம் ஆகும். இதைவிட பென்தர, மிரிஸ்ஸ, ரைகம் கோரளை, மதுகம போன்ற இடங்களிலும் இந்த வேடமுகக் கைத்தொழில் காணப்படுகிறது.


வேடமுகத்தினைச் செய்வதற்கு ஊடமாக மரங்களை உபயோகிப்பார்கள். இதற்காக பாவிக்கும் மரங்கள் மிகவும் பாரம் குறைந்ததும் இலேசில் வெடிக்காத வளையக்கூடிய மரங்களாகவும் காணப்படும். இவை இலகுவாக செதுக்கி எடுக்கக்கூடியதுமான மரங்களாகவும் இவை காணப்படும். ஏனெனில், மாணவர்களே முகமூடியை அணிந்து கொண்டு ஆடும்; போது இலகுவாக தலையை அசைக்கக்கூடியதாக இருக்க வேண்டும். எனவே இதற்காக உபயோகிக்கின்ற மரங்களாக கடல் மாங்காய் மரம், தேமா, முள்முருங்கை போன்ற மரங்கள் வேடமுகம் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. 
கடல் மாங்காய் மரம்

வேடமுகம் செய்யும் படிமுறைகள்:

முதலிலே மரக்குற்றிகளை துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொள்வார்கள். துண்டாக வெட்டிய மரக்குற்றியின் வெளிப்பட்டையை அகற்றி துண்டத்தை தேவையான அளவில் வெட்டிக் கொள்வார்கள். இந்த செயற்பாட்டினை 'கனகெப்பீம' என அழைப்பார்கள். 

அடுத்து மரக்குற்றியின் வைரமான பகுதி வெட்டி தட்டையாக்கி தேவையான வேடமுகத்தின் வடிவத்திற்கேற்ப மட்டம் செய்வார்கள் இதனை 'பாயம் பேகீம' என அழைப்பார்கள்.

அடுத்ததாக, செதுக்குவதற்கும் வர்ணம் இடுவதற்கும் இலகுவாக மரப்பலகையில் பால் வடியும் தன்மையை அகற்றுவதற்காக இளவெயிலில் உலர விடப்படும். இது 'கிரி ஹந்தவீம அதாவது பால் உலரவிடல்' எனப்படும்.


பின்னர் முகத்தின் வடிவம் கொண்டுவரப்பட்டு கண், மூக்கு, வாய் போன்ற மென்மையான பகுதிகள் குறிக்கப்படும். இதனை 'லக்குணுகெம்பீம' என அழைப்பார்கள்.

அடுத்து முக அமைப்புக்குத் தேவையான அங்கங்களை விட்டு தேவையற்ற மற்றப்பகுதிகளை நகவுளி, செதுக்கல் உளி போன்ற உளிகளைக் கொண்ட கருவிகளால் செதுக்கி அகற்றுவர் முகத்தினை வடிவமைப்பார்கள். இதனை 'மாறம் கெப்பீம' என அழைப்பார்கள். 
    தொடர்ந்து வேடமுகத்தை அணியக்கூடியவாறு உட்பக்காக குடைந்து அகற்றுவார்கள். இவ்வாறு வடிவமைக்கப்பட்ட முகமூடிக்கு புகை மூட்டப்பட்டு புகை ஏற்றப்படும். இதனால் வெண்ணிறமாக இருந்த மரம் பொன்னிறமாக மாறுவதோடு அதிலிருந்த நீர்த்தன்மை முற்றிலும் அகற்றப்பட்டு அதன் பாரமும் குறைவடையும். இந்த புகை மூட்டும் செயற்பாடு சுமார் 3 மாதங்களுக்கு இடம்பெறும். இதனால் ஒரு வேடமுகத்தினை பழுதடையாது 70 வருடங்கள் வரை பாவிக்கலாம் என கூறப்படுகிறது.   

    பின்னர் முகத்திற்கு தேவையான ஏனைய அங்கங்களான காது, மீசை,தாடி,தலைமயிர்,பல்,கிரீடம் போன்றன தனித் தனியாக செதுக்கப்பட்டு வேடமுகத்துடன் இணைக்கப்படுவதுடன் வேடமுக வடிவமைப்பு முடிவடையும். 

வேடமுகங்களைச் சித்தரித்தல் அல்லது வர்ணம் தீட்டல்

வேடமுகங்களுக்கு வர்ணம் தீட்டுவதற்கு முன்னர் அதற்கு வெண்ணிறமான பூச்சுப் பூசப்படும். இவ்வாறு பூசுவதனை அல்லியாது செய்தல் என அழைப்பார்கள். இந்த வெண்ணிறப் பூச்சினைத் தயாரிப்பதற்கு வெண்களி அல்லது மகுலுமெட்டி எனப்படும் ஒரு வகை வெண்களிமண்ணைக் கரைத்து, அதனை வடித்து இப்பூச்சு தயாரிக்கப்படுகிறது. மரத்தில் நேரடியாக வர்ணத்தைப் பூசும் போது மரம் வர்ணத்தை உறுஞ்சிக் கொள்ளும் ஆகையால், இவ்வாறான தடிப்பான பூச்சைப் பூசி அதன் மீது வர்ணம் இடும் போது வர்ணம் பூசுவதும் இலகுவாக இருக்கும், அதைவிட வர்ணம் பிரகாசமாகவும் அமையும். வேடமுகத்திற்கு பூசும் இந்த வர்ணங்களைப் பெறுவதற்கு தாவரங்களிலிருந்தும் கனிமங்களிலும் பெறப்பட்ட இயற்கை வர்ணங்களையே பயன்படுத்தினார்கள்.

உதாரணமாக மஞ்சள் வர்ணத்தை ஹிரியல் எனப்படும் ஒருவகை மண்ணில் இருந்தும், சிவப்பு வர்ணத்தை சாதிலிங்கம் என்னும் கல்லில் இருந்தும், நீலநிறத்தை அவிரிய என்னும் இலையில் இருந்தும், பச்சை நிறத்தை கீகிரின்திய என்னும் இலையில் இருந்தும், பெற்றுக் கொண்டனர்.

வேடமுகத்திற்கு வர்ணம் தீட்டும் போது சாந்தமான முகத்தைக் காட்ட மஞ்சள், இளஞ்சிவப்பு போன்ற பிரகாசமான வர்ணத்தையும் அரக்கர் பேய்களுக்கு கறுப்பு சிவப்பு போன்ற இருண்ட வர்ணங்களையும் உபயோகித்தனர். 
இவ்வாறாக இயற்கை வர்ணங்களால் வேடமுகத்தினை அலங்கரித்த பின்னர் வேடமுகத்தினுடைய நீண்டகால பாவனைக்காகவும், ஈரலிப்புத்தன்மை ஏற்பட்டு பழுதடையாமல் இருப்பதற்காகவும், பளபளப்பான மேற்பரப்பினைப் பேணுவதற்காகவும் இயற்கையாகத் தயாரிக்கப்பட்ட ஒரு வாணிஸ் பூசப்படும். இந்த வாணிஸ் ஆனது தொரண எனப்படும் எண்ணையையும் ஹல் எனப்படும் தாவர குங்கிலியத்தையும் சேர்த்து தயாரிக்கப்பட்ட ஒரு எண்ணை ஆகும். இவ்வாறு இந்த எண்ணை பூசுவதுடன் வேடமுகத்திற்கான தயாரிப்பு வேலைகள் பூரணமடையும்.

பாரம்பரிய வேடமுகக் கைத்தொழில் பாடப்பகுதியின் வீடியோ பகுதியை பார்வையிட கீழே கிளிக் செய்யவும்.

பாரம்பரிய வேடமுகக் கைத்தொழில்





கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Excellent resource material full of colors & required information. Very good presentation. Thanks a lot. May god bless you