சிகிரியா (Sigiriya)

 


சிகிரியாவின் தோற்றமும் வரலாறும்


இலங்கையின் இணையற்ற கலைப் பாரம்பரியத்துடன் கூடிய புராதன இடங்களில் ஒன்றாக சிகிரியா குன்று விளங்குகிறது. சிகிரியாவானது மத்திய மாகாணத்தின் மாத்தளை மாவட்டத்தில் உள்ள இனாமலுவக் கோரளையில் அமைந்துள்ளது. இயற்கையாக அமைந்த இச்சிகிரியாக் கற்குன்றானது கிட்டத்தட்ட 600 அடி உயரமானதாகக் காணப்படுகிறது. இக்குன்றிற்கு சிகிரியா எனப் பெயர்வர இரண்டு காரணங்கள் உள்ளது.

1. சிகிரியா குன்றினை தூரத்தில் இருந்து பார்க்கும் போது சிங்கம் ஒன்று அமர்ந்திருப்பதைப் போன்ற தோற்றத்தைக் கொண்டிருக்கும்.

2. சிகிரியாக் குன்றின் அடிவாரத்தில் அமைந்துள்ள நுழைவாயிலின் இருபுறமும், சிங்கங்களின் பாதங்கள் காணப்படுகின்றது. 

    இதனால், சிகிரியாவினை சிங்ககிரி எனவும் சிககிரி எனவும் அழைப்பர்கள். இச்சிகிரியா குன்றானது ஆசியாவின் மிக முக்கியமான தொல்பொருள் சார்ந்த இடங்களில் ஒன்றாகக் காணப்படும் சிகிரியாவானது 1982ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ அமைப்பால் உலக அருஞ்செல்வமாக பிரகடனப்படுத்தப்பட்டது. 
    சிகிரியா கோட்டையானது கி.பி 5ம் நூற்றாண்டு காலப்பகுதியில் (கி.பி.477-495) காசியப்ப மன்னனின் இராசதானியாகவும் கோட்டையாகவும் காணப்பட்டதாக வரலாற்று நூலான மகாவம்சத்தில் குறிப்பிடப்படுகிறது. எனினும், சிகிரியாவின் வரலாறு, அதனை விடவும் மிகவும் பழமையானது என்பதற்கு குன்றின் அடிவாரத்திலும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களிலும் கண்டுபிடிக்கப்பட்ட 20ற்கு மேற்பட்ட 'பிராமி' எழுத்துக்களைக் கொண்ட கல்வெட்டுக்களின் மூலம் அறியக்கூடியதாகவுள்ளது. இக்கல்வெட்டுக்களில் குறிப்பிட்டுள்ளபடி, இங்கு கி.மு3 - கி.பி1;ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் சிகிரியாவைச் சுற்றி குடியிருப்புகளும் சிகிரியாக் குன்றைச் சுற்றிவரவுள்ள சரிவுகளில் பௌத்த துறவிகளின் வாழ்விடங்களும் இருந்துள்ளது என அறியமுடிகிறது. எனினும், பௌத்த வரலாற்று நூலான மகாவம்சத்தில், இதன் வரலாறு கி.பி 5ம் நூற்றாண்டு தொடக்கமே எழுதப்பட்டுள்ளது. 


    பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் காடு மண்டிக்கிடந்த சிகிரியாவை பிரித்தானிய தளபதியான மேஜர் ஜோனாத்தன் போர்ப்ஸ் (Jonathan Forbes) என்பவர் கண்டுபிடித்தார். பின்னர் பிரித்தானியரால் ஆய்வு செய்யப்பட்டு 1831ம்ஆண்டு முதன் முதலாக சிகிரியா பற்றிய எழுத்து மூலமான பதிவுகள் செய்யப்பட்டது. 

பிற்காலத்தில் வந்த ஆங்கிலேயரான எச்.சி.பி பெல் இவ்விடத்தை தொல்பொருள் அகழ்விடமாக்கி அதன் சிறப்புக்களை ஆய்வு செய்து வெளிப்படுத்தினார். 


இந்த தொல்பொருள் அகழ்வாரட்சியின் போது, வெளியிடப்பட்ட தகவல்களுக்கு அமைய சிகிரியாவை நிர்மாணித்த காசியப்பமன்னன் மிகச் சிறந்த கலையார்வம் மிக்க ஒரு அரசன் என்பது தெளிவாகின்றது. 


பெல் தனது ஆய்வு நடவடிக்கையில் குடும்பத்துடன்...


சிகிரியா - கட்டிடக்கலை

    சிகிரியா குன்றானது காசியப்பமன்னன் தன்னை எதிரிகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக அல்லது மறைந்து இருப்பதற்கு தெரிவு செய்த இடமே ஆகும். ஆனாலும், ஏறத்தாழ 600அடி உயரமான இந்த சிகிரியா குன்றின் உச்சியில் அரசனின் அரண்மனையும், அரண்மனைப் பூங்காவும், அரசுடன் தொடர்புபட்ட கட்டிடங்களும், நீச்சல் தடாகங்கள், காவல் அரண்கள் என்பனவும் மிகவும் வியக்கத்தக்க முறையில் அமைக்கப்பட்டுள்ளது. குன்றின் அடிவாரத்தில் அகழிகள், குளங்கள், பூங்காக்கள் என்பன அமைக்கப்பட்டு மிகவும் கலைவனப்பு மிக்க ஓர் இடமாக சிகிரியா கோட்டை அமைக்கப்பட்டுள்ளதைக் காணமுடிகின்றது. 

குறிப்பாக குன்றின் கீழ்ப்பகுதியில் உள்ள அமைப்புக்களை மூன்றாகப் பிரிக்கலாம். 
1. கற்பூங்கா  
2. நீர்ப்பூங்கா, 
3. படிவரிசைப்பூங்கா  என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். 

கற்பூங்கா

    இயற்கையாக அமைந்த சிறிய பெரிய கற்பாறைகளை உபயோகித்து அமைக்கப்பட்ட அரசசபை மண்டபங்களும், ஆசனங்களும், கற்பாறைச் சிங்கசனம், போசனை மண்டபம் என்பன கற்பூங்காவிற்குள் அடங்குகிறது. அத்துடன் இயற்கையாக அமைந்த கற்பாறைகள் கொண்டு வில்வளைவு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவையும் கற்பூங்காவிற்குள் அடங்குகின்றது. தென்மேல் ஆசியவில் பூங்கா வடிவமைப்புகளில் மிகப்பழமையானதும் சிகிரியா கலைத்தொகுதியின் மிகப்பழைமையான பகுதியாகவும் இந்த கற்பூங்கா அமைப்புகள் உள்ளன.

நீர்ப்பூங்கா 

    நீர்ப்பூங்காவில் அடங்குவதாக குளங்கள் அகழிகள், நீர்த்தூவிகள் என்பன அடங்குகின்றது. சிகிரியாவைச் சுற்றியுள்ள நிலப்பகுதியில் குன்றின் கிழக்கும் மேற்கும் மதில்களாலும் அகழிகளாலும் அரண் செய்யப்பட்டிருக்கின்றன. மதிலின் சில பகுதிகள் இன்றும் அழியாமல் இருக்கின்றன. இம் மதில்கள் 30 அடி உயரமுடையன. இங்குள்ள அகழிகள் 14 அடி ஆழமும் 82 அடி அகலமும் கொண்டதாக உள்ளது. இவை யாவும் அரண்மனையின் பாதுகாப்புக்காக நிறுவப்பட்டுள்ளது சிகிரியாக் குன்றிற்கு செல்லும் பாதையிலும் இந்த நீர்ப்பூங்கா அமைப்புகள் காணப்படுகின்றன. குன்றிற்கு செல்லும் இரு புறமும் தடாகங்களும் அதனுடன் நீர்த்தூவிகள் நீர்க்குமிழிகளாயும் நீர்மலர்களாயும் காட்சிதருகிறது. இங்கு நீரைக்கட்டுப்படுத்துவதற்கான கட்டுப்பாட்டுமுறைகள், நீர் வெளியேற அமைக்கப்பட்ட சுரங்கப்பாதை என்பன சிறப்பான ஒரு நீர்வடிகாலமைப்பு நிர்மாணங்களாகக் காணப்படுகின்றது.


 படிவரிசைப் பூங்கா 

    ஒட்டுமொத்தமாக இது 4 படிவரிசைகளைக் கொண்டுள்ளது. கருங்கல்லைக் கொண்டு அமைக்கப்பட்ட இப்படிவரிசைகள் தேய்த்து அழகு அழகுபடுத்தப்பட்டிருப்பதால் இவை வெள்ளைக் கம்பளம் விரித்தாற் போல் உள்ளது. 

கண்ணாடிச்சுவர்

    சிகிரியாவில் உள்ள சிறப்பான ஒர் நிர்மாணிப்பாக காணப்படுவது கண்ணாடிச்சுவர் ஆகும். ஓவியம் வரைவதற்கு தயார் செய்யப்பட்ட பகுதியாக இந்தக் கண்ணாடிச்சுவர் கருதப்படுகிறது. ஆனால் ஏதோ ஒரு காரணத்தினால் இங்கு ஓவியங்கள் வரையப்படவில்லை. சிகிரியாவில் மிக நேர்த்தியாக கட்டப்பட்டிருக்கும் இச்சுவரானது ச10ரிய ஒளிபடும் போது மிகவும் பளபளப்பாகக் காணப்படுவதால் கண்ணாடிச்சுவர் என்று அழைக்கப்படுகிறது. 

        இக்கண்ணாடிச்சுவரில் உள்ள விசேட அம்சம் என்னவெனில், உலகின் பல பாகங்ளிலுமிருந்து சிகிரியாவைப் பார்வையிட வந்த மக்கள் சிகிரியாவைப் பார்வையிட்ட பின்னர் சிகிரியா பற்றிய பல்வேறு கருத்துக்களையும் இந்தக் கண்ணாடிச் சுவரில் எழுதியுள்ளனர். இவையே கண்ணாடிச் சுவர்க் கவிதைகள் என அழைக்கப்படுகின்றது. எனினும், இக்கவிதைகள் அனைத்தும் முற்கால மொழி வழக்கில் எழுதப்பட்டுள்ளதோடு இவை கி.பி 7ம் நூற்றாண்டுக்கும் 13ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் எழுதப்பட்டுள்ளது. இக்கவிதைகள் மூலம் சிகிரியா பற்றிய பல அரிய தகவல்களை அறிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது.

 இக்கவிதை ஒன்றிலேயே சிகிரியாவில் 500 பெண் ஓவியங்கள் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. இவ்வாறு இலங்கையின் எழுத்தாக்கத்துறை வரலாற்றில் சிறப்பான ஒரு நிர்மாணிப்பாகவும் இந்த கண்ணாடிச்சுவர் காணப்படுகிறது. 

காசியப்ப மன்னன் இந்த சிகிரியா குன்றின் உச்சியில் தனது அழகிய அரண்மனையை நிறுவி அதில் பாதுகாப்பாக தங்கி வாழ்ததிற்கான காரணம்.


    அனுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்த, காசியப்பனின் தந்தையான மன்னன் தாதுசேனனுக்கு இரண்டு மனைவிகளும் மூன்று பிள்ளைகளும் உள்ளனர். இதில் தாதுசேன மன்னனின் மூத்த மனைவிக்குப் பிறந்த மகனே காசியப்பன் ஆவான். இவனுடைய இளைய சகோதரன் பெயர் முகலன்;. இவன் தாதுசேனனின் 2வது மனைவியான பட்டத்து ராணிக்;குப் பிறந்த மகன் ஆவான். காசியப்பனின் தாய் சாதாரண குடும்பத்து பெண் என்பதால், காசியப்பன் மூத்தமகனாக இருந்தும், சிம்மாசனத்துக்கு அருகதையற்றவனாக காணப்பட்டான். இதனால், இரண்டாவது மகன் முகலன் பட்டத்தரசியின் மைந்தன்; என்பதால் சிம்மாசனத்துக்கு உரியவனான். 

ஆனாலும், சிம்மாசனத்தைக் கைப்பற்றும் எண்ணத்தில் இருந்த காசியப்பன் சமயம் பார்த்து தந்தையான தாதுசேனனை சிறையில் தள்ளி, சிம்மாசனத்தைக் கைப்பற்றியதுடன் பின்னர், தந்தையையும் கொன்றான். இதன் பின், தம்பி முகலனையும் ஒழித்துக் கட்ட முயலும் போது, அவன் இந்தியாவுக்கு தப்பி ஓடினான். தப்பி ஓடிய தம்பியான முகலன் தென்இந்தியாவிலிருந்து பெரும்படையோடு வந்து தன்னை எதிர்ப்பான் என அஞ்சி, அனுராதபுரத்திலிருந்து சிகிரியாவுக்கு தலைநகரை மாற்றிக் கொண்டான். இதுவே பாதுகாப்பான இந்த சிகிரியா குன்றினை தெரிவு செய்த காரணம் என சில வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள். பின்னர், முகலன் இந்தியாவில் இருந்து படையுடன் வந்து காசியப்பனை எதிர்த்து போர் புரிந்தான். போரின் ஒரு கட்டத்தில் தோற்றுவிடுவோம் என்று தெரிந்தவுடன் காசியப்பன் தன் வாளால் தன் கழுத்தை தானே வெட்டி தற்கொலை செய்து கொண்டான் எனக் கூறப்படுகிறது. அதன் பிறகு முகலனே இலங்கையை அரசாண்டதாகக் கூறப்படுகிறது.

    காசியப்பன் சிகிரியாக் குன்றினை தனது இராசதானியாக தெரிவு செய்ய முன்பே சிகிரியாக் குன்றின் அடிவாரத்தில் புத்த பிக்குகள் தங்கும் இடமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. காசியப்பன் காலத்தின் பின்பும் தொடர்ந்து அது ஒரு புத்த மடாலயமாக இருந்து வந்ததாக வரலாற்றாசியர்கள் கூறுகின்றனர். 


சிகிரியா ஓவியங்கள்


    சிகியாவின் புகழை உலகெங்கும் பரவச் செய்தவை சிகிரியா ஓவியங்கள் ஆகும்;. இலங்கையின் அநுராதபுரக் காலத்திற்குரிய மிகச் சிறந்த ஓவியங்கள் காணப்படும் இடமாக சிகிரியா உள்ளது. சிகிரியாக் குன்றின் மேற்குப்புறப் பாறையின் சுவரில் குழிவு வடிவில் உட்குடையப்பட்ட தளத்தில் காணப்படும் ஓவியங்களே சிகிரியாவின் புகழ் பெற்ற ஓவியங்கள் ஆகும். 

இந்த உட்குடையப்பட்ட தோற்றத்தை குதை என அழைப்பர். சிகிரியா குன்றில் 500 வரையான ஓவியங்கள் இருந்ததாக அங்கு எழுதப்பட்டுள்ள சுவர்க்கவிகள் மூலம் அறியக் கூடியதாயுள்ளது. ஒரு காலத்தில் குன்றின் மேற்குச் சுவர் முழுவதும் இவ் ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் காலநிலைத் தாக்கத்தால் தற்போது 22 ஓவியங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. 


இங்கு குழிவு Aயில் 5 உருவங்களும், குழிவு B இல் 17 உருவங்களும் உள்ளன. பல ஓவியங்கள் அழிவடைந்தும் சில பழுதடைந்தும் காணப்படுகின்றன. குறிப்பாக தற்போது 12 ஒவியங்களே முழுமையான ஓவியங்களாக காணப்படுகின்றன. இப்பெண் ஓவியங்கள் தனியாகவும் சோடி சோடியாகவும் மிகச் சிறப்பான அங்க அசைவுகளுடன் வரையப்பட்டுள்ளமையை நோக்கும் போது, அக்கால ஓவியக் கலைஞனின் நுட்பம், திறமை என்பனவற்றை அறிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது. 


சிகிரியா ஓவியங்கள் வரையப்பட்ட நுட்ப முறை 




இந்த சிகிரியா ஓவியங்கள் இன்று வரை அழியாமல் இருப்பது அக்காலக் கலை நுட்பமுறைகளின் வளர்ச்சியாகும் எனக் கூறினால் அது மிகையாகாது. எப்போதும் கற்பாறைச் சுவரானது ஓவியம் வரைவதற்கு ஏற்றதாககக் காணப்படமாட்டாது. எனவே, அதன் மேற்பரப்பில், ஓவியம் வரைவதற்கு ஏற்ற விதமாக, சாந்து பூசி ஒப்பமாக்கியுள்ளார்கள். இச்சாந்தினைத் தயாரிப்பதற்கு மணல், தும்பு, தேன், தவிடு, மாட்டுச்சாணம், வெண்களிமண், முட்டை வெண்கரு, தாவரப் பிசின், சுண்ணாம்பு போன்றவற்றைக் கலந்து சாந்துக் கலவையைத் தயாரித்துள்ளனர். பூசி மெழுகிய சுவர் கண்ணாடி போல் பளபளப்பாகக் காணப்படும். இச்சாந்துக்கலவை காய்வதற்கு முன்பே உடனடியாக இரேகைகளால் உருவங்கள் வரையப்பட்டு பின்பு அவற்றிற்கு நிறந் தீட்டப்பட்டுள்ளதாக பேராசிரியர் செனரத் பரணவிதாண என்பவர் கூறுகின்றார். எனவேதான் இவ் ஓவியங்கள் நீண்ட காலம் நிலைத்து நிற்பதாக கூறுகின்றார். இதனை நிரூபிப்பதற்கு ஓவியங்களின் இடையே தேவையற்ற கோடுகள் தெளிவற்றுக் காணப்படுவதாகக் கூறுகின்றார். ஈரச்சாந்தின் மேல் வரைந்ததினால் இக்கோடுகளை அழிக்க முடியாது விடப்பட்டிருக்கலாம் எனக் கூறுகின்றார். மாணவர்களே கவனியுங்கள், இவ்வாறு சுவரில் பூசப்பட்ட ஈரமான சாந்தின் மேல் அதன் ஈரம் காய முன்பே கனிப்பொருட்களிலான வர்ணம் கொண்டு ஓவியம் வரையும் நுட்ப முறையினை ஈரச்சுதை ஓவிய முறை அல்லது பிரஸ்கோ புவனோ நுட்ப முறை என அழைப்பார்கள். இதைப் போன்று உலர்ந்த சாந்தின் மீது கனிபொருட்களிலான வர்ணங்கள் கொண்டு வரையப்படும் முறையினை பிரஸ்கோ சிகோ அதாவது உலர்சுதை ஓவியமுறை என அழைக்கப்படும். 

மரபு அல்லது கலைப்பாணி 


சிகிரியா ஓவியங்கள் தொல்சீர் கலை மரபு அல்லது செந்நெறிக் கலை மரபிற்குரிய கலைப்பாணி இயல்புகளைக் கொண்டுள்ளதாக ஆய்வாளர் பேராசிரியர் சேனக்க பண்டாரநாயக்க என்பவர் கூறியுள்ளார். இந்த செந்நெறி கலைமரபு அல்லது தொல்சீர் கலைமரபின் பண்புகள் பற்றிப் பார்ப்போமானால், ஓவியத்தின் சிறப்புத் தன்மை, உருவங்களின் இயற்கையான தன்மை என்பன வெளிப்படுத்தப்பட்டிருத்தல், மென்மையான வர்ணப் பிரயோகம் செய்யப்பட்டிருத்தல் என்பவற்றுடன் திட்டவட்டமாக விடயப்பொருளினை எடுத்துக்காட்டுவதாகவும் இந்த செந்நெறிக் கலை மரபிற்குரிய ஓவியங்கள் காணப்படும். இதைவிட இதன் சிறப்பம்சமாக அமைவது ஒத்த தனிவர்ணச் சாயல்களால் ஓவியம் முழுவதற்கும் வர்ணம் தீட்டப்பட்டிருப்பது ஆகும். ஆகவே இந்தப்பண்புகள் சிகிரியா ஓவியங்களிலும் காணப்படுவதால் சிகிரியா ஓவியங்கள் தொல்சீர் கலை மரபு அல்லது செந்நெறிக் கலை மரபிற்குரிய கலைப்பாணியைக் கொண்டதாக கூறப்படுகிறது. எனினும், இந்த சிகிரியா ஓவியங்களின் பாணி மற்றும் பெண்களின் ஓவியங்கள் தொடர்பாக அறிஞர்களால் நீண்டகாலமாகப் பல்வேறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
 

சிகிரியா ஓவியங்கள் பற்றி அறிஞர்களின் கருத்து :


அறிஞர்களான எச்.சீ.பி.பெல் மற்றும் ஆனந்தகுமாரசாமி:;
சிகிரியா ஓவியங்கள் இந்தியாவின் அஜந்தா ஓவியங்கள் பாக்குகை ஓவியங்கள் சித்தன்னை வாசல் ஓவியங்களினை ஒத்துள்ளதாக அல்லது அதன் தொடர்ச்சியான ஓவியங்கள் என்ற  கருத்துக்களை முன்வைக்கின்றனர்.
 
பேர்சி பிரவுன் : சிகிரியா ஓவியங்கள் தெற்காசியக்கலையின் பௌத்த குருகுலமொன்றின் வெளிப்பாடு எனக் கூறுகின்றார்.
 
பெஞ்சமின் ரோலர: சிகிரியா ஓவியப்பாணி மூலம் இலங்கைப் பாரம்பரியக் கலையின் ஆரம்பகாலப் பண்புகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறுகின்றார். இதன் பின், சில ஆண்டுகளின் பின்னர் ஆய்வு செய்த பிலிப் ரவுசன் என்பவர் அஜந்தா ஓவியங்கள் மற்றும் இந்திய உபகண்டத்தில் காணப்படும் ஓவியங்களைவிட சிகிரியா ஓவியங்கள் வேறுபட்டுக் காணப்படுவதாக கூறினார். இக்கருத்தினை பிற்காலத்தில் இலங்கையின் வரலாற்றாசிரியர்களான நந்ததேவ விஜேசேக்கர, சிரி குணசிங்க, அல்பர்ட் தர்மசிறி போன்றவர்களும் ஆதரித்தனர்;. 
இவர்கள் தென்னிந்திய கலைமரபின் சாயலோடு அமைந்த, இலங்கைக்கு உரித்தான ஒரு தனித்துவமான கலைமரபாக இதனைக் குறிப்பிடுகின்றனர். 

சிகிரியா ஓவியத்தின் தளம் மீதான உருவப்பயன்பாடு மற்றும் விடயக் கருப்பொருள்


        சிகிரியாச் சித்திரங்களின் பிரதான விடயக்கருப்பொருளாக இருப்பது பெண் உருவங்கள் ஆகும். வெ வ்வேறு மெய்நிலைகளில் இருக்கும் பெண் உருவங்கள் தனியுருவங்களாகவும், சோடிகளாகவும் தெளிவான வர்ணத்தில், முப்பரிமாணப் பண்புகளுடன் வரையப்பட்டுள்ளன. 


இங்குள்ள எல்லாப் பெண் உருவங்களினதும், இடுப்பிற்கு மேற்பட்ட பகுதியே, வரையப்பட்டுள்ளது. உருவத்தின் கீழ்ப்பகுதி முகில்களால் மறைக்கப்பட்டதைப் போல் காட்சியளிக்குமாறு வரையப்பட்டுள்ளது. சகல உருவங்களும் சற்று அல்லது முழுமையாகத் திரும்பி நிற்பதைப் போன்று வரையப்பட்டுள்ளது. நேராக முன்னே பார்க்கும் உருவம் எதுவும் இங்கு வரையப்படவில்லை. இவர்கள் பூத்தட்டுக்கள், பூக்கொத்துக்கள், நீர் தெளிக்கும் கெண்டி ஆகியவற்றை கையில் ஏந்தியுள்ளனர். இவர்கள் சிலர் மலர்த்தட்டுக்களை வைத்திருக்கின்றார்கள். இன்னும் சிலர் மலர்;களை அலர்திக் கொண்டும் மலர்களைத் தூவிக் கொண்டும் இருப்பது போன்றும் வரையப்பட்டுள்ளது. இவர்களின் கைகளில் தாமரை, அல்லி, நீரோற்பலம் ஆகிய மலர்கள் காணப்படுகின்றது. 


இப்பெண் உருவங்களில் சோடியாகவுள்ள உருவங்களில்; ஒன்று இருண்ட வர்ணத்தில் வரையப்பட்டுள்ளது. மற்றையது பொன் மஞ்சள் நிறத்தில் காட்டப்பட்டுள்ளது. இதில் பொன்; மஞ்சள் நிறத்தில் இருப்பது அரசியென்றும் இருண்ட நிறத்தில் உள்ளது பணிப்பெண் உருவமென்றும் கருதப்படுகின்றது. பிரதான உருவங்களை விட வேறு பின்ணணிக் காட்சிகள் வரையப்படவில்லை.  

இங்கு எல்லாப் பெண்களும்; தலைகளை மறைக்கும் அளவிற்கு மலர்கள் அணிந்து காணப்படுகின்றனர். அத்துடன், அவர்களின் தலைகளில் பெறுமதியான கிரீடம் சூட்டப்பட்டுள்ளது. இரத்தினம் பதிக்கப்பட்ட பட்டிகள் அணிந்து காணப்படும் இப் பெண்களின் கைகளிலே முத்திரைகளும், தலையில் நெற்றித் திலகமும் முக்கிய இடம் வகிக்கின்றது. காதுகள் தொங்கும் அளவிற்கு தங்க ஆபரணங்களால் அலங்கரித்திருக்கிறார்கள். இவ் ஆபரணங்கள் ஒன்றையொன்று ஒத்தவையாகக் கண்ணுக்குத் தென்பட்டாலும் அவை எந்த இரண்டும் ஒன்றை ஒன்று ஒத்தவை அல்ல. இப்பெண்ணுருவங்களில் சில வெறும் மேனியாகவும் சில இறவுக்கை அணிந்தும் காணப்படுகின்றது. இடுப்பிற்கு கீழ்ப்பட்டபகுதி ஆடையானது பல கோலவடிவ மடிப்புக்களைக் கொண்டுள்ளது. இவ்வாறு இந்த ஓவியங்களில் தலை, காது, கழுத்து என்பன ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளமை ஒரு சிறப்பான அம்சமாகக் காணப்படுகிறது. 

சிகிரியா பெண் உருவ ஓவியங்களில் காணப்படும் பாவ வெளிப்பாடு 


  ஓவியர் ஒவ்வொரு உருவத்திற்கும் அதற்கேயுரிய பாவவெளிப்பாட்டுப் பண்புகளை உள்ளடக்கி வரைந்துள்ளதைப் பார்க்க முடிகின்றது. கைகள்,கைவிரல்களின் முத்திரைகள் ஒவ்வொன்றும் வேறுபட்டவையாகக் காணப்படுகிறது. சிறப்பாக கையின் குறியீட்டுத் தன்மை மூலம் ஆழ்ந்த கருத்து உணர்த்தப்படுகின்றது. இது இலங்கை இந்திய பௌத்த சமய ஓவியங்களில் காணப்படும் சிறப்பம்சம் என சுட்டிக்காட்டப்படுகிறது.  
    உடல்நிலை வெளிப்பாடுகளும் ஒன்றுக்கொன்று வேறுபட்டதாக வரையப்பட்டுள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது. பெண் உருவங்கள் மிக உணர்வுபூர்வமான பார்வையுடன் வரையப்பட்டுள்ளது. பெரும்பாலான உருவங்களின் பார்வை கீழ் நோக்கியதாக அமைந்துள்ளது. 

    சிகிரியாக் கலைஞனால் வரையப்பட்ட இப்பெண் உருவங்கள், இயற்கை அமைப்பில் இருந்து மேம்பட்ட அழகைக் கொண்டுள்ளன. அதாவது, இலக்கியக் கவிஞர்களால் வர்ணிக்கப்படும் பெண்ணுருவை, ஓவியர்கள்;, ஓவியத்தின் ஊடாக வெளிப்படுத்துவதற்கு, மிகுந்த முயற்சி எடுத்துள்ளனர். சிகிரிய பெண்களின் உருவங்களை, நாம் நன்றாக அவதானிக்கும் போது, கலை இரசனையுடன் கூடிய, கவிதை நயத்தை வெளிப்படுத்துவதனைக் காணலாம். இலக்கியக் கவிஞன் தனது கருத்துக்களை தூரிகையால் வெளிப்படுத்திக் காட்டியுள்ளான் எனக் கூறலாம். ஏனெனில், கவிஞர்களினால் வர்ணிக்கப்படும், பெண்களின் மென்மையான மேனியழகு, நளினங்கள், சந்தங்கள் என்பவற்றை சிறப்பாக வெளிப்படுத்த முயற்சி செய்யப்பட்டுள்ளது எனக் கூறலாம். அதாவது, பெண்களின் இலட்சிய அழகினை காட்ட கலைஞர் முயன்றுள்ளனர். உதாரணமாக சிற்றிடை, அகன்ற இடுப்பு, மிகைப்படுத்தப்பட்ட மார்பகங்கள் புன்னகை தவழும் தடித்த உதடுகள், காதுவரை செல்லும் இமைகள், நீண்ட மீன் போன்ற கண்கள், நீண்ட எடுப்பான மூக்கு, மென்மையான விரல்களின் அபிநயச் சிறப்பு என்பன உயிர்த்தன்மையுடன் வரையப்பட்டு பெண் அழகின் சிருங்காரத்தன்மை இதனூ;hக வெளிப்படுத்தப்பட்டுள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது. 

இரேகைப் பிரயோகம் மற்றும் வர்ணப்பிரயோகம் 

    சிகிரிய ஓவியரின் கோடுகள் அமைக்கும் முறை மிகவும் சிறப்பானது. ஓவியர் சுதந்திரமாகக் கோடுகளை அமைத்து, உடைந்த கோடுகள், மெல்லிய கோடுகள், அகலமான கோடுகள் என்று, பொருத்தமான இடங்களில் அவற்றை வரைந்து சிறப்பாகக் அமைத்துள்ளார்;. இதனால், உருவங்களின் முப்பரிமாணத்தன்மை, பருமன் என்பனவற்றை துல்லியமாகக் காட்டியுள்ளார். எனவே, சிகிரியா ஓவியங்களின் கோடுகள், உயிர்ப்புள்ளதாக இருப்பதுடன், கருத்து வெளிப்படுத்தும் துறையிலும் உயர்ந்துள்ளது என்பது, விமர்சகர்களின் கருத்தாகும். உருவங்களைச் சுற்றிக் காணப்படும் இரேகைகள், துரிதத்துடனும் இலயத்துடனும் வரையப்பட்டுள்ளது.


வர்ணப்பிரயோகம்
 


சிகிரியா ஓவியங்களுக்குப் பயன்படுத்தப்பட்ட வர்ணங்கள், தற்போதும் பிரகாசமாகக் காட்சியளிக்கின்றது. சிவப்பு, நீலம்,மஞ்சள், கபிலம் என குறிப்பிட்ட சில வர்ணங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. வெள்ளையும் கறுப்பும் மிகக் குறைந்த அளவிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வர்ணங்கள், இயற்கையாகப் பெறப்பட்ட கனிபொருட்களைக் கொண்டே தயாரிக்கப்பட்டுள்ளன. இங்கு 'லபிஸ்லசுலி' எனப்படும் கனிப்பொருளை உபயோகித்து நீலம், பச்சை ஆகிய வர்ணங்கள் தயாரித்துள்ளதாகக் கருதப்படுகிறது. இக்கனிப்பொருள் ஆப்கானிஸ்தானின் வடகிழக்குப் பகுதியைச் சேர்ந்த பதக்ஷான் எனும் பிரதேசத்தில் இருந்து, தருவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நிறக்கரைசலைத் தயாரிக்கும் போது விளாங்காய் அல்லது முட்டை வெள்ளைக் கரு பயன்படுத்தப்பட்டதாக, கூறப்படுகின்றது. இந்நிறங்கள், இன்று வரை மாற்றமுறாமல் இருப்பதைக் கொண்டு ஓவியரின் நிறத் தயாரிப்புத் திறமை தெளிவாகின்றது. 



இருந்தாலும், சிகிரியா ஓவியங்கள் 1967.09.14 அன்று சில விஷமிகளால் தார்பூசப்பட்டு நாசம் செய்யப்பட்டன. ஆனாலும், பின்னர், இதனைப் பழைய பண்புகளுடன் திருத்தியமைத்தவர் உரோமில் அமைந்துள்ள பண்பாட்டு கலாசார ஆவணங்களைக் கற்றறியும், மற்றும் பாதுகாக்கப்படும் சர்வதேச நிலையத்தைச் சேர்ந்த, இத்தாலிய ஓவிய நிபுணர் கலாநிதி லூன்சியானனோ மரன்சி ஆவார்.

சிகிரியா ஓவியங்களில் வரையப்பட்டுள்ள பெண்கள் பற்றி அறிஞர்களின் கருத்துக்கள்

பேராசிரியர் செனரத் பரணவிதான :
இவர் வரலாற்று நூலான சூலவம்சத்தில் குறிப்பிடப்பட்ட கூற்றான காசியப்ப மன்னனன் சிகிரியாவில் செல்வத்திற்கும் அதிகாரத்திற்குமான அதிபதியான குபேரனின் 'ஆலக்கமந்தாவ' என அழைக்கப்படும் அழகாபுரியாவைப் போல் அமைத்து வாழ்ந்தான் எனவும், இவ் ஓவியங்கள் அதில் ஓர் அங்கம் மட்டுமே எனவும் கூறுகிறார். மேற்படி விடயங்களை அடிப்படையாகக் கொண்டு இப்பெண் ஓவியங்கள் குபேரனின் இரண்டு பெண் பிள்ளைகளான மேகலதா எனப்படும் முகில்பெண்ணும், விஜ்;ஜூலதா எனப்படும் மின்னல் பெண் எனவும் கூறுகின்றார். இதில் நீலநிறப் பெண்கள் முகிற்பெண்கள் என்றும் தங்க நிறப் பெண்கள் மின்னல்ப் பெண்கள் எனவும் பரணவிதான இனங்காட்டியுள்ளார்.

கலாயோகி ஆனந்த குமாரசுவாமி :
இந்த சிகிரியா பெண் ஓவியங்களில் தேவகன்னியர்கள் வெளிக்காட்டப்படுவதாக குறிப்பிடுகிறார். இதற்கு ஆதாரமாக எல்லா பெண் உருவங்களின் கீழ்ப்பகுதியும், முகில்களில் இருந்து வெளிப்படுவது போல், வரையப்பட்டிருப்பது, கைகளில் மலர்கள் ஏந்தியிருத்தல், ஆகிய விடயங்களை அடிப்படையாகக் கொண்டு, இப் பெண்ணுருவங்கள் தேவகன்னியர்கள் எனக் கூறுகின்றார். 

மாட்டின் விக்கிரமசிங்க :
 கருத்துப் படி இவை நீரில் விளையாடிக் கொண்டிருக்கும் காசியப்பமன்னின் அந்தப்புரத்துப் பெண்கள் எனக் கூறுகின்றார். அரச மாந்தர் பூங்காவில் விளையாடி களைப்புற்றிருந்த பின்னர் நீராடுவர் என இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

அபய ஹவாவசம:
காசியப்பமன்னனின் இரு புதல்விகளான போதி, உப்பலவன்ன போன்றவர்களின் பல வேடங்கள் வெளிக்காட்டப்படுவதாக கூறுகின்றார்.


காசியப்பன் காலத்துக்கு முற்பட்ட கால சிகிரியாவின் ஓவியங்கள்

    காசியப்பன் காலத்து சிகிரியா ஓவியங்களை விட, சிகிரியா குன்றின் அடிவாரத்தில், புத்தபிக்குகள் வாழ்ந்ததாகக் கூறப்படும் குகைகள் மூன்றில் காசியப்பன் காலத்திற்கு முற்பட்ட காலத்து ஓவியப்பகுதிகள் இருப்பதையும், காணக்கூடியதாக உள்ளது. 
1. தெரணியகல குகை 
2. நாகபடக்குகை 
3. ஆசனக்குகை அல்லது இருக்கைக்குகை என என மூன்று குகைள் உள்ளன.

 இவற்றில் பெரும்பான்மையான ஓவியங்கள் மிகவும் அழிவடைந்த நிலையிலேயே உள்ளன. 

1. நாகபடக்குகை
இது நாகபடக்குகை என அழைக்கப்படுவதற்கான காரணம், இதன் முகப்பு பாறை அமைப்பு நாகத்தின் தலையைப்போன்று அமைந்துள்ளதால், இக்குகையினை நாகபடக்குகை என அழைக்கப்படுகிறது. இக்குகையில் இருக்கும் ஓவியங்களாக எஞ்சியிருப்பது, கரை அலங்கார வடிவமைப்புக் கொண்ட பட்டியும், தாமரை வடிவ முத்திரைகளும் ஆகும். இதற்கு கேத்திர கணித வடிவமைப்பில் வட்ட வடிவம், நீள்சதுர வடிவம் என்பனவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.



2. இருக்கைக் குகை அல்லது ஆசனக்குகை 
இங்கு கல்லால் ஆன ஆசனம் ஒன்று காணப்படுவதால் இதனை ஆசனக்குகை என அழைக்கின்றனர். இந்த இருக்கைக் குகையில் அலங்காரத் தாவரங்கள் விரிவாக வரையப்பட்டுள்ளதோடு சிதைவடைந்த மனித உருவங்கள் இரண்டும் உள்ளன. 




3. தெரணியகல குகை அல்லது 7ம் குகை
இக்குகையினை ஆய்வாளர் தெரணியகல அவர்கள் கண்டுபிடித்து, ஆய்வு செய்தமையால் இதனை தெரணியகல குகை எனவும் அழைப்பார்கள். இக் குகையின் உட்கூரை மீது, சோடி சோடியாக, முழு உடலுடன் கூடிய, பெண் உருவ கூட்டத்தின் பகுதிகள் காணப்படுவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. 





மேற்கூறப்பட்ட குகை ஓவியங்களை பார்க்குமிடத்து, சிகிரியாக் குன்றின் வரலாறு என்பது பல காலகட்டத்திற்கு உரியவை என அறியமுடிகிறது.  

சிகிரியா பற்றிய வீடியோக்கள் கீழேயுள்ள லிங்க்கை கிளிக் செய்யுங்கள்.










கருத்துகள்