யாப்பகூவா கோட்டையின் கலை அம்சங்கள்

 யாப்பகூவா கோட்டையின் கலை அம்சங்கள்


இலங்கையின் கலை, வரலாற்றில் இரண்டாவது சீகிரியா என வர்ணிக்கப்படுவது யாப்பகூவா கோட்டை ஆகும். காசியப்ப மன்னன் சீகிரியா கோட்டையை குபேர மாளிகையைப் போல் நிறுவியதைப் போன்று இயற்கை அரணாக விளங்கும் யாப்பகூவா கோட்டை அமைக்கப்பட்டுள்ளது.

இயற்கை அழகுமிக்க சூழலொன்றில் காணப்படும் யாப்பகூவா நிர்மாணங்களை முதலாம் புவனேகபாகு அமைத்தான். இவன் தனது இராசதானியை யாப்பகூவாவின் ஒரு மலையடிவாரத்தின் கிழக்குப் பக்கமாக இருக்கின்ற இடத்தில் அமைத்துள்ளான்.

 1ம் புவனேகபாகு மன்னன் இந்த யாப்பகூவாக் கோட்டையைக் கட்டியதற்கான காரணம் புத்த தந்த தாதுவை எதிரிகளிடமிருந்து பாதுகாப்பதற்காக ஆகும். இதற்காக கருங்கல் அத்திவாரத்தின் மேல் மிகப் பெரிய மதிலையும் பெரிய வாயில்களையும் அமைத்து நாற்புறமும் சூழ்ந்த அகழியையும் அமைத்தான். அதனுள் அழகிய தலதா மண்டபம் ஒன்றைக் கட்டி புத்த தந்த தாதுவை பாதுகாத்ததாகவும் கூறப்படுகிறது. அரசமாளிகையைச் சுற்றிக் கட்டப்பட்ட கோட்டை மதில்களுக்கு அப்பால் நீர்நிரம்பிய அகழிகள், அழகிய படிக்கட்டுக்கள், கட்டிடங்கள் என்பன கட்டப்பட்டு அச்சூழலை மேலும் அலங்கரிக்க பொய்கைகள் பூந்தோட்;டங்கள் என்பனவற்றையும் அமைத்துள்ளான். இதனால் யாப்பகூவா பரிபூரண அலங்காரம் கொண்ட இடமாகவும் பாதுகாப்பான கோட்டையாகவும் விளங்குகின்றது. இந்த கட்டிட சிற்ப வேலைப்பாடுகளுக்காக பெரும்பாலும் கருங்கல்லையே ஊடகமாகப் பயன்படுத்தியுள்ளனர். 

இந்த யாப்பகூவாக் கட்டிடங்கள் பிரதானமாக 3 நோக்கங்களுக்காக கட்டப்பட்டுள்ளதை நாம் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. 

1. பாதுகாப்புக் காரணங்களுக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

வெளிப்புற அகழி, உட்புற அகழி, உட்புற மதில், அழகிய படிக்கட்டுத்தொகுதி போன்றன பாதுகாப்பிற்கு அமைக்கப்பட்டுள்ளது.

2. வாழ்விடமாக அமைக்கப்பட்ட கட்டிடங்கள் 

அரசமாளிகை, சபை மண்டபம் என்பவற்றைக் கூறலாம்.

3. சமயக்கிரிகைக்காக அமைக்கப்பட்ட கட்டிடங்கள்

தந்ததாது அல்லது தலதாமண்டபம், போதிமனை, சிலைமனை, தாதுகோபம், தியான மண்டபம்.

யாப்பகூவா மாளிகையின் படிக்கட்டு வரிசை சார்ந்த நிர்மாணங்கள்

யாப்பகூவாவின் பாதுகாப்புத் தொடர்பான நிர்மாணமாகவும் யாப்பகூவா கட்டிட நிர்மாணங்களில் கலைநயமிக்க அழகிய வேலைப்பாடுகள் கொண்ட கட்டிட அமைப்பாகவும் காணப்படுவது படிக்கட்டு வரிசை சார்ந்த நிர்மாணங்கள் ஆகும். யாப்பகூவா அரசமாளிகையைச் சென்றடைவதற்கான பிரதான பாதை மிக நேர்த்தியான படிக்கட்டு வரிசைகளாக அமைக்கப்பட்டுள்ளது. இங்கே நாம் அழகிய சிற்ப செதுக்கல் வேலைப்பாடுகளை காணலாம். யாப்பகூவா மாளிகைக்கு ஏறும் படிக்கட்டின் இருபுற மதில்களிலும் சிங்க உருவங்களும், கஜசிங்க உருவங்களும் காணப்படுகின்றன. செங்குத்தான படிக்கட்டுகளில் ஏறும்போது, இந்த சிங்கங்கள் எம்மைப் பார்த்துக் கொண்டு இருப்பதைப் போன்று காணப்படும். இந்த யாப்பகூவாப் படிக்கட்டுக்களைப் பார்க்கும் போது கம்போடியாவில் உளள அங்கூர் ஆலயத்தினுடைய படிக்கட்டுக்களை நினைவூட்டுவதாக கூறப்படுகின்றது. யாப்பகூவா மலைக்குன்றினுடைய நிலைக்குத்துச் சாய்வைப் பயன்படுத்தி இப்படிக்கட்டுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இப்படிக்கட்டுக்களில் ஏறும்போது மத்திய அமெரிக்காவில் உள்ள மாயன் பிரமிட்டில் ஏறுவது போன்ற உணர்வை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகின்றது. 34 படிகளைக் கொண்ட இந்த யாப்பகூவா படிவரிசையானது வௌ;வேறு உயரமட்டங்களைக் கொண்ட மூன்று மேடைகள் போன்று காட்சியளிக்கின்றது. இங்கு 23வது படியின் பின்னர் அகன்ற வெளி போன்ற ஒர் இடம் அமைக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து 11 படிகள் ஏறிச் செல்லும் போது வாயில் மண்டபத்தை அடையக்கூடியதாக உள்ளது.

படிக்கட்டினுள் நுழையும் இருபுறமும் விமானங்கள் உள்ளன. இந்த விமானங்களினுள் அழகிய பெண் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளதைக் காணலாம். இப் பெண்ணுருவங்கள் மூவளைவு கொண்ட திரிபங்க நிலையில் செதுக்கப்பட்டுள்ளது. பெண்ணுருவங்களின் வலது கையில் புங்கலசத்தினை தாங்கியுள்ளதோடு இடது கையானது தொடையின் மீது வைக்கப்பட்டுள்தைப் போன்றும் செதுக்கப்பட்டுள்ளது. அப்பெண்ணுருவங்களின் உடல் மேல்பகுதி ஆடையின்றியும் கீழ்ப்பகுதியில் மூன்று அடுக்குகளைக் கொண்ட ஆடையுடனும் செதுக்கப்பட்டுள்ளதைக் காணலாம். இப் பெண்ணுருவங்களைப் பார்க்கும் போது அவை தென்னிந்திய சிற்பங்களை நமக்கு நினைவூட்டுகின்றது.

யாப்பகூவா சிங்கங்கள்




முதலாவது படிவரிசைக்கட்டு முடிவடைந்த பின்னர் அகன்ற வெளிபோன்ற இடத்தின் இரு புறங்களிலும் யாப்பகூவாவிற்கு உரித்தான சிறந்த அழகுமிக்க சிங்க உருவங்களைக் காணலாம். இங்கே படிகளின் இருபுறமும் சிங்கங்கள் முன்னால் பாய்வதற்கு தயாராக இருப்பதைப் போல் செதுக்கப்பட்டுள்ளன. இச்சிங்கங்களின் செதுக்கல்களானது இலங்கையின் பழமையான இராசதானிகளிடையே கிடைக்கப்பெற்ற உயர்தரமான ஒரு கலைப்படைப்பாக உள்ளது. இவற்றில் சீனச் சிற்பக்கலை அம்சங்கள் அதிகம் காணப்படுவதாக தொல்பொருள் அறிஞர்கள் கூறுகின்றனர். சிங்கத்தின் கம்பீரத்தை வெளிப்படுத்த உபயோகித்துள்ள அழகிய கற்பனையான சிற்பத்தன்மைகள் மிக உயர்வானதாகும். 



பெரிய கண்கள், திறந்த வாயும், அதன் உடலில் அலங்காரமாக விரிந்து பரவிச் செல்லும் கேச அமைப்பும் சிலையின் அழகை மேலும் மெருகூட்டுகின்றது. பின்பகுதிக் கால்கள் இரண்டையும் வளைத்து, முன்னங்கால்கள் இரண்டையும் நேராக வைத்து, அமர்ந்திருக்கும் தன்மை படிவரிசைகளுக்கு மேலும் அழகைக் கொடுக்கின்றது. இதிலே மேற்குப் புறமாக உள்ள சிங்க உருவத்தின் வால் உடலுடன் ஒட்டாதவாறு ஆக்கப்பட்டுள்ளதெனினும், கிழக்கு புறமாக உள்ள சிங்கத்தின் வால் உடலுடன் ஒட்டியவாறு செதுக்கப்பட்டுள்ளது. இச்சிங்கத்தின் அடிப்பகுதிக்கு முன்பாக நாசித்தலை அல்லது கிகிம்பி முகமொன்று செதுக்கப்பட்டுள்ளது.  
இந்த யாப்பகூவா சிங்கமானது பிற்காலத்தில் குறிப்பாக இக்காலத்திலும் கூட அமைக்கப்படும் சிங்க உருக்களுக்கு முன்மாதிரியாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும். ஏனெனில், அந்தளவிற்கு அலங்காரத்தன்மை மிகுந்த கவர்ச்சியான கம்பீரமிக்க ஓர் கலைப்படைப்பாக இந்த யாப்பகூவா சிங்கம் காணப்படுகிறது. 

கஜசிங்கங்க வடிவம்


இந்த சிங்கங்களைக் கடந்து செல்லும் போது படிக்கட்டின் இருபுறமும் கணப்படுவது கஜசிங்கங்க வடிவம் கொண்ட கைபிடிச்சுவர்கள் ஆகும். யானைத்தலையும் சிங்க உடலுடனும் காணப்படும் இந்த கற்பனையுருவானது சிங்கத்தைப் போன்றே மிகுந்த கலைநயத்துடன் செதுக்கப்பட்டுள்ளது. கைபிடிச் சுவரின் அடிப்பகுதியில் அழகிய குள்ளர் உருவச் சோடியொன்று செதுக்கப்பட்டுள்ளது. இவை கம்பளை கண்டிய கால கைபிடிவரிசை அல்லது கொரவக்கல்லை போன்ற வடிவில் காணப்படுகிறது.
 

படிவரிசைகள்

இப்படிக்கட்டு வரிசையின் கற்பாளங்கள் மெருகூட்டப்பட்ட வகையில் ஆக்கப்பட்டுள்ளது. இங்குள்ள கற்படிகளுக்கு இடையே இடைவெளி மிகக் குறுகியதாகக் காணப்படுகின்றது. மலைக்குன்றின் நிலைக்குத்துச் சாய்விற்கமைய விரைவாக நடக்க முடியாமல் இருப்பதால் இவ்வாறு அமைக்கப்பட்டதன் நோக்கம் பாதுகாப்புக் காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. 



வாயில் மண்டபம்




அழகிய படிகட்டுக்கள் முடிவடையும் இடத்தில் உள்ளது வாயில் மண்டபமாகும். 26அடி 7 அங்குலம் நீளமும் 32அடி அகலமும் கொண்ட இந்த வாயில் மண்டபத்திலும் செதுக்கல் வேலைப்பாடுகள் அடங்கிய சில பகுதிகள் உள்ளன. இந்த வாயில் மண்டபம் அல்லது துவாரமண்டபம் என அழைக்கப்படும் இந்த மண்டபத்தில் அழகிய செதுக்கல் வேலைப்பாடுகள் காணப்படும் இடங்களாக,
1. மண்டபத்தின் அடிப்பகுதி 
2. மண்டபத்தூண் பகுதிகள்
3. கதவுநிலைகள் 
4. கல்லில் செதுக்கப்பட்ட காற்றுத்துளை யன்னல்கள் 
   போன்றவற்றில் காணக்கூடியதாக உள்ளது. 



வாயில் மண்டபத்தின் அடிப்பகுதியில் அத்திவாரத்தைச் சுற்றி ஒரு உயரமான வரிசையில் ஆடல் பாடலில் ஈடுபடும் ஆண் பெண்; நடனக்குழு ஊர்வலமொன்று செதுக்கப்பட்டுள்ளது. யாப்பகூவா செதுக்கலில் மிக முக்கியமான ஓர் வேலைப்பாடாகவும் மண்டபத்தின் அழகை மேலும் மெருகூட்டும் சிற்பக்கலை அம்சமாகவும் இந்த nதுக்கல் வரிசை காணப்படுகிறது. இந்த உருவச் செதுக்கல்கள் ஒன்றுக்கொன்று வேறுபட்ட உடல்நிலைகளில் செதுக்கப்பட்டுள்ளமை சிறப்பானதொரு விடயமாகும். இதில் நடனமாடுவோர் மற்றும் பலவகை இசைக்கருவிகளை இசைப்போர் போன்றவர்களின் உருவங்கள் தொடர்ச்சியாகச் செதுக்கப்பட்டுள்ளது. கைத்தாளமிசைப்போர், குழல் ஊதுவோர், உடுக்கு இசைப்போர், வீணை வாசிப்போர், கோலாட்டத்தில் ஈடுபடுவோர், கரணம் போடுவோர் உட்பட பல்வேறு நடன நிலையிலும் ஆடிக் கொண்டு செல்லும் உருவங்களும் கலைநயத்துடன் தொடர் சிற்பங்களாக அழகாகச் செதுக்கப்பட்டுள்ளதைக் காணலாம். இச்செதுக்கல்களைப் பார்க்கும் போது இது இந்தியாவின் விஜயநகர சிற்பமுறையை நினைவுபடுத்துவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 



வாயில் மண்டபத்தில் காணப்படும் செதுக்கல் வேலைப்பாடுகளைக் கொண்ட தூண்கள்



இந்த தூண்களைப் பார்க்கும் போது தென்னிந்திய கட்டட நிர்மாணப்பாணி சார்ந்ததாகக் காணப்படுகின்றன. குறிப்பாக இங்கு அமைக்கப்பட்டுள்ள மும்முகத்தூண்கள் கடலாதெனிய விகாரைத் தூண்களின் மாதிரியை ஒத்ததாகக் காணப்படுகின்றன. ஆயினும், இவற்றுக்கிடையே சில வேறுபாடுகளும் காணப்படுகின்றன. ஒவ்வொரு தூணின் அடிப்பகுதியிலும் நின்ற நிலைச் சிங்கம் ஒன்று செதுக்கப்பட்டுள்ளது. தூணின் போதிகை பகுதி அழகிய வேலைப்பாடுகளுடன் ஆக்கப்பட்டுள்ளது. 

கற்கதவுநிலை


வாயில் மண்டபத்திற்குள் நுழையும் போது கல்லால் அமைக்கப்பட்ட வாசல்க் கதவினை காணக்கூடியதாக உள்ளது. இந்தக் கதவு நிலையின் முழு உயரம் 15 அடி நீளமும் 11அடி அகலமும் ஆகும். இந்தக் கதவு நிலையின் அடிவாரத்தில் கதாயுதம் அல்லது கதையைக் கையில் ஏந்திய வயிற்காப்போர் சிலைகள் காணப்படுகின்றது. இதில் உள்ள விசேடமான அம்சம் என்னவெனில் இந்தவாயிற்காப்போர் பெண் உருங்களாகக் காணப்படுகிறது. இதற்குச் சற்று மேல் கற்கதவுநிலையின் உட்புறமாக சாமரை ஏந்திய இரண்டு பெண்ணுருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கதவுநிலையின் ஏனைய பகுதிகளை அலங்கரிப்பதற்காக பின்னல் அலங்காரங்கள் பயன்டுத்தப்பட்டுள்ளன.

காற்றுத் துளையுடைய யன்னல்


யாப்பகூவாச் செதுக்கல்களில் தனிச்சிறப்பானதொன்றாகக் காணப்படுவது கற்கதவு நிலையின் இருபுறமும் காணப்படும் காற்றுத் துளையுடைய யன்னல் செதுக்கு வேலைப்பாடுகள் ஆகும். இந்த யன்னல்கள் 4அடி 6 அங்குல உயரமும் 3 அடி 3 அங்குல அகலமும் உடையது. இச்செதுக்கலானது 4 அங்குல தடிப்பான பலகைக்கல்லில் ஊடுருவும் செதுக்கல் நுட்பமுறைப்படி அமைக்கப்பட்டுள்ளது. தற்கால 'கிறில்' முறையை ஒத்ததாக அக்கால சிற்பிகள் இதனைக் கல்லில் அமைத்துள்ளனர். 
    இவ் யன்னல் பற்றி பல பல அறிஞர்களின் கருத்துக்கள் உள்ளன. இந்த யன்னல் அமைத்ததின் மூலம் இதனை ஒரு அரச மாளிகையாகத்தான் பாவித்தனர் என ஊகிக்க முடிகின்றது எனவும் வேறு சிலர் இது தலதாமாளிகையாக உபயோகித்துள்ளனர் ஏனெனில், தலதாவைப் பார்க்கவும் பாதுகாக்கவுமே இந்த யன்னல் அமைக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. எவ்வாறெனினும் இவ் யன்னல் செதுக்கல் வேலைகள் இலங்கையில் மிக விசேடமானவையாகவும் யாப்பகூவாச் சிற்பிகளின் திறமையை எடுத்துக்காட்டுவதாகவும் உள்ளது. தற்போது இவற்றில் ஒரு செதுக்கல் கொண்ட யன்னல் யாப்பகூவா அரும்பொருட்காட்சியகத்திலும் மற்றையது கொழும்பு அரும்பொருட்காட்சியகத்திலும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.  
    இந்த யன்னல்களுக்கு மேற்புறமாக நாசித்தலை முகத்தைக் கொண்ட மகரதோரணமொன்று உள்ளது. மகரவாயில் இருந்து கீழ்நோக்கி நீண்டு செல்லும் பூக்கொடி அலங்கார நிரலின் நடுப்பகுதியல் கஜலட்சுமி உருவமொன்று உள்ளது. அதன் இருபுறங்களிலும் தும்பிக்கையை உயர்த்தியுள்ள யானை உருவங்கள், இலட்சுமி தேவிமீது நீர் தெளிப்பது போன்று செதுக்கப்பட்டுள்ளது. 
    கற்குன்றின் உச்சியில் அமைக்கப்பட்டுள்ள மாளிகைக் கட்டடத் தொகுதியின் கட்டங்கள் சிறப்பான ஆக்கங்களாகும். மாளிகையின் அடிப்பகுதி தற்போது இடிபாடடைந்த நிலையில் உள்ளது.  

யாப்பகூவா தலதாமாளிகை



யாப்பகூவாவில் கண்டுபிடிக்கப்பட்ட கி.பி 3ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுக்களில் யாப்பகூவாவில் பாதுகாப்புடன் கூடிய தலதாமாளிகை காணப்பட்டதாகவும் அக்கட்டிடம் விஜயநகர கட்டிடக்கலை  அமைப்பில் இருந்ததாகவும் கூறப்படுகின்றது. இக் கட்டிடத்தின் சிதைவுகளை யாப்பகூவா மாளிகையை அண்டியதாகவுள்ள இடத்தில் காணக்கூடியதாகவுள்ளது. இக் கட்டிடத்தின் பாதி கல்லாலும் மிகுதி செங்கல்லாலும் கட்டப்பட்டுள்ளது. இது தென்னிந்திய கட்டிடக்கலை அம்சங்களை வெளிக்காட்டுவதாகவுள்ளது. கர்ப்பக்கிரகம், அந்தராளம், அர்த்தமண்டபம் போன்ற பகுதிகளைக் கொண்ட கட்டிடமாக இந்த தலதாமாளிகை அமைக்கப்பட்டிருந்துள்ளது. இங்கு செதுக்கல் வேலைப்பாடு கொண்ட கல்லாலான கதவுநிலைகள் இன்னும் காணப்படுகின்றன. 
போர்ப்பயம், பொருளாதார நெருக்கடி, சமூக கலாச்சார சீர்கேடுகள் என்பன காணப்பட்ட கம்பளைக் காலத்தில்; இது போன்ற சிறந்த படைப்புக்கள் தோன்றியமை உண்மையில் வியக்கத்தக்கதாகும். 

யாப்பகூவா பற்றிய வீடியோ காணொளி பார்வையிட...: 

கீழேயுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள் 👇








கருத்துகள்